ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!

கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் அதிரடி
Updated on
2 min read

கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கி விட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இப்படியொரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படாமல் போயிருந்தால், விரைவிலேயே ஒட்டுமொத்த தேசமே உருக்குலைந்து போய்விடும் என்கிற நிதர்சன உண்மையையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
2004-ஆம் ஆண்டில் அப்போதைய வாஜ்பாயி அரசு பதவியி
லிருந்து விலகியபோது, நாட்டில் புழங்கிய கருப்புப் பணத்தின் அளவு 4% முதல் 7% ஆக இருந்தது. அதுவே இப்போது 23.2% ஆக உயர்ந்து, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தில் நான்கில் ஒரு பங்கு, கணக்கில் இல்லாத பணம் என்கிற அளவுக்கு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சுமார் ரூ.17,60,000 கோடியில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு மட்டும் ரூ.14 லட்சம் கோடி. அந்த நோட்டுகளின் எண்ணிக்கை சுமார் 2,300 கோடி. இவை புழக்கத்திலிருந்து அகற்றப்படும்போது, உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்வதில் பிரச்னைகள் ஏற்படும்தான். அதற்காக, கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் தொடர்ந்து உலவ விடுவது எப்படி சரியாக இருக்கும்?
அரசு ரூ.500, ரூ.1000 தொகைகளைச் செல்லாதவையாக்கும் அறிவிப்பை வெளியிட்டபோது, சிலர் அதை முடக்க உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். அப்போது அரசின் கொள்கை ரீதியிலான முடிவுகளில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்தது. அதுதான் சரியான, முறையான கண்ணோட்டம். நீதித்துறைகளின் முடிவுகளில் எப்படி அரசு தலையிட முடியாதோ, அதேபோல அரசின் கொள்கை ரீதியிலான முடிவுகளில் நீதித்துறையின் தலையீடு இருத்தல் கூடாது என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் திட்டவட்ட அதிகாரப் பகிர்வு.
கொள்கை ரீதியிலான முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறிய அதே உச்சநீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருக்கும் கருத்து, வியப்பை ஏற்படுத்துகிறது. அரசின் அறிவிப்புக்கு எதிராகப் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிப்பதற்குத் தடைவிதிக்க முடியாது என்று இப்போது தெரிவித்திருக்கிறது.
"மத்திய அரசின் அறிவிப்பால், பணமின்றி மக்கள் அவதிப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தின் உதவியைக் கேட்கிறார்கள். அவர்கள் உயர்நீதிமன்றங்களுக்குச் செல்வதைத் தடுத்தால், அவர்களின் பிரச்னைகளை எப்படி நாங்கள் தெரிந்து கொள்ள முடியும்? அவர்கள் வெவ்வேறு நீதிமன்றங்களை நாடியிருப்பது, பிரச்னையின் தீவிரத்தை காட்டுகிறது. அரசின் நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொந்தளிப்புடன் கோபத்தில் உள்ளனர். இப்படியே போனால் கலவரங்கள் மூளக்கூடும்' - இவையெல்லாம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் உச்சநீதிமன்றம் கூறியவை.
கொள்கை ரீதியிலான முடிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இல்லாமல் இருக்கும்வரை அது குறித்துக் கேள்வி எழுப்பும் அதிகாரம் நீதித்துறைக்குக் கிடையாது என்பதுதான் பொதுவான புரிதல். அப்படி இருக்கும்போது உச்சநீதிமன்றம் இப்படி கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தனது வாதத்தைத் தெளிவாக முன்வைக்காததுதான் உச்சநீதிமன்றம் இப்படியொரு கருத்தை வெளிவிட்டதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.
கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது என்பது, ரகசியம் காக்கப்பட்டால் மட்டுமே சாத்தியம். அப்படி ரகசியம் காக்கப்பட வேண்டுமானால் மக்கள் சில வாரங்களுக்கு அவதிக்குட்பட்டே தீர வேண்டும். மக்களுக்கு சிரமமே கொடுக்கக் கூடாது என்று சொன்னால், முந்தைய மன்மோகன் சிங் அரசுபோல கருப்புப் பணம் அதிகரிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒருநாள் சகித்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டு அப்போதுதான் கலவரங்கள் வெடிக்கும். மக்கள் கொந்தளித்து எழுவார்கள். அந்த நிலைமை ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் துணிந்து ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இலவசங்களுக்காக மக்கள் முண்டியடித்துக் கலவரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிதிநிறுவன மோசடிகளுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துப்போய் கலவரம் செய்திருக்கிறார்கள். அலுவலகங்களைச் சூறையாடியிருக்கிறார்கள். காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிராகவும், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்படாமைக்கு எதிராகவும் மக்கள் சாலை மறியல்களிலும், முற்றுகைப் போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி எதுவுமே இப்போது நடக்கவில்லை.
இந்தியாவில் 1,34,000 வங்கிக் கிளைகளின் முன்னாலும், 2,02,000 ஏ.டி.எம். மையங்களின் முன்னாலும், ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களிலும் அமைதியாக, வரிசையாக நின்று பணம் பெற்றார்களே தவிர, எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதற்குக் காரணம், அரசின் நோக்கம் நல்லது என்பதாலும், இது இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சை என்பதாலும்தான். அரசின் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையை மக்கள் எதிர்கொண்டவிதத்தை நீதிமன்றத்திடம் அட்டர்னி ஜெனரல் சரியாக விளக்கி எடுத்துரைக்கத் தவறிவிட்டார்.
அரசுடன் மோதல் போக்கை நீதித்துறை தொடர்வது என்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இதன் எதிர்வினையாக நீதித்துறை சீர்திருத்தம், நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை போன்றவை அரசால் பேசப்படத் தொடங்கினால், விளைவு மோசமானதாக இருக்கும். அது அரசியல் சட்டப் பிரச்னையாக மாறி நாடாளுமன்றமா, நீதித் துறையா என்கிற மோதலுக்கு வழிவகுக்கும். அதுதான் பயமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com