வல்லுறவு வழக்குகளில் மென்மையான அணுகுமுறை கூடாது; இத்தகைய வழக்குகளில் சமரசத்துக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ ஒருபோதும் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இவ்வேளையில் மிகவும் இன்றியமையாதது.
வல்லுறவுக் குற்றவாளி, தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக சமரசம் பேசுவதென்பது, அப்பெண் மீதான நெருக்கடி தரும் உத்தி என்று கூறியுள்ள நீதிமன்றம், குற்றவாளியுடன் சமரசமாகப் போவதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு உரிமை இல்லை என்றும், ஒரு பெண்ணின் கண்ணியம் என்பது அவரது அழியாத ஆன்மாவின் ஒரு பகுதி; அதற்குக் களங்கம் விளைவிக்கும் எதனோடும் சமரசம் செய்துகொள்வது அல்லது பணம் கொடுத்துப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அப்பெண்ணின் கௌரவத்துக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 7 வயதுச் சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளியின் தண்டனை ரத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. எனினும், வல்லுறவு வழக்கில் சமரசம் கூடாது என்று அச்சு, ஒளி ஊடகங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வரும் நாளில், இந்தத் தீர்ப்பு பல விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
இருப்பினும்கூட, வல்லுறவு தொடர்பான பல்வேறு வழக்குகளில் எழும் பல்வேறு வகையான அடிப்படைக் கேள்விகளுக்கும் இந்தத் தீர்ப்பிலேயே உச்சநீதிமன்றம் விரிவாகத் தெளிவுபடுத்தியிருந்தால், இந்திய நீதிமன்றங்கள் அனைத்திலும் இத்தகைய வழக்குகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த வழிகாட்டு நெறியாக அமைந்திருக்கும்.
கடந்த சில நாள்களாக அச்சு, ஒளி ஊடகங்களில் பேசப்படும் பொருளாக அமைந்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு. ஒரு வழக்கில், "குற்றவாளியின் வல்லுறவினால் பிறந்த குழந்தையின் நலன் கருதி, பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றவாளியும் சேர்ந்து வாழ்வது குறித்துப் பேசி முடிவு காணலாம்' என்று நீதிபதி தேவதாஸ் தனது தீர்ப்பில் ஆலோசனை தெரிவித்திருந்தார். அந்தத் தீர்ப்பு "வல்லுறவு வழக்கில் சமரசமாகச் செல்ல நீதிபதி தீர்ப்பு' என்பதாகப் பேசப்பட்டது.
குழந்தையின் நலன் கருதி சேர்ந்து வாழ்வது குறித்து பரிசீலிக்கலாம் என்பது ஆலோசனை மட்டுமே. உத்தரவு அல்ல. அது அந்தப் பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும், வல்லுறவினால் தனக்குப் பிறந்து தற்போது இரண்டாம் வகுப்பு பயிலும் தன் குழந்தையின் எதிர்காலம் கருதி, குற்றவாளி அவரது சொத்தை குழந்தையின் பெயருக்கு எழுதி வைத்தால் சமரசம் செய்யத் தயார் என்று பேட்டி அளித்தார். ஆனால், இந்த வழக்கில் சமரசம் ஏற்படவில்லை.
இதே நீதிபதி தேவதாஸ், மற்றொரு வல்லுறவு வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற குற்றவாளிக்குத் தண்டனைக் குறைப்பு செய்ய அனுமதித்தார். காரணம், வல்லுறவு செய்த குற்றவாளி தண்டனை பெற்றுச் சிறையில் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொண்டுள்ளார். அவர்களுக்கு 2 வயதில் மகள் இருக்கிறார். "என்னையும் என் குழந்தையையும் காப்பாற்ற தந்தைக்கு (வல்லுறவுக் குற்றவாளி) தண்டனை குறைப்பு செய்து விடுவிக்க வேண்டும் என்று மனைவி மனு செய்ததால் இத்தகையத் தீர்ப்பு வழங்கினார்.
மேற்சொன்ன இரு வழக்குகளிலும் மிக நுட்பமாகப் பார்த்தால், இது காதற்கால வல்லுறவு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு காமுகனின் வல்லுறவுக்கும், காதற்கால வல்லுறவுக்கும் வேறுபாடு இருக்கிறது. முதலாவது, ஒரு பெண் மீதான வன்முறை. இரண்டாவது, காதலன் திருமண உறுதியளித்து ஆசை காட்டி நிகழ்த்திய வன்முறை.
நிர்பயா வல்லுறவுக் கொலை வழக்குக்குப் பிறகு, நீதிபதி வர்மா அளித்த பரிந்துரைப்படி, பதினெட்டு வயது நிரம்பாத பெண்ணுடன் ஒருமித்தக் கருத்துடனான உறவும் வல்லுறவு என்றே பொருள் கொள்ளப்படுகிறது. தண்டனை அளிக்கப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் 18 வயது நிரம்பாமல் அல்லது நிரம்பியவர்களாக இருந்தபோதிலும்கூட, முதலில் பெண் கடத்தல் வழக்குப் பதிந்து, பின்னர் பெண் மீட்கப்பட்டவுடன் கடத்திச் சென்று வல்லுறவு கொண்டதாக வழக்கு மேலும் இறுக்கப்படுகிறது. காதலன் கௌரவக் கொலை செய்யப்படுவார் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் குடும்ப அழுத்தம் காரணமாகவும் பெண் தனது உண்மையான விருப்பத்தை நீதிமன்றத்தில் சொல்ல இயலாத சமூகச் சூழல் உள்ளது. இன்று நீதிமன்றத்தின் முன்பாக விசாரணைக்கு வரும் வழக்குகளில் இத்தகைய காதற்கால வல்லுறவு வழக்குகளே சரிபாதியாக இருக்கின்றன.
இத்தகைய காதற்கால வல்லுறவு, பெண்ணின் பெற்றோராலும் சட்டத்தாலும் வல்லுறவாகக் கருதப்பட்டு அந்த இளைஞரை சிறையில் அடைப்பதற்கும், அந்த இளைஞரை பெண்ணின் பெற்றோர் அல்லது சொந்த உறவுகளே கெüரவக் கொலை செய்வதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
வல்லுறவு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்துக்கும் உணர்வுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். குற்றவாளி காமுகனா, காதலனா என்பதை உறுதிப்படுத்தி, வல்லுறவு தண்டனையை வகைப்படுத்துவதிலும், குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குமான சமூக ஏற்றத்தாழ்வு, குடும்பத்தினரின் எதிர்ப்பு, இயல்பான திருமண பந்தத்துக்கு தடையான காரணிகள் அனைத்தையும் ஆராய்ந்து, அவர்கள் சேர்ந்து வாழ விரும்பினால் நீதிமன்றம் அனுமதிப்பதிலும் தவறு இருக்க முடியாது.
இப்போது வரதட்சிணைக் கொடுமைச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் போல, வல்லுறவுச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை வந்துவிடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
குழந்தைகளை அடம்பிடிக்க வைத்த விஜய்: மன உளைச்சலான விசிக நிர்வாகி புகார்
7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

