மருத்துவத்திற்கு அடிப்படை மருந்துகள். இந்திய மருந்து தயாரிப்புத் துறை, உற்பத்தியில் உலகின் மூன்றாவது இடத்திலும், விற்பனை வருவாயில் உலகின் 14-ஆவது இடத்திலும் இருக்கிறது. 2013 நிலவரப்படி நமது உள்நாட்டு மருந்து விற்பனையின் அளவு 13.8 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. சுமார் 93 ஆயிரத்து 480 கோடி). இந்த அளவுக்கு முக்கியமான ஒரு துறை எந்த அளவுக்குக் கண்காணிக்கப்படுகிறது, முறைப்படுத்தப்படுகிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.
இந்தியாவின் ஏழு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பரவலாக பயன்படுத்தப்படும் 27 மருந்துகள் தரக்குறைவாக இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் நுண்ணுயிர்க் கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்ஸ்), வலி நிவாரணிகள், இருமல் மருந்துகள், மனவியல் மருந்துகள், காய்ச்சல் மருந்துகள் போன்றவை அடங்கும். தவறான முகப்புச் சீட்டு (லேபிள்), குறிப்பிட்டிருக்கும் அளவில் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மருந்துப் பொருள்கள் இல்லாமல் இருப்பது, எந்த நோய்க்குப் பரிந்துரைக்கப்படுகிறதோ அந்த நோய்க்கான மருந்துகள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது போன்ற தவறுகள் அந்த 27 மருந்துகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.
வேடிக்கை என்னவென்றால், இந்த 27 மருந்துகளையும் தயாரித்து சந்தைப்படுத்தி இருப்பது 18 பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள். இவற்றில் சில பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் அடக்கம். சோதனை முடிவுகள் வெளிவந்து அந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மோசடி அம்பலமான பிறகும்கூட, மூன்று மருந்துகள் மட்டுமே விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. மற்றவை இப்போதும் விற்பனையில் உள்ளன.
மருந்துகளின் தரக்கட்டுப்பாடு என்பது இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாகத்தான் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் கருத்துப்படி, இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 5 விழுக்காடு மட்டுமே தரக்குறைவானவை. ஆனால், வேறு சில நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் முற்றிலும் மாறுபட்ட முடிவுகளைத் தெரிவிக்கின்றன. 2014-இல் "அசோசெம்' நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 25 விழுக்காடு மருந்துகள் தரக்குறைவானவையாகவும் போலியானவையாகவும் இருப்பதாகத் தெரிகிறது.
மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்த போதிய விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அவற்றின் தரத்தைப் பரிசோதிக்க நாடு தழுவிய அளவில் எல்லா மாநிலங்களிலும் சோதனைச் சாலைகள் அமைக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, போதுமான மருந்து கண்காணிப்பாளர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை.
மருந்து கண்காணிப்பாளர்கள், ஆங்கில மருத்துவத்துக்கான அலோபதி மருந்துகள் குறித்து சோதனை செய்வதுடன் ஹோமியோபதி மருந்துகள், ரத்த வங்கிகள், ஏன் அழகு சாதனப் பொருள்கள் வரை கண்காணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். வெவ்வேறு மருந்துகளுக்கு வெவ்வேறு மருந்துக் கண்காணிப்பாளர்களை நியமித்து அவர்களது எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்காதவரை, முறையான சோதனைகள் நடத்துவதோ, தவறு நடக்காமல் தடுப்பதோ இயலாது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு நமது நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 385 பில்லியன். இந்த நிலையில் இன்னமும்கூட, இந்தியாவில் இருக்கும் எல்லா மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த ஒட்டுமொத்தத் தகவல் திரட்டு இருக்கிறதா என்றால் இல்லை. நமது மருந்து கண்காணிப்பு அலுவலகங்கள் இன்னும்கூட முழுமையாகக் கணினிமயமாக்கப்படவில்லை. தரக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு அமைப்புக்கான ஆய்வகமும் இல்லை, அதிகார பலமும் இல்லை.
இத்தனையும் கடந்து, ஏதாவதொரு மருந்தில் தரக்குறைவு கண்டறியப்பட்டால், அந்த மருந்து தயாரிப்பாளர்களின் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் அது குறித்துக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், வெவ்வேறு உரிமங்களின் பேரில் பல்வேறு தயாரிப்பு ஆலைகள் நிறுவியிருக்கிறார்கள். மிகவும் அரிதான நிகழ்வாகத்தான் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது.
தரக்குறைவான மருந்துகளால் நோய் குணமாகாமல் தொடர்கிறது. நுண்ணுயிர் கொல்லிக்கான எதிர்ப்பு சக்தி நோய்க் கிருமிகளால் நோயாளிகள் மரணமடையக்கூட நேரிடுகிறது. இதுபோன்ற தரக்குறைவான மலேரியா காய்ச்சலுக்கான மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்பட்டதால்தான், மலேரியா கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து அந்த மருந்தே பயனற்றதாகிவிட்டது. ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காச நோய், தரமற்ற மருந்துகளால்தான் இப்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. இத்தனை ஆபத்துகள் இருந்தும் நமது அரசு இதுகுறித்த கவலை இல்லாமல் இருக்கிறது.
இந்தியாவில் உள்ள 35 மருந்துத் தயாரிப்பு தொழிற்சாலை
களின் தயாரிப்புகள் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பு, தரக்குறைவு காரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் 700 மருந்துகளைத் தடை செய்திருக்கிறது.
இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, தரமான மருந்துகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை அரசு உறுதி செய்தாக வேண்டும். சர்வதேச அளவில் தலைகுனிவு ஏற்படுவது இருக்கட்டும். நமது மக்களின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டுமே, அதற்காகவாவது அரசு விழித்துக் கொண்டு செயலில் இறங்க வேண்டியது அவசியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.