நாயர் பிடித்த புலிவால்!
அவசரக்காரனுக்கும் ஆத்திரக்காரனுக்கும் புத்தி மட்டு என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, பாரதிய ஜனதா கட்சித் தலைமைக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும். தில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும்,


அவசரக்காரனுக்கும் ஆத்திரக்காரனுக்கும் புத்தி மட்டு என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, பாரதிய ஜனதா கட்சித் தலைமைக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும். தில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும், பிகாரில் பா.ஜ.க.வின் ராஜதந்திரத்திற்கு நேர்ந்த பின்னடைவும் தனக்குச் சாதகமான ஏதாவது ஓர் அரசியல் நிகழ்வை ஏற்படுத்தியாக வேண்டும் என்கிற அவசரத்தையும், ஆத்திரத்தையும் பா.ஜ.க.வுக்கு ஏற்படுத்தியதன் விளைவுதான் ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணி. அதன் விளைவுகளை இப்போது பா.ஜ.க. சந்தித்துக் கொண்டிருக்கிறது.
காஷ்மீர் பிரிவினை கோரும் ஹுரியத் அமைப்பின் தலைவர் மஸரத் ஆலமின் விடுதலைக்கு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத்தை கண்டிப்பது எப்படிச் சரி என்று தெரியவில்லை. மஸரத் ஆலம் விடுதலைக்குக் காரணம் முதல்வர் முஃப்தி அல்ல. சட்டத்தில் இருக்கும் ஓட்டை.
42 வயது மஸரத் சமூக வலைதளங்களின் மூலம் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் பரப்புவதில் சமர்த்தர். 1990-இல் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்த மஸரத் 1991-இல் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அடுத்த பத்தாண்டுகள் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தார். மச்சில் போலித் துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தின் பின்னணியில் 2010-இல் எழுந்த மக்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவரும், கல்லெறிவதை ஒரு போராட்ட வழிமுறையாக்கியவரும் மஸரத்தான். அந்தப் பின்னணியில்தான் ஹுரியத்தின் தலைவரானார் மஸரத்.
அக்டோபர் 2010-இல் நான்கு மாதத் தீவிரத் தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட மஸரத் ஆலம் 2014-இல் விடுதலை செய்யப்பட்டு, உடனே மீண்டும் கைது செய்யப்பட்டார். காஷ்மீரத்தின் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒருவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக காவல் துறை துணை ஆணையர் கருதினால், எந்தவித விசாரணையும் இல்லாமல் அவரை இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும். 2008 முதல் மஸரத் ஆலம்
13 முறை மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். பத்து முறை நீதிமன்றம் இவருக்கு விடுதலை அளித்திருக்கிறது. ஆனால், அரசு இவரை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதி மீண்டும் சிறை பிடித்திருக்கிறது.
மேலே சொன்ன தகவல்களைக் கூறுவதால் மஸரத் ஆலம் சிறையில் தள்ளப்பட்டது தவறு என்றோ, அவர் பயங்கரவாதி அல்ல என்றோ அர்த்தம் இல்லை. ஆனால், சட்டப்படி பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் காலவரம்பு முடிந்தவுடன் அவர் மீண்டும் அதே சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அதை முஃப்தி அரசு பதவி ஏற்பதற்கு முன்பே, ஆளுநர் ஆட்சியில் செய்திருக்க வேண்டும். கவனக் குறைவாக இருந்தது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தவறே தவிர முதல்வர் முஃப்தியின் தவறல்ல.
முறையான, பலமான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் எந்தவொருவரையும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. மஸரத் ஆலம் மீது எந்தவிதக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அது முந்தைய ஒமர் அப்துல்லா அரசின் தவறு. இந்தப் பலவீனங்களை முதல்வர் முஃப்தி முகமது சயீது தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார், அவ்வளவே!
87 பேரைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல்வர் முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கள் மட்டுமே இருக்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு பகுதியிலும் உள்ள அத்தனை இடங்களையும் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்கிற முஃப்தி முகமது சயீதின் கனவு பலிக்கவில்லை. 15 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், 12 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று விட்டதால் முஃப்தி எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது.
இந்த நிலையில், காஷ்மீர் பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் மட்டுமே, பா.ஜ.க.வுடனான கூட்டணியை ஒரு கட்டத்தில் முறித்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்கும்போது, தான் எதிர்பார்க்கும் தனிப் பெரும்பான்மை சாத்தியம் என்பது முஃப்தியின் ராஜதந்திரக் கணக்கு. மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதன் மூலம், தீவிர இஸ்லாமிய சக்திகளின் அதிருப்தியைத் தான் சம்பாதித்துக் கொண்டிருப்பதும் முதல்வர் முஃப்திக்கு தெரியும்.
ஏற்கெனவே கெடு முடிந்து, சட்டத்தின் பார்வையில் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கும் மஸரத் ஆலத்தை விடுதலை செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்பதுதான் முதல்வர் முஃப்தியின் எண்ணம். மஸரத் ஆலத்தைத் தொடர்ந்து ஆஷிக், ஹுசைன், பக்டோ ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் விரைவிலேயே முதல்வர் முஃப்தியால் விடுவிக்கப்பட்டால் வியப்படைய வேண்டாம்.
காங்கிரஸ் வெளியிலிருந்து அளித்த ஆதரவில் தில்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி எப்படி காங்கிரûஸ தர்மசங்கடத்தில் ஆழ்த்தி, ஆதரவைத் திரும்பப் பெற வைத்து அரசியல் ஆதாயம் தேடியதோ அதே உத்தியைத்தான் முதல்வர் முஃப்தியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பா.ஜ.க.விடம் கையாளுகிறார்கள். முஃப்தியை காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளிடம் ஆதரவு கோர வைத்து பலவீனப்படுத்தாமல், ஆட்சி அதிகார மோகத்தில் அவரது மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டதன் விளைவை பா.ஜ.க. இப்போது அனுபவிக்கிறது.
வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள், வேறென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...