நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் விமானப் போக்குவரத்தின் புதிய கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெளிநாடுகளுக்கான விமான சேவை அளிக்க வேண்டுமானால், 5 ஆண்டு அனுபவம், குறைந்தது 20 விமானங்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கியிருப்பதும், மண்டலங்கள் இணைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்திருப்பதும் இதன் சிறப்பு.
மண்டலங்கள் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்,சிறு நகரங்களுக்கான குறுந்தொலைவு விமான சேவையை அதிகரிப்பதும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதும்தான்.
இந்தியாவில் பயணிகள் விமானப் போக்குவரத்தில் புதிய நிறுவனங்கள் பல தோன்றியபோதிலும், இவை லாபகரமாகச் செயல்
படவில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது. விமானங்களின் பராமரிப்பு மற்றும் ஊழியர் சம்பளம் மிக அதிகமாக இருப்பதும், பயணம் செய்வோர் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதும்தான் இதற்குக் காரணம்.
இத்தகைய சூழலில், குறுந்தொலைவு விமான சேவைகளை அதிகரிக்கவும், அதற்கேற்ப சிறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களை செம்மைப்படுத்தவும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கை உதவும். இந்தியாவில் 476 இடங்களில் விமானங்களை இறக்குவதற்கான வசதிகள் இருந்தபோதிலும், சுமார் 75 நகரங்களுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கொள்கைப்படி, அனைத்து சிறு விமான நிலையங்களையும் ஒவ்வொன்றையும் ரூ.50 கோடி செலவில் மேம்படுத்தி, குறுந்தொலைவு விமான சேவையை வழங்க இயலும்.
குறுந்தொலைவு விமான சேவைக்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயித்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக பயணநேரம் இருப்பின், ரூ.2,500-க்கு அதிகமாக இருக்கக் கூடாது. அதனால், அதிகமான உயர்நடுத்தரப் பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்தப் புதிய கொள்கை அமைந்துள்ளது. இந்தக் கட்டணக் கட்டுப்பாட்டினால், தனியார் அல்லது அரசு விமானங்களின் லாபத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, விமான சேவையில் தற்போது அமலில் உள்ள பல்வேறு வரிகள், தீர்வைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறுந்தொலைவு விமான சேவைக்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சேவை அளித்து வரும் நிறுவனங்களும் புதிதாக சில நிறுவனங்களும் ஆர்வத்துடன் குறுந்தொலைவு விமான சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில், இத்தகைய சேவை வழங்கும்போது, இழப்பு ஏற்பட்டால் அதை மத்திய, மாநில அரசுகள் 80:20 என்ற விகிதத்தில் ஈடு செய்யும் என்கிற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே பல வரிகள், தீர்வைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நட்டத்தை ஈடு செய்யும் திட்டம் மறைமுகமாக மக்கள் வரிப்பணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு உதவுவதாக அமையும்.
மண்டலங்கள் இணைப்புத் திட்டத்துக்காக (ஆர்.சி.எஸ்.) 2% கூடுதல் கட்டணத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச விமானப் பயணிகளிடம் வசூலித்து அந்தத் தொகையைக் கொண்டு இந்த நட்டத்தை ஈடுசெய்யலாம் என்பதும் ஏற்புடையதல்ல. அந்தத் தொகையை சிறு விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குறுந்தொலைவு விமான சேவையை வழங்க முன்வரும் நிறுவனங்கள் பெரும்பாலும், 72 பேர் கொண்ட சிறு விமானங்களை மட்டுமே இயக்கும். அந்த விமானங்கள் பாதுகாப்பானவையாகவும், முறையாகப் பராமரிக்கப்படுபவையாகவும் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். குறைந்த கட்டணம் என்பதால் விலை குறைந்த விமானங்களை இயக்குவதை அனுமதிக்கக் கூடாது. விமானப் போக்குவரத்து ஆணையம், இத்தகைய சேவையில் பயணிகளுக்கு அனைத்துப் பாதுகாப்புகளும் வசதிகளும் குறையாதபடி பார்த்துக்கொள்வது அவசியம்.
பயணிகள் விமானப் போக்குவரத்தின் புதிய கொள்கையில் மிக முக்கியமான அம்சம் வாடிக்கையாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு விடைகாண முற்பட்டிக்கிறது என்பதுதான். தனியார் விமான நிறுவனங்கள் பயணிகள் பயணத்தை ரத்து செய்தால் அடாவடியாக கட்டணம் வசூலிப்பது, அவர்கள் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு ஓர் அளவுக்கு மேல் இருந்தால் கடுமையான கட்டணம் கோருவது போன்ற நிலைமையில் இந்தப் புதிய கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும்.
சில பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்வார்கள் என்கிற நம்பிக்கையில், விமான நிறுவனங்கள் கூடுதலான இடங்களை விற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும், யாராவது பயணத்தை ரத்து செய்தால், அதற்குக் கடுமையான கட்டணக் குறைப்புகளைச் செய்து மிகக் குறைவான பணத்தை மட்டுமே திருப்பித் தருகிறார்கள். புதிய கொள்கைப்படி, ரத்துக் கட்டணம் அடிப்படைப் பயணக் கட்டணத்தைவிட அதிகமாக இருத்தல் கூடாது. அதேபோல, அதிகமாக இடங்களை விற்றுவிட்டு, யாருமே பயணத்தை ரத்து செய்யாமல் போனால், பல பயணிகள் இடம் தரப்படாமல் பரிதவிக்க விடப்படுகிறார்கள். இதற்கான இழப்பீடு கடுமையாக அதிகரிக்கப்படுகிறது. விமான தாமதத்திற்கும் பயணிகளுக்கு இழப்பீடும் வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்கிறது புதிய கொள்கை.
அரசின் புதிய விமானக் கொள்கை பல தரப்பினரையும் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டது என்றாலும், விமான நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. விமான நிறுவனங்களின் இழப்பை அரசு ஈடு செய்வது தவிர்க்கப்படுவதும், பயணிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதில் உறுதியாக இருப்பதும்தான் அரசுக்குப் பாராட்டை ஈட்டித்தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.