தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்படும் "அழைப்பு முறிவு' (கால் டிராப்) ஒவ்வொன்றுக்கும் ரூபாய் ஒன்று வீதம், அதிகபட்சமாக ஒரு நுகர்வோருக்கு ஒரு நாளைக்கு மூன்று அழைப்பு முறிவுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. இத்திட்டம் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவையை மேம்படுத்தும் என்றோ, நுகர்வோருக்கு நியாயம் கிடைக்கும் என்றோ நினைத்துவிட வேண்டாம். ஏனெனில், டிராய் அறிவித்துள்ள இந்த இழப்பீட்டுத் திட்டத்தில், அழைப்பு முறிவு ஒவ்வொன்றுக்கும் ரூபாய் ஒன்று இழப்பீடு பெறத் தகுதியுள்ளவர் இரு நுகர்வோரில் யார் அழைத்தாரோ அவர் மட்டுமே!
அதாவது, அழைத்தவரின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் குறைபாடு காரணமாக அழைப்பு துண்டாகியிருந்தால் மட்டுமே இந்த இழப்பீடு தரப்படும். மறுமுனையில் அழைப்பைப் பெறுவோருக்கு (ரிசீவர்) இழப்பீடு கிடைக்காது. மறுமுனையில் இருப்பவர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறு அழைப்பு முறியக் காரணமாக இருந்தால், இழப்பீடு வழங்கத் தேவையில்லை.
இந்த இழப்பீடு என்பது, ஒரு நுகர்வோர் தனது செல்லிடப்பேசியிலிருந்து மற்றொருவரை அழைக்கும் போது, அவர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கோளாறினால் அழைப்பு துண்டானால் மட்டுமே கிடைக்கும். இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, அழைப்பு முறிவு ஏற்பட்டால், எந்த நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அழைப்பு துண்டிக்கப்பட்டது என்பது நுகர்வோருக்குத் தெரிய வழியில்லை.
ஒவ்வோர் அழைப்பு முறியும் போதும், நுகர்வோரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம், "இந்த அழைப்பு தடைபட்டதற்கு வருந்துகிறோம். இதற்கான இழப்பீடாக ரூபாய் ஒன்று உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது' என்று தெரிவித்தால் மட்டுமே, நுகர்வோர் தனக்கு நியாயம் கிடைத்ததாகக் கருத முடியும். ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக்கொண்டு நுகர்வோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இழப்பீட்டை தவிர்த்துவிடுவார்கள். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் இப்படியொரு இழப்பீட்டை அறிவித்ததற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தந்த புள்ளிவிவரங்கள் அல்ல காரணம். அழைப்பு முறிவு தொடர்பான புகார்கள் அதிகம் வரத்தொடங்கின. தற்போது இந்தியாவில் தொழில்நுட்பக் கோளாறால் அழைப்பு முறிவு சம்பவங்கள் 3%-க்கும் அதிகம் என்று தெரியவந்ததுதான் காரணம்.
அழைப்பு முறிவுக்கு தனியார் நிறுவனங்கள் சொல்லும் காரணங்கள் இவைதான்: இணைப்புகள் அதிகரித்துவிட்டன, ஆனால், அதிக அலைவரிசை கோபுரங்கள் அமைப்பதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இதுவரை 1,700 இடங்களிலிருந்து அலைவரிசை கோபுரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. அலைக்கற்றையின் பெரும்பகுதியை பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. தங்களுக்கு அளிக்கப்படும் அலைக்கற்றையின் விலையும் அதிகம் என்பதால், தொழில்நுட்பக் கருவிகளை மேம்படுத்தத் தேவையான கூடுதல் முதலீடுகள் செய்வது தாமதமாகிறது.
இவற்றை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் நியாயமானதாகத் தோன்றும். ஆனால், செல்லிடப்பேசி நுகர்வோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது 98 கோடி இணைப்புகள் உள்ளன. இந்த நிலையில், திடீரென அழைப்பு முறிவு பிரச்னை எழுவது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன.
2ஜி வழக்கில் அலைக்கற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதுதான் 2ஜி வழக்கின் அடிப்படை குற்றச்சாட்டு. ஆகவே, கடந்த சில ஆண்டுகளாக அலைக்கற்றை ஏலத்துக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஏலத்தொகை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக, நரேந்திர மோடி ஆட்சி அமைந்தபிறகு இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்ட ஏலத்தின் காரணமாக அலைக்கற்றை விலை மேலும் அதிகரித்துவிட்டது. அலைக்கற்றை விலையைக் குறைக்காத நிலையில், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முதலீடு சாத்தியமில்லை என்பதை அரசுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்கூட, இதுபோல அழைப்பு முறிவுப் பிரச்னை கிளப்பப்பட்டிருக்கலாம்.
"டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை நரேந்திர மோடி அரசு முனைப்புடன் கொண்டுவர இருக்கிறது. வை-ஃபை வசதிகள் அனைத்து நகரங்களிலும் பெருவாரியான கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில், "அழைப்பு முறியும் தேசம்' என்று வெளிநாடுகளில் இந்தியாவின் தோற்றத்தை கேலிக்குரியதாக மாற்றும் சதியாகக்கூட இருக்கலாம்.
அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு எழுகிறது என்பது உண்மையாக இருப்பினும், அலைக்கற்றை கோபுரங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பதும், அவற்றின் திறன் மேம்படுத்தப்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. பல அலைக்கற்றை கோபுரங்கள், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்போது அவையும் செயலிழந்து நிற்கின்றன.
கடந்த மே மாதம் முதல் குறுந்தகவல் கட்டணம் குறைக்கப்பட்டது. டிராய் நிர்ணயித்த அளவின்படி 40% குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த நிறுவனமும் அப்படிக் குறைத்ததாகத் தெரியவில்லை. அழைப்பு முறிவுக்கு ரூபாய் ஒன்று இழப்பீடு என்பதும் இப்படித்தான் முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.