நண்டுப்பிடிப் புற்று!

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையின்படி, அடுத்த இருபது ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 70% அதிகரிக்கக்கூடும். இதிலிருந்து உலகம் எத்தனை பெரிய, எந்த அளவு கடுமையான பாதிப்பை எதிர்நோக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
Updated on
2 min read

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையின்படி, அடுத்த இருபது ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 70% அதிகரிக்கக்கூடும். இதிலிருந்து உலகம் எத்தனை பெரிய, எந்த அளவு கடுமையான பாதிப்பை எதிர்நோக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மனித சமுதாயத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள, தொற்று நோய் அல்லாத வியாதிகள் "கேன்சர்' என்கிற புற்றுநோயும், "டயாபடீஸ்' என்கிற சர்க்கரை வியாதியும்தான். சர்க்கரை வியாதியை, உணவுக் கட்டுப்பாட்டாலும், மருந்துகளாலும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். புற்றுநோய் அப்படிப்பட்டதல்ல. அதன் சிகிச்சையும் சாதாரணமானதல்ல.

கடந்த 2014-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் ஏறத்தாழ 90 லட்சம்பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரு கோடியே 40 லட்சம் பேர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிகமான புற்றுநோய் மையங்களோ, சிகிச்சைக்கான வசதிகளோ, அதற்குச் செலவிடக்கூடிய வசதி படைத்தவர்களோ இல்லாத நிலைமையில், அவர்களில் பலரும் நோயால் தாக்கப்பட்டு மரணமடைவது தவிர்க்க இயலாதது.

இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சத்திற்கும் அதிகமான பேர் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பயனளிக்காமல் மரணம் அடைகிறார்கள். அதைவிட வேதனை, ஏறத்தாழ 20% பேர் சிகிச்சை பெற வழியில்லாமலோ, நோயால் தாக்கப்பட்டிருப்பதே தெரியாமலோ மரணமடைகிறார்கள் என்பதுதான். ஆண்டொன்றிற்கு ரூ.14,49,490 கோடி வரி வருவாய் உள்ள ஒரு நாட்டில், அடிப்படை சிகிச்சைகூடத் தரப்படாமல், அதற்கு வழியில்லாமல் பலர் மரணமடைகிறார்கள் என்றால், இந்தியா வல்லரசாகி என்ன பயன்?

சிலருக்கு புற்று நோய் தாக்கம் தவிர்க்க முடியாததாகவும், அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால், மூன்றில் ஒரு பங்கு புற்று நோய் பாதிப்புகள் தவறான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், மது அருந்துதல், புகையிலை உபயோகித்தல் போன்ற பழக்கங்களால் ஏற்படுபவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. பெரும்பாலான புற்று நோய் பாதிப்புகள் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், முறைப்படுத்திக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்கிற தன்மையிலானவைதான்.

எந்தவிதக் கட்டுப்பாடும், ஒழுங்கும் இல்லாமல் நேரம்கெட்ட நேரத்தில் உணவு உட்கொள்வது, உறங்குவது போன்ற வாழ்க்கை முறை புற்று நோய் தாக்கத்திற்குக் காரணமாகிறதோ இல்லையோ, நிச்சயமாக உடல்நிலையில் ஏதாவது பாதிப்புக்கு வழிகோலும். அதிகரித்த உடல் பருமன், மிகக் குறைவான உடல் உழைப்பு, குறைந்த அளவு பழங்கள், காய்கறிகள் உண்பது, சுகாதாரமில்லாத எண்ணெயில் பொரிக்கப்படும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்வது ஆகியவை புற்று நோய்க்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

புகையிலைப் பயன்பாடு ஏறத்தாழ 70% நுரையீரல் மற்றும் வாய் புற்று நோய் மரணத்துக்கான காரணியாகக் கருதப்படுகிறது. புற்று நோயாலான மரணத்தில் 20% புகையிலைப் பழக்கத்தால் ஏற்படுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். புற்று நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களில் கணிசமானவர்கள், மேலே குறிப்பிட்டிருக்கும் காரணிகளைத் தவிர்த்திருந்தால், புற்று நோய் மரணத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

தனிநபர் பழக்க வழக்கங்கள் மட்டுமே புற்று நோய் பாதிப்புக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. சுற்றுச்சூழலும், காற்று மற்றும் தண்ணீர் மாசுவும்கூட இதற்குக் காரணம். அதிகரித்து வரும் வாகனப் புகையும், மக்கள்தொகைப் பெருக்கமும் சுற்றுச்சூழலை அதிக அளவில் பாதித்து, காற்று மண்டலத்தையே மாசுபடுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கட்டுப்பாடான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களும்கூடப் புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு நிறையவே உண்டு.

புற்று நோய் பாதிப்புக்கான சிகிச்சை பெரும் செலவை ஏற்படுத்தக்கூடியது. ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால், குணமாகக் கூடியது. முதலிலேயே கண்டறியப்பட்டால் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளைக் குணப்படுத்திவிட முடியும்; ஏறத்தாழ

40% பேரை மரணத்திலிருந்து காப்பாற்றிவிட முடியும். இதற்கு புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்துவது அவசியம்.

மத்திய, மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியாவில் ஏறத்தாழ 25 புற்று நோய் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. பல தனியார் மருத்துவமனைகளும் புற்று நோய் சிகிச்சையை முனைப்போடு மேற்கொண்டு நோயாளிகளைக் குணப்படுத்தி வருகின்றன. அரசால், அதிக அளவில் பரவலாக புற்று நோய் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த இயலாத நிலையில், தனியார் மருத்துவ

மனைகள் புற்று நோய் சிகிச்சை பிரிவைத் தொடங்கி நடத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். அங்கு வரும் ஏழை நோயாளிகளுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளவோ அல்லது குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் புற்று நோய்க் காப்பீட்டுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவோ செய்தால் மட்டும்தான், புற்று நோய் என்கிற மிகப் பெரிய சவாலை நாம் எதிர்கொள்ளவும், பாமர இந்தியனைக் காப்பாற்றவும் முடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com