ரியோ முடிந்தது; இலக்கு டோக்கியோ!

ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் பந்தயம் நேற்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. நாம் ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் மட்டுமே வென்று திரும்பியிருக்கிறோம்.
Updated on
2 min read

ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் பந்தயம் நேற்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. நாம் ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் மட்டுமே வென்று திரும்பியிருக்கிறோம். 2012-இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் ஆறு பதக்கங்களை வென்ற இந்தியா இந்த முறை வெறும் இரண்டே இரண்டு பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது என்பது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் ஐயமே இல்லை.

நாம் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டோம் என்பதைவிட போட்டியிட்டோம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பதக்கங்களை வெல்லவில்லையே தவிர, பதக்கம் வென்றவர்களுக்கு சரியான போட்டி கொடுக்க நமது விளையாட்டு வீரர்களால் முடிந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் பந்தயத்தில் நமக்குப் பதக்கங்கள் கிட்டவில்லையே தவிர, நமது வீரர்கள் சர்வதேச அளவில் திறமைசாலிகள் என்பதைப் பதிவு செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவில், 118 வீரர்கள் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டது இதுதான் முதல் தடவை.

நமது பெண்கள் வில்வித்தைக் குழுவானாலும், துப்பாக்கி சுடும் குழுவானாலும் நூலிழையில்தான் பதக்கம் இழந்தார்கள். சானியா மிர்ஸாவும், ரோஹன் போபண்ணாவும் டென்னிஸில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிவரை சென்றார்கள். தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கத்தை இழந்ததை ஒட்டுமொத்த இந்தியாவும் கண்ணீர் மல்கப் பார்த்து விதியை நொந்து கொண்டது. நமது ஹாக்கி அணி

யினர், தங்கப் பதக்கம் வென்ற ஆர்ஜென்டீனாவை ஆரம்பச் சுற்றில் தோற்கடிக்கும் அளவுக்கு, தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், நாம் கலந்து கொண்டோம் என்பதைவிட போட்டியிட்டுத் தோற்றோம் என்பதைத்தான் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறப்பாகக் கருத வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம். ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 118 இந்திய வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், நம்மிடம் நிச்சயமாகத் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான பயிற்சியையும், உற்சாகத்தையும் நம்மால் முறையாக அளிக்க முடியவில்லை. புதிய திறமைகளை முனைப்புடன் அடையாளம் கண்டு, ஊக்குவித்து, தயார்படுத்தி ஒலிம்பிக் வீரர்களாக்க முடியவில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம், முறையான திட்டமிடலும், சரியான வழிகாட்டுதலும், போதுமான வசதிகளும் இல்லாமல் இருப்பது. விளையாட்டு என்பது தேசபக்தி, விளையாட்டு வசதி, வீரர்களுக்கு உற்சாகம் இவையெல்லாம் மட்டுமல்ல. அதற்குப் பணமும் மிக மிக முக்கியம். ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக, விளையாட்டு அமைச்சகம் ரூ.49.2 கோடி ஒதுக்கியது. அதில் டிசம்பர் 2015 வரை வெறும் ரூ.6 கோடி மட்டுமே செலவு செய்தது. ஜூலை 2016 வரை ரூ.25 கோடிதான் செலவு செய்திருக்கிறது. பிறகு எதற்காக ரூ.49.2 கோடி ஒதுக்கீடு?

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை வெறும் 2 கோடி பேர் மட்டுமே. ஒவ்வொரு ஒலிம்பிக் பந்தயத்திலும் சராசரியாக 50 பதக்கங்களை அந்த நாடு வெல்கிறது. விளையாட்டுக்காக அந்த நாடு செலவிடும் தொகை ரூ.700 கோடி. இதில் 80%, அதாவது ரூ.560 கோடி, ஒலிம்பிக்கிற்கு வீரர்களைத் தயார் செய்வதற்காக மட்டுமே செலவிடுகிறது.

இந்தியாவில் விளையாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.900 கோடி. அதில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது ரூ.600 கோடி,

எந்தவிதத்திலும் ஒலிம்பிக்கிற்கோ, சர்வதேசப் பந்தயங்களுக்கோ பயன்படாத ஆங்காங்கே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்காக செலவிடப்படுகிறது. விளையாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கும் ரூ.300 கோடி செலவிடப்படுகிறது. இதில் ஒலிம்பிக் பந்தயத்திற்கான பயிற்சிக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று தெரியவில்லை.

திறமைகளை அடையாளம் காணவும் ஊக்குவிக்கவும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் செலவிடப்படும் தொகை வெறும் ரூ.5 கோடி மட்டுமே. ரூ.300 கோடியையும் ஒலிம்பிக் பந்தயத்திற்குத் தயார்படுத்துவதற்காக செலவிடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலுமே, 20}க்கும் அதிகமான விளையாட்டுகளுக்குப் பகிர்ந்தளித்தால், ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெறும் ரூ.15 கோடி மட்டும்தான் ஒதுக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடுகளும்கூட, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் சம்பளத்துக்கே செலவாகிவிடும் என்பதுதான் நிஜம். மிச்சம் மீதியும் ஊழலில் வீணடிக்கப்படும்.

ஒலிம்பிக் பந்தயங்களில் அதிகமான பதக்கங்களைத் தட்டிக் கொண்டு செல்லும் அமெரிக்காவில் விளையாட்டுக்கு என்று தனி அமைச்சகம் எல்லாம் கிடையாது. இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரிட்டனிலும், அதற்கென்று அமைச்சர் இருந்தாலும், பி.பி.சி. வானொலியைப் போல, விளையாட்டு என்பது அரசின் அங்கமாக இல்லாத தன்னாட்சி அமைப்பாகத்தான் செயல்படுகிறது. இதில் அதிகார வர்க்கத்தின் தலையீடே கிடையாது.

இந்தியாவிலும் அதுபோல, விளையாட்டுக்கு நிதி ஒதுக்குவதோடு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரலாம் அல்லது வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்துக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஊக்குவிக்கலாம். விளையாட்டிலிருந்து அரசும் அரசியல்வாதிகளும் ஒதுங்கினாலேபோதும், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா "டாப் டென்' பதக்கப் பட்டியலில் இடம்பெறும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com