நாடு முழுவதும் கின்னஸ் சாதனைக்காக யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது அதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தன. பள்ளிகளில் சொல்லித் தரலாமா, வேண்டாமா? யோகா மதம் சார்ந்ததா, இல்லையா? என்கின்ற விவாதங்கள் சூடுபறந்தன. அவை யாவும் வேறு நிகழ்வுகளால் பின்னகர்ந்த பிறகு, தற்போது மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், "சத்யம்' திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சத்யம் என்ற ஆங்கிலச் சொல்லின் விரிவாக்கம் "யோகா மற்றும் தியானத்தின் அறிவியல் தொழில்நுட்பம்' (SATYAM- science and technology of yoga and meditation). இன்றைய சூழலில் இதற்கும்கூட அறிவுஜீவிகளிடையே கருத்து முரண்பாடும், விவாதங்களும் எழும். இருப்பினும்,அரசியல் சாய்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இதனை வரவேற்கவே செய்வர். ஏனென்றால், தியானம் என்பது அறிவியலுக்கு புரியாத புதிராக இருந்தாலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டது அல்ல. உலக நாடுகள் முழுவதிலும் யோகா, தியானம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், யோகா தோன்றிய பாரத தேசத்தில் இத்தகைய ஆய்வுகள் முதல்முறையாகத் தொடங்கப்படுகின்றன.
மேலை நாடுகள் இதுவரை செய்த ஆய்வுகள் அனைத்துமே மன ஒருமைப்பாடு, தியானம் தொடர்பானவை மட்டுமே. தியானம் குறித்த ஆய்வுகளிலும்கூட, உளவியல் சார்ந்ததும் (பாரா சைக்காலஜி), மனதின் மீஇயல் ஆற்றல் (எக்ஸ்ட்ரா சென்சரி பவர்) குறித்த ஆய்வுகளே அதிகம். இதில் ரஷியா போன்ற நாடுகள் மேலதிகமான ஆய்வுகள் நடத்தியுள்ளன.
எண்ணத்தை ஒருமைப்படுத்துவதால் அதற்கு திடஆற்றல் கிடைத்து, பொருள்களை நகரச் செய்தல், கண்ணாடி டம்ளரை உடைத்தல், ஸ்விட்ச் போட்டு விளக்கு எரியச் செய்தல் போன்ற மனதின் மீஇயல் ஆற்றல் குறித்த சோதனைகள் யாவும் மேலை நாடுகளில் நடத்தப்பட்டு அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாம் உலகப் போரில், தொலைஉணர், தொலைக் காணல் ஆகியவற்றிலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தகைய ஆய்வுகளுக்குப் பொள்ளாச்சி வேதாத்ரி மகரிஷி உடன்பட்டிருக்கிறார். தியானத்தின் போது எண்ண அலைகள் எவ்வாறு குறைகின்றன என்ற ஆய்வுக்குத் தான் உள் பட்டபோது, அந்தக் கருவி 15-20 வரையிலான எண்களைக் காட்டியதாகவும், இதுவரை இந்த அளவுக்குக் குறைவான எண்களை இயந்திரம் காட்டியதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதாகவும் அவர் சொற்பொழிவில் குறிப்பிட்டிருக்கிறார். எண்ணங்களை பூஜ்ய நிலைக்கு கொண்டு வந்தால் மனிதருக்கு உடல் மற்றும் மின்காந்த ஆற்றலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவதில்தான் மேலைநாட்டு ஆய்வுகள் அதிகக் கவனம் செலுத்தின.
மூளையின் மின்காந்த மாற்றங்களை வண்ணங்களாக மாற்றி, ஒருவர் மனதில் ஓடும் எண்ணம் நல்லவையா, தீயவையா என்பதை அதன் நிறத்தைவைத்துத் தீர்மானிக்க முடியும் என்கிற அளவுக்கு தற்போதைய நவீன ஆய்வுகள் வந்துள்ளன.
ஆனால், இந்தியாவில் இத்தகைய ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை. நடந்திருந்தாலும் குறிப்பிடத்தக்கவையாக அவை இல்லை. இதற்குக் காரணம், பதஞ்சலி யோக சூத்திரம் என்பதே இத்தகைய அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவான முடிவு என்ற கருத்து நம்மிடையே இருப்பதால், இதை மீண்டும் மேலைநாட்டு அறிவியல் இயந்திரங்களின் உதவியுடன் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை.
மேலும், பதஞ்சலி எடுத்த எடுப்பில், யோக சூத்திரத்தின் முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார்: எண்ணங்களின் பெருக்கம் இல்லாதொழிவதே யோகம் (யோக, சித்த விருத்தி நிரோத) என்கிறார். முடிவை முதலிலேயே தெரிவித்துவிட்டு, அதை எவ்வாறு எட்ட முடியும் என்பதன் படிநிலைகளாக நேர்மையான வாழ்வு, யோகாசனம், மூச்சுப்பயிற்சி, மனதை நோக்குதல், மன ஒருமைப்பாடு, தியானம், சமாதி என்று விளக்குகிறார். இதற்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யோகாசனம் செய்வதால் உடல் உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன. ஆனால், தியானம் மதம் சார்ந்ததுதானே என்று கேட்கலாம். எல்லா மதங்களிலும் தியானம் இருந்தாலும், தியானத்துக்கு எந்த மதச் சாயலும் கிடையாது.
இத்தகைய ஆய்வுகளால் என்ன பயன் என்று கேட்கலாம். இதுதான் பயன் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மன இறுக்கமும் மனச்சோர்வும் இன்றைய நவீன உலக வாழ்க்கையின் தவிர்க்கவியலா நெருக்கடிகள். இதைப் புரிந்துகொள்ளவும், தன்னைத்தானே இயற்கைக்கு தகவமைத்துக்கொள்ளவும் இந்த ஆய்வுகள் துணை புரியும்.
உதாரணமாக, ஓர் ஆய்வு முடிவை சொல்லலாம். கருத்தடை மாத்திரை அல்லது மாதவிடாய் தள்ளிப்போகச் செய்யும் மாத்திரை சாப்பிடும் காலங்களில் உங்கள் காதலரைத் தேர்வு செய்யாதீர்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. ஏன் அப்படி? இந்த மாத்திரைகள் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றத்தால் எண்ணமும் மாறுகிறது. வழக்கமான அழகியல் பார்வை, ஈடுபாடு, நோக்கு எல்லாமும் மாறுகிறது. அந்த நேரத்தில் அழகாகவும் பொருத்தமாகவும் தோன்றுபவர், மாத்திரைகளை நிறுத்திவிட்டு, பழையபடி வாழும்போது சீக்கிரமே பிடிக்காமல் போய்விடுவார் என்று விளக்குகிறது ஆய்வு. இதுபோன்று நிறைய, பயனுள்ள உண்மைகளை அறிவியல்பூர்வமாக உணரலாம்.
உலகுக்கு இந்தியா அளித்திருக்கும் மிகப்பெரிய சொத்து யோகா என்பது. அதைக் குறுகிய மத, அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதோ, நிராகரிப்பதோ, புத்திசாலித்தனமல்ல. நமது குழந்தைகள் அனைவரும் இதை உணரவும், பயன் பெறவும் "சத்யம்' திட்டம் உதவுமானால், அது வருங்கால சந்ததியினருக்கு நல்வழி காட்டியதாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

