புலம்பெயர்வுப் பிரச்னை!

பிரிட்டனில் நடந்த கருத்து வாக்கெடுப்பில், ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டும் என்று 52% வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்ததற்கு மிக முக்கியமான காரணம், ஏனைய நாடுகளிலிருந்து புலம்பெயர்பவர்கள் அதிகமாகக் குடியேறுவதுதான்.
Updated on
2 min read

பிரிட்டனில் நடந்த கருத்து வாக்கெடுப்பில், ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டும் என்று 52% வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்ததற்கு மிக முக்கியமான காரணம், ஏனைய நாடுகளிலிருந்து புலம்பெயர்பவர்கள் அதிகமாகக் குடியேறுவதுதான். சோவியத் யூனியனின் வீழ்ச்சியும், லஷ்கர்-ஏ-தொய்பா, அல்-காய்தா, ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகளின் வளர்ச்சியும், உலகமயமாதல் என்கிற பொருளாதார சித்தாந்தத்தின் பரவலான அங்கீகாரமும் புலம்பெயர்தலையும், குடியேற்றத்தையும் ஊக்குவித்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

18-ஆம் நூற்றாண்டிலேயே, ஏன் அதற்கு முன்பே, புலம்பெயர்தல் என்பது தொடங்கிவிட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பர்கள் அடிமைகளாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தியாவிலிருந்து இலங்கை, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள், பிஜீ தீவுகள் போன்ற நாடுகளுக்குத் தோட்ட வேலை செய்ய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதெல்லாம்கூட ஒருவகையில் புலம்பெயர்வைச் சார்ந்ததுதான்.

இரண்டாம் உலகப் போர் பல நாடுகளிலிருந்து பலரைப் புலம்பெயரச் செய்தது. குறிப்பாக, ஐரோப்பியர்கள் நாடு விட்டு நாடு சென்று அந்தந்தப் பகுதிகளில் குடியேறுவதும், பலர் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறுவதும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சர்வ சாதாரணமாக நடந்தது. அந்தப் புலம்பெயர்வுகள் எந்தவிதப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் அனைவரும் நிறத்தால் வெள்ளைச் சருமத்தவர்கள் என்பதும், நம்பிக்கையால் கிறிஸ்தவர்கள் என்பதும்தான்.

மிக அதிகமாகப் புலம்பெயர்ந்தவர்களை இருகரம் நீட்டி வரவேற்ற நாடு ஜெர்மனியாகத்தான் இருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது மேற்கு ஜெர்மனி. இனத்தாலும், மொழியாலும், கலாசாரப் பிணைப்பாலும் வேறுபாடு இல்லாதவர்கள் என்பதால் அது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து திபெத், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கொசோவோ, எரித்ரியா, சோமாலியா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலிருந்து பலர் ஜெர்மனியில் குடியேறினார்கள் என்றாலும்கூட அவர்கள் ஜெர்மனியின் மொத்த மக்கள்தொகையில் சிறுபான்மையினராக இருந்ததால் பிரச்னை ஏற்படவில்லை.

இந்தியாவையே எடுத்துக்கொண்டால், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து சிந்தி இனத்தவரும், இந்து பஞ்சாபிகளும் அதிக அளவில் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு இங்கே தஞ்சம் புகுந்தனர். திபெத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள் இந்தியாவில் புகலிடம் தேடினார்கள். கலாசார ரீதியிலான வேறுபாடு அதிகம் இல்லாமல் இருந்ததால், அது பிரச்னையை ஏற்படுத்தவில்லை.

பிரச்னை அதிகம் எழுப்பாத இன்னொரு புலம்பெயர்வு, இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்வு. இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு, படிக்கவும், பிழைக்கவும் வழியில்லாத லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக அடைக்கலம் தேடினார்கள், புலம்பெயர்ந்தார்கள். அவர்களது உழைப்பும், திறமையும் அந்தந்த நாடுகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. அவர்கள் பிழைக்கப் போனார்களே தவிர, தங்களது இன, மத அடையாளங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவோ, பிரச்னைக்குரிய விஷயங்களில் தலையிடவோ இல்லை.

இப்போது ஐரோப்பா சந்திக்கும் பிரச்னை அப்படிப்பட்டதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தாலி, கிரீஸ், ஹங்கேரி எல்லைகளின் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 3,50,000. சிரியாவிலிருந்தும், ஈராக்கிலிருந்தும், மேற்கு ஆசியாவிலிருந்தும் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்டிருக்கும் இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்.

அடிப்படையில் கிறிஸ்துவக் கலாசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஐரோப்பாவில் இவர்கள் இஸ்லாமியக் கலாசாரத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள் என்பதுதான், புலம்பெயர்வுக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப் படுவதற்குக் காரணம்.

புலம்பெயர்வு இவ்வளவு பெரிய பிரச்னையாக உயர்ந்திருப்பதற்குத் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல்தான். அதைத் தொடர்ந்து லண்டன், பாரீஸ், புருசல்ஸ், டப்ளின் என்று தொடர்ந்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் மீதே ஐரோப்பியர்களுக்கு பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

"ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், முஸ்லிம் வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும்' என்று ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஓர்பன் வெளிப்படையாக எச்சரிக்கிறார் என்றால் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எல்லைகளைக் கம்பிவேலி போட்டு மூடிவிட முடியுமா? இல்லை, புலம்பெயர்ந்து குடியேறி விட்டவர்களை வெளியேற்றிவிடத்தான் முடியுமா?

பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாட்டால் ஒட்டுமொத்த இஸ்லாமே களங்கப்பட்டு நிற்கிறது. அவர்களுக்குத் தாய்நாட்டிலும் பாதுகாப்பில்லை, புலம்பெயர்ந்து குடியேறவும் வழியில்லை. உலகமயத்தால், பொருளாதாரத்தால் தீர்வு காண முடியாத பிரச்னையாக உலகை உலுக்குகிறது புலம்பெயர்வு என்கிற பிரச்னை. இதற்கு விடைதான் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com