.எழுத்தாளர் பெருமாள் முருகன் தனியொருவராக மாவட்ட வருவாய் அலுவலர் முன் பேச்சுவார்த்தைக்காகக் காவல் துறையினரால் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட வேளையில், அந்த வளாகத்தில் பல்வேறு சாதிய அமைப்புகள் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, உள்ளே நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களில் 30 பிரதிநிதிகளை மட்டுமே அறைக்குள் வருமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதித்தார்.
பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க யாருமே இல்லை. தற்போது போராட்டம் நடத்தும் அமைப்புகள், வழக்கு தொடுப்போர் இவர்களில் யாராவது ஒருவர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகப் பேச்சுவார்த்தையில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அங்கே போய் நின்றிருந்தால், மாவட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுக்கு வாய்ப்பு இருந்திருக்காது.
யாருமே இல்லாத நிலையில்தான், "என்ன வேண்டுமானாலும் எழுதி நீட்டுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்' என்று மனவேதனையுடன் கையெழுத்திடும் சூழலுக்குப் பெருமாள் முருகன் தள்ளப்பட்டார். பெருமாள் முருகன் எடுத்த முடிவுக்கு, சாதிய அமைப்புகள் மட்டுமல்ல, அந்த நேரத்தில் துணை நிற்காத அனைவருமே காரணம். இப்போது ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்துவதும், அறிக்கை விடுவதும்... என்னவொரு போலித்தனம்!
ஓர் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட இந்தக் கதியை விமர்சனம் செய்ய, சென்னை புத்தகக் காட்சியில் அனுமதியில்லை. குறைந்தபட்சம், திருச்செங்கோடு கடையடைப்புக்கு இணையாக, புத்தகக் காட்சியை ஒருநாள் அடைத்து வைத்து எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அதையும் செய்யத் தவறிவிட்டோம்.
இப்போது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த மனுவை விசாரிக்க, பாதிப்புக்குள்ளான பெருமாள் முருகனின் கருத்தையும் அறியாமல் தீர்ப்பு வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியிருப்பதுடன், பெருமாள் முருகனை ஒரு மனுதாரராக சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த மனுவில்கூட, எதை முன்னிலைப்படுத்த வேண்டுமோ அந்த விவகாரங்களை விடுத்து, மற்ற விவகாரங்களையே முன்வைத்திருப்பதால், இந்த மனு எந்த அளவுக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்படும் என்பது தெரியவில்லை.
ஏனென்றால் மனுவில் இருக்கும், "மாவட்ட நிர்வாகத்தின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது. எனவே, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்ய வேண்டும்' என்ற வாசகங்களே போதுமானவை இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட வருவாய் அலுவலருக்கும் ஒரு நீதிபதிக்கு இருக்கும் அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரை நிர்வாக நடுவர் (Administrative Magistrate) என்றும், மாவட்ட வருவாய் அலுவலரை மாவட்ட நிர்வாக கூடுதல் நடுவர் என்றும் கூறுவர். அவர்களுக்கு நீதிமன்ற நடுவரை (Judicial Magistrate) போன்றே நியாயம் வழங்கும் அதிகாரம் இருக்கிறது.
ஒரு மாவட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் நடந்தால் அவர்கள்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில் மாவட்ட நிர்வாக நடுவரின் முடிவுக்கு இரு தரப்பும் கட்டுப்பட்டாக வேண்டும்.
உதாரணமாக, ஒரு சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் இரு சமூகங்களுக்கு இடையே தகராறு என்றால், நிர்வாக நடுவர் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டாக வேண்டும். ஒரு மத ஊர்வலம் குறிப்பிட்ட தெரு வழியாக போவதில் தகராறு என்றால், நிர்வாக நடுவர்தான் உடனடியாகத் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவார். அவர் நடத்தும் பேச்சுவார்த்தை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று சொல்ல முடியாது.
அதேபோன்று, ஓர் அவதூறு சுவரொட்டியை அச்சிட்ட நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கவும், அதன் அச்சக உரிமத்தை ரத்து செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது. அவரது முடிவு கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று குற்றம் சாட்ட முடியாது. வேண்டுமானால், அந்த முடிவில் உடன்பாடில்லை என்று மேல்முறையீடு செய்யலாம். ஆனால், சட்டத்துக்குப் புறம்பானது என்று சொல்ல முடியாது.
மனுவில் முன்னிலைப்படுத்த வேண்டிய விவகாரங்கள் இரண்டுதான். முதலாவது, இரண்டு தரப்புகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், தனித்தனியாக நடத்தியதாக பெருமாள் முருகனுடன் இருந்த வழக்குரைஞரே பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மாவட்ட நிர்வாகம் ஏன் அவ்வாறு செய்தது? இரு தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்படவில்லையே, அது ஏன்? இரண்டாவது, பெருமாள் முருகன் எழுதிய நூல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்ப்பு ஏற்படக் காரணம் அதன் பின்னணியில் சில அமைப்புகள் செயல்பட்டிருப்பதுதான். ஆகவே, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இதைத்தான் நீதிமன்றத்தில் கோரியிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, இதை கேட்க வேண்டியவர் பெருமாள் முருகன் மட்டுமே!
பெருமாள் முருகனின் கருத்துடன் உடன்படாதவர்கள் மாற்றுக் கருத்தைக் கூறலாம், அவரது நோக்கத்தை விமர்சிக்கலாம், உரிமை இருக்கிறது. ஆனால், பெருமாள் முருகன் தனது கருத்தைக் கூறுவதைத் தடுப்பதற்கோ, அவரது கற்பனைக்குக் கடிவாளம் போடுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. இறை மறுப்பையே ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் இந்து சமுதாயம் மட்டுமே என்பதை, பெருமாள் முருகனை இந்து மதத்தின் பெயரில் விமர்சிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.