தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெற்றுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. முதலீடுகளுக்கு வலுவான தளம் அமைத்துள்ளது. நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டதைப்போல, ரூ.2.42 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டைக் கொண்டுவரும் தொழில் முன்மொழிவுகளைப் பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முதல் நாளே ரூ.2,568 கோடியில் மூன்று ஆலைகளைத் திறந்துவைத்துத்தான் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் தொடக்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்துக்கு உலக முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுக்கும் வேளையில், ஒரு மாநில முதல்வராகத் தனிப்பட்ட முறையில் இத்தகைய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவும், இவ்வளவு தொழில் நிறுவனங்களை ஒன்று திரட்டவும், இலக்கைத் தாண்டிய முதலீட்டைப் பெறவும் செய்திருப்பது, தமிழக முதல்வருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு கூடுதலாகத் தொழில் முதலீடு வருகின்றது என்பது ஒருபுறம் இருக்க, இந்த முதலீடுகளை தென் மாவட்டங்களை நோக்கித் திருப்பிவிடவும், இதற்காகக் கூடுதல் சலுகை அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 30 நாள்களில் தொழில் அனுமதி என்கின்ற அறிவிப்பு, தற்போது சென்னையை மையம் கொண்டுள்ள தொழில் வளர்ச்சியைத் தென் மாவட்டங்களுக்குப் பரவலாக்கும்.
இதன் மூலம் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவர். வேலைவாய்ப்பு என்றாலே சென்னை வந்தால்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவதன் மூலம் சென்னையில் மக்கள் நெரிசலை, வாகன நெரிசலை, தொழில் தேக்க நிலையை இயல்பான சூழலில் மாற்றி அமைக்க முடியும்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் (எச்.சி.எல்.) இந்த மாநாட்டில் குறிப்பிடுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் ரூ.6,600 கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். எச்.சி.எல். நிறுவனத்தில் பணிபுரியும் 1.10 லட்சம் தொழிலாளர்களில் 75,000 பேர் இந்தியர்கள், இவர்களில் 35,000 பேர் தமிழர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் இந்நிறுவனம் முழுமையாகக் காலூன்றும்போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது உறுதி.
ஏற்கெனவே ராமநாதபுரம் பகுதியில் 650 மெகாவாட் சூரிய வெப்ப மின் உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்துள்ள அதானி நிறுவனம், தற்போது ரூ.10,000 கோடி அளவுக்கு அனல் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதுவும்கூடத் தென் மாவட்டங்களில்தான் அமைக்கப்படும். இதேபோன்று சன் எடிசன் நிறுவனமும் சூரிய வெப்ப மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது. இதற்காக ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரையிலான முதலீடு செய்யவுள்ளது. இதேபோன்று பல்வேறு துறைகளில் பல நிறுவனங்கள் அளித்துள்ள தொழில் முன்மொழிவுகளைப் பட்டியலிட்டால் அவை விரிந்துகொண்டே போகும்.
மாநாட்டில் பங்கு கொண்ட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை - பெங்களூரு வழிமருங்குத் தொழில்பேட்டை (இன்டஸ்டிரியல் காரிடார்) திட்டம், குளச்சல் துறைமுக மேம்பாடு ஆகியன குறித்து அளித்துள்ள உறுதிமொழிகள் இதே வேகத்தில் செயலாக்கம் பெறுமெனில், இந்த முதலீடுகள் வந்து சேர்வதும் வேகமாக அமையும். மத்திய அரசு தொடர்பான அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வளவு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெறுமனே அடுத்த தேர்தலைச் சந்திப்பதற்கான பிரசார உத்தி என்று அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவதும், இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்று பலர் தங்கள் முகநூலிலும் கட்செவி அஞ்சலிலும் எதிர்க் கருத்தை முன்வைப்பதும், இந்த மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளின் படங்களையும், தொண்டர்களின் ஆட்டங்களையும் மட்டும் பதிவிட்டு அதன் தன்மையைக் குலைத்து, வெற்றியைக் கொச்சைப்படுத்தும் போக்கும் அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சியைவிடத் தங்கள் அரசியல் மனமாச்சரியங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போடுகின்றன.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களில் சிலவற்றால் தமிழக சுற்றுச்சூழல், மக்கள் நலவாழ்வு பாதிக்கப்படக் கூடும் என்பதாக இருந்தால், அவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி, அத்தகைய தொழில்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அறிக்கை வெளியிடலாம். ஆனால், இந்த மாநாட்டையே ஒட்டுமொத்த அரசியலாக்கப் பார்ப்பது அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாடன்றி வேறல்ல.
தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி நடந்தாலும் இந்த மாநாட்டின் விளைவாக வந்து குவியும் முதலீடுகளால் அடுத்த ஆண்டு இதே காலகட்டத்தில் பயன்பெறப் போவது தமிழகமும், தமிழர்களும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடு வந்து சேரும்போது, ஒரு கோடித் தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மட்டும் உறுதி என்பதற்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு கட்டியம் கூறுகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.