அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 21-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் ஜூலை 17}ஆம் தேதி நிலவரப்படி 27 கல்லூரிகளில் மட்டுமே 100% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்தக் கல்லூரிகளிலும் பெரும்பாலானவை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்.
மொத்தமுள்ள 527 கல்லூரிகளில் 1,85,670 இடங்கள் இருந்தும்கூட, இதுவரை 65,989 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இன்னும் 1,19,681 இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வு நிறைவடையும்போது மேலும் 10,000 மாணவர்கள் சேரக்கூடும். அப்படியும், சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாகவே இருக்கும்.
இது இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி படிக்கும் மோகம் குறைந்துவிட்டது (வறண்டு விட்டது?). இரண்டாவது, பொறியியல் முடித்து பட்டம் பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர் அல்லது குறைந்த சம்பளத்துக்கு கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்கின்றனர்.
கலைக் கல்லூரியில் மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முடித்து வரும் இளைஞர் உயர் கல்விக்காகச் செலவிடும் கட்டணம் மற்ற செலவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பெற்றோர், ஏன் இளைஞர்களும்கூட, பொறியியல் படிப்பை முடித்தும் வேலையில்லாமல் இருப்பதைவிட, கலை மற்றும் அறிவியல் படிப்பையே தேர்வு செய்ய விரும்புகின்றனர். ஏனெனில், தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வு, வங்கித் தேர்வுகளுக்கு ஒரு பட்டப்படிப்பு போதுமானது. அது குறிப்பிட்ட பாடத்திட்டத்தை முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை எதுவும் விதிப்பதில்லை. ஆகவே, வேலைவாய்ப்புக்கு அடிப்படைத் தகுதியான ஒரு பட்டப்படிப்பைக் குறைந்த செலவில் படிக்க முடியுமா என்பதைத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான், பொறியியல் மீதான மோகம் குறைந்துள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு விடை மிக எளிது. தமிழ்நாட்டில் வீட்டுக்கு வீடு பொறியியல் பட்டதாரிகள் இருந்தும்கூட, வேலைவாய்ப்பு என்பது மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டுமே. இதிலும்கூட, அவர்கள் எந்தக் கல்லூரியில் பயின்றார்கள் என்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
அமெரிக்க சிலிகான்வேலி கனவுகள் அனைவருக்கும் நனவாகும் என்பதில்லை. உள்ளூர் பி.பி.ஓ. அலுவலகங்களிலும்கூட, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆறு மாதத்திற்குள் தங்கள் தனித்திறனை நிரூபிக்காவிட்டால், புறக்கணிக்கப்படுதல் அல்லது வெளியூருக்குப் பந்தாடப்படுதல் என்று தானாகவே வெளியேறும் நிலை உருவாக்கப்படுகிறது.
இன்றைய தமிழக பொறியியல் கல்லூரிகளின் பிரச்னை என்பது அதிகமான கல்லூரிகளோ அதிக இடங்களோ அல்ல. அதிகமான கல்விக் கட்டணம், தனித்திறன் சார்ந்த பொறியியல் கல்வி கற்பித்தல் இல்லாதது ஆகிய இரண்டும்தான் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்னை. ஒரு மாணவன், பொறியியல் படித்து தொழில் வல்லுநராக வெளியேறினால், அவனால் தனியாக அல்லது தன்னைப்போன்ற பல இளைஞர்களுடன் சேர்ந்து கூட்டாகப் புதிய தொழில் தொடங்கவும் முடியும். பிற நிறுவனங்களில் தொழில் புரியவும் முடியும். ஆனால் இன்றைய பொறிஞர்கள், அத்தகைய திறனுறு பட்டதாரிகளாக வெளிவருவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
தற்போது கலை, அறிவியல் படிப்புகளில் அதிக ஆர்வம் என்பது, குறைந்த கட்டணத்தில் ஒரு பட்டம் பெற முடியும் என்பதுதானே தவிர, அறிவியல் சார்ந்த படிப்புகள் மீதான ஆர்வம் காரணமாக அல்ல. பொறிஞர்களைப் போலவே கலை, அறிவியல்
பட்டதாரிகளும் வேலையின்றிப் பல்கிப் பெருகும்போது, அந்தப் படிப்பின் மீது உள்ள ஆர்வமும் குறையும். அது வேறொரு சிக்கலை உருவாக்கும்.
கல்விக் கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு படிக்கலாம் என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. இது தமிழக அரசின் வருங்கால நிதிநிலையை மிகப் பெரிய நெருக்கடிக்குள் தள்ளக்கூடும். வேலையில்லா பட்டதாரிகளை அரசின் செலவில் ஆண்டுதோறும் உருவாக்கிக் கொண்டிருக்கும் தவறான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
வேலைவாய்ப்பை உறுதி செய்கிற அல்லது அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு போட்டித் தேர்வு எழுதுவதற்கான ஒரு தகுதி என்பதாக பட்டப்படிப்பு இருக்கும் நிலை ஏற்பட்டாக வேண்டும். இதைச் செய்ய, உயர்கல்வி என்பது மாணவர்களின் ஆர்வம், தேடல் சார்ந்த திறன்மேம்பாட்டு படிப்பாக மாற்றப்பட வேண்டும். இதை பிளஸ் ஒன் அளவிலேயே தீர்மானிக்க முடியுமா அல்லது பிளஸ் டூ முடித்து கல்லூரிக்கு செல்லும் நிலையில் தீர்மானிக்கலாமா என்பதையும், இதை மாணவர்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது, பாடத்திட்டங்களை எவ்வாறு நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றுவது, கல்லூரிகள் மற்றும் தொழிற்கூடங்களுடன் இணைந்ததாக, திறன்பயிலகமாக மாற்றுவது போன்ற பல புதிய போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்.
பொறிஞர் படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மாணவர்களின் தனித்தன்மை, தனித்திறனுக்கு ஏற்ப புதிய விருப்பப்பாடங்களை அவர்கள் தேர்வு செய்து, படிப்பைத் தொடரும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கற்பவரும் கற்றலும்தான்
முக்கியம். கல்வி நிறுவன முறைமைகள் இரண்டாம்பட்சம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.