பெண்மைக்கு மரியாதை!

இம்மாதத் தொடக்கத்தில் பேசிய விமானப் படைத் தளபதி அரூப் ராகா குறிப்பிடுகையில், போர்விமானங்களில் பெண் விமானிகளை அனுமதிப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். அதற்குக் கருத்துத் தெரிவித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், இதுபற்றி அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தது போலவே இப்போது மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கிவிட்டது.
Updated on
2 min read

சில முடிவுகள் காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டாலும்கூட வரவேற்புக்குரியவைதான். அதில் ஒன்று விமானப் படையின் அனைத்து பிரிவுகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும்
 மத்திய அரசின் முடிவு.
 ÷இம்மாதத் தொடக்கத்தில் பேசிய விமானப் படைத் தளபதி அரூப் ராகா குறிப்பிடுகையில், போர்விமானங்களில் பெண் விமானிகளை அனுமதிப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். அதற்குக் கருத்துத் தெரிவித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், இதுபற்றி அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தது போலவே இப்போது மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கிவிட்டது.
 ÷இதுவரை விமானப் படையின் சரக்கு விமானங்களை மட்டுமே பெண் விமானிகள் இயக்கிவந்தனர். இனி இந்திய விமானப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் சமவாய்ப்பு பெறும் நிலை உருவாகியுள்ளது.
 ÷உலக நாடுகள் பலவற்றிலும் போர்விமானத்தைப் பெண் விமானிகள் இயக்குவது மிக இயல்பானதாகவே இருக்கிறது. அரபு அமீரகத்தின் விமானப் படையில் கூட பெண் விமானிகள் இருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தவும் செய்கிறார்கள். ஆனால், எல்லையோரத் தீவிரவாதச் செயல்பாடுகளை ஒடுக்குவதிலும், உள்நாட்டில் நக்ஸலைட் போன்றோர் மீது தாக்குதல் நடத்துவதற்கும் போர்விமானங்களை பயன்படுத்தும் இந்திய விமானப் படை, இதுவரை பெண்களைப் பயன்படுத்தியதில்லை.
 ÷விமானப் படையில், ஓட்டுநர்களாக, ஹெலிகாப்டர் இயக்குபவர்களாக பல்வேறு பணிகளில் ஆண்களுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண் என நிரூபித்து வந்ததால் தற்போது போர்விமானங்களிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். ராணுவம், கடற்படை ஆகியவற்றிலும் பெண்கள் பல பிரிவுகளில் இடம்பெற்றாலும் போர்முனையில் தாக்குதல் நடத்தும் பொறுப்புகள் இதுவரை அவர்களுக்குத் தரப்படவில்லை. விமானப் படையின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, கடற்படை, ராணுவம் இரண்டிலும்கூடப் பெண்கள் சமவாய்ப்புகளைப் பெறுவது உறுதி.
 ÷தீயவற்றை அழிக்கும் சக்தியாக காளியை உருவகப்படுத்தும், துர்கா பூஜை நடக்கும் இந்தியாவில், முப்படையில் படையின் பின்புலத்தில் இயங்குபவர்களாக மட்டுமே இருக்கும் நிலைமைதான் பெண்களுக்கு இதுவரை இந்தியாவில் இருந்து வருகிறது. தற்போது, துர்கா பூஜை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், போர் விமானங்களில் பெண் விமானிகளைச் சேர்த்துக்கொள்வது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
 ÷போர்விமானங்களுக்கானப் பெண் விமானித் தேர்வு மற்றும் பயிற்சி அடுத்து வரும் ஆண்டில் தொடங்கும். விமானப் படை அகாதெமியின் பயிற்சிக் குழுவில் இடம்பெறும் பெண்களிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஓராண்டு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் 2017-ஆம் ஆண்டு முதல் போர் விமானங்களில் பணியமர்த்தப்படுவார்கள். விமானப்படையின் நிரந்தர சேவைப் பிரிவில் மட்டுமன்றி, குறுகியகாலச் சேவைக்கு வரும் பெண்களுக்கும் இத்தகைய வாய்ப்பைத் தருவது குறித்தும் மத்திய பாதுகாப்புத் துறை ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
 ÷போர்விமானங்களில் பெண் விமானிகளை அமர்த்துவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பியதாக கூறிய இதே விமானப்படை தளபதி அரூப் ராகா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் இதற்கான உடல்தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்குக் காரணம் விமானம் ஓட்டும் பயிற்சியைப் பல பெண்கள் நிறைவு செய்யவில்லை என்பதுதான்.
 ÷1993-ஆம் ஆண்டிலேயே விமானப்படையில் பெண்களைச் சேர்ப்பது தொடங்கிவிட்டது. இருப்பினும் பெண் விமானிகளாக பயிற்சியை நிறைவு செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. முதல்தொகுப்பில் 40% பேர் விலகி விட்டனர். தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்ட குழுக்களிலும்கூட பெண் விமானிகள் மிகச் சிலரே, பயிற்சியை நிறைவு செய்து விமானிகளின் அடையாளமாக தோள்களில் சிறகு சின்னத்தை அணிந்தனர்.
 ÷விமானப் படையில் இதற்கான பயிற்சிகள் கடுமையானவை. இதில் ஆண், பெண் பேதங்கள் இல்லாமல் பயிற்சியைப் பெற்றாக வேண்டும். முதல் கட்டமாக 80 மணி நேரம் பறக்க வேண்டும். இதில் தனியாக 25 மணி நேரம் பறக்க வேண்டும். அடுத்த கட்டப் பயிற்சியில் 95 மணி நேரம் பறக்க வேண்டும். இதில் 48 மணி நேரம் தனியாக பறக்க வேண்டும். அதற்கு அடுத்தது இரவில் தனியாக விமானத்தை ஓட்டுவது. இவர்கள் போர்விமானங்களை இயக்குவதென்றால் அதற்கான பயிற்சிகள் தனியாகவும், போர்ப்படைக் கருவிகளை கையாளும் திறன் குறித்த பயிற்சிகளும் பெற்றாக வேண்டும்.
 ÷1993-ம் ஆண்டு முதலாக, ராணுவத்தில் பெண்கள் சேர்க்கப்படத் தொடங்கிய போதிலும், மத்திய பாதுகாப்புத் துறையின் முந்தைய அமைச்சர் ஏ.கே. அந்தோனி நாடாளுமன்றத்தில் தெரிவித்த புள்ளிவிவரத்தின்படி, அதிகாரி (ஆஃபீஸர்) பதவியில் ராணுவத்தில் 1,214 பேர் (3.3%), கடற்படையில் 302 பேர் (3.9%), விமானப் படையில் 1,079 பேர் (10.4%) மட்டுமே உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இன்னும் சில நூறு பெண் அதிகாரிகள் முப்படைகளில் கூடுதலாக சேர்ந்திருக்கலாம், அவ்வளவே. ஆனாலும், எண்ணிக்கையில் பெண்கள் இன்னமும் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர்.
 ÷காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கை விமானப் படையைக் காட்டிலும் மிக அதிகம் என்றாலும் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவுதான். காவல் துறையின் உயர் பதவிகளிலும், ராணுவத்திலும் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கும் நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com