பெண்ணுக்கு அநீதி!

பெண்களுக்கு 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் வாக்குரிமையே வழங்கப்பட்டது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. 1881-இல் இங்கிலாந்தை அடுத்த "ஐல் ஆப் மேன்' என்கிற சிறிய தீவில்தான் முதன்முதலில் சொத்து வரி
Updated on
2 min read

பெண்களுக்கு 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் வாக்குரிமையே வழங்கப்பட்டது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. 1881-இல் இங்கிலாந்தை அடுத்த "ஐல் ஆப் மேன்' என்கிற சிறிய தீவில்தான் முதன்முதலில் சொத்து வரி கட்டும் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 1893-இல் நியூஸிலாந்தும், 1902-இல் பூர்வகுடிப் பெண்கள் அல்லாதவர்களுக்கு ஆஸ்திரேலியாவும் வாக்குரிமை வழங்கின. நார்வே (1913), ஸ்பெயின் (1931), பிரான்ஸ் (1944), இத்தாலி (1946), கிரீஸ் (1952) ஆகிய நாடுகள் 20-ஆம் நூற்றாண்டில்தான் பெண்களும் வாக்குரிமைக்கு உகந்தவர்கள் என்று ஏற்றுக் கொண்டன.
1920-இல் அமெரிக்கா, பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க முன்வந்தது. ஆனால், அப்போதும் கருப்பர் இனப் பெண்கள் வாக்குரிமை பெறவில்லை. அவர்கள் நாடு தழுவிய அளவில் எல்லா மாநிலங்களிலும் வாக்குரிமை பெற்றது 1965-இல்தான். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே, ஆண், பெண், ஜாதி, மதம் என்கிற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உறுதி செய்தது. இப்போது உலகிலுள்ள 189 ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கும் வாக்குரிமை தரப்பட்டுள்ளது.
வாக்குரிமை பெறுவதற்கே பெண்கள் இந்தப் பாடு பட்டாக வேண்டும் எனும்போது, சம உரிமையும், சம வாய்ப்பும் இப்போதைக்கு சாத்தியமல்ல என்பதில் ஐயப்பாடே வேண்டாம். உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கைப்படி, அதற்கு 170 ஆண்டுகளாகலாம் என்று தனது கணிப்பைத் திருத்தி எழுதியிருக்கிறது. அதாவது, இப்போது வாழ்கிற, பிறக்கின்ற பெண்கள் சம வாய்ப்பு என்கிற இடத்தைத் தங்களது வாழ்நாளில் எதிர்கொள்ளப் போவதில்லை.
அடிக்கடி விடுப்பு எடுக்காமல் பெண்கள் பணியாற்றுவதால் ஆண்டொன்றுக்கு ஆண்களைவிட சராசரியாகப் பெண்கள் 39 நாள்கள் அதிகம் வேலை பார்க்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், அவர்கள் ஆண்களைவிடக் குறைந்த ஊதியம் பெறுவது மட்டுமல்ல, தங்கள் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கான வாய்ப்பைப் பெறுவதும் குறைவாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களைவிடப் பெண்கள் தகுதி குறைந்திருப்பதோ, திறமையில் குறைவானவர்களாக இருப்பதோ அல்ல. அவர்கள் பெண்கள் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் தலைமைப் பொறுப்பு மறுக்கப்படுகிறது.
உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கையின்படி பார்த்தால், உலகத்திலுள்ள 95 நாடுகளில் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகரான எண்ணிக்கையில் - சில நாடுகளில் அதற்கு அதிகமாகவே - பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கிறார்கள். ஆண்களை விடவும் சிறப்பாகத் தேர்ச்சியும் பெறுகிறார்கள். அதனால், அவர்களது திறமையை சந்தேகிக்க முடியாது.
பெண்களுக்கான வேலைவாய்ப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாகக் கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, தொடக்க, இடைநிலைப் பள்ளி அளவில், மாணவர், மாணவியருக்கு இடையேயான இடைவெளி கணிசமாகக் குறைந்திருக்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டம் வந்தது முதல் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உறுதியாக்கப்பட்டிருப்பதும், பள்ளிக்கூடங்களில் சத்துணவு தரப்படுவதும் இதற்கு உதவியிருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் அதிக அளவில் பெண்கள் சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், பாதியில் படிப்பை நிறுத்துபவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவிகளாகவே இருக்கிறார்கள். ஒருவேளை படிப்பைத் தொடர்ந்தாலும்கூட, இடைநிலைக் கல்விக்குப் பிறகு உயர்நிலை வகுப்புகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவியரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடுகிறது. குறிப்பாக, சில வட மாநிலங்களில், கல்லூரியில் சேரும் மாணவியரின் எண்ணிக்கை 30 விழுக்காடுகூடக் கிடையாது என்கிற நிலைமை காணப்படுகிறது.
மாணவியர் கல்வியைத் தொடராமல் போக முக்கியமான காரணமாகக் கூறப்படுவது திருமணம். பாதுகாப்பில்லாத சமூகச் சூழல், படித்த பெற்றோர்களைக்கூட, விரைவில் தங்கள் பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுத்துத் தங்கள் கடமையை முடித்துக் கொள்ளத் தூண்டுகிறது. ஊரகப் பகுதிகளில், பெண்கள் கல்வி பெறுவது அவசியமல்ல என்கிற கருத்து இன்னமும் நிலவுகிறது.
திருமணமும் அதைத் தொடர்ந்து மிகவும் இள வயதில் தாய்மைப் பேறும் நிகழ்வது பெண்களின் உடல்நலத்துக்கு நல்லதல்ல என்கிறது மருத்துவ ஆய்வு. இதனால் பேறுகால மரணமும், சிசு மரணமும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உலகில் நிகழும் பேறுகால மரணங்களில் 17 விழுக்காடு இந்தியாவில் நடைபெறுவதாக 2013-இல் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், சிறு வயதில் குழந்தைப் பேறுதான்.
தேசிய அளவிலான ஆய்வுகளும், புள்ளிவிவரங்களும், இந்தியாவில் பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களிலுள்ள வளர்ச்சி அடையும் நாடுகளில் எல்லாம்கூட இதுதான் நிலைமை. வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்று பேசப்படுகிறதே தவிர, உண்மையில் அங்கு அவர்கள் கவர்ச்சிப் பொருளாகத்தான் கருதப்படுகிறார்கள்.
உலகிலேயே மிகவும் நாகரிகமான, வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே, பெண் ஒருவர் அதிபராவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனும்போது, ஆணுக்குப் பெண் நிகர் என்கிற நிலை உலகில் ஏற்பட 170 ஆண்டுகளல்ல, இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கும் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com