மறைந்தும் வாழும் மாமேதை!

மறைந்தும் வாழும் மாமேதை!மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா தனது மறைவால் உலகளாவிய இசை ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டிருக்கிறார்
Updated on
2 min read

மறைந்தும் வாழும் மாமேதை!மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா தனது மறைவால் உலகளாவிய இசை ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டிருக்கிறார். எல்லைகளைக் கடந்து ஒலித்த இசைக்குரல் அவருடையது. தான் வாழ்ந்த 86 ஆண்டுகளில் பல பிறவி எடுத்து சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் அவரால் செய்து காட்ட முடிந்தது என்பதுதான் பாலமுரளிகிருஷ்ணாவின் தனிச்சிறப்பு.
1930-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் நாள் ஆந்திர மாநிலம் கோதாவரிக் கரையிலுள்ள சங்கர குப்தம் கிராமத்தில், பட்டாபிராமையா - சூரியகாந்தம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தது, கர்நாடக சங்கீதம் செய்த தவப்பயன். தனது எட்டு வயதிலேயே முழுநேர சாஸ்த்ரிய இசை நிகழ்ச்சியை அவரால் நடத்த முடிந்ததைப் பார்த்துப் பெரிய இசை வித்வான்களே வியந்து நின்றனர். தனது 15-ஆவது வயதிற்குள் 72 மேளகர்த்தா ராகங்களிலும் புலமை பெற்று, அந்த ராகங்களில் தானே கிருதிகளை எழுதி மெட்டமைத்துப் பாடினார் என்றால், இசை கர்ப்பத்திலேயே அவரிடம் ஊறத் தொடங்கியிருந்தது என்றுதானே பொருள்.
எம்.எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு, தென்னிந்திய சாஸ்த்ரிய இசையின் முகமாகத் திகழ்ந்தவர் பாலமுரளி. குரல் வளமும், இசை ஞானமும், இடைவிடாமல் ஏதாவது ஆய்வுகளைச் செய்து புதுமைகளைப் புகுத்தும் உற்சாகமும், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு போயிற்று என்பது மட்டுமல்ல, கர்நாடக சங்கீதத்திற்குப் புதுப்பொலிவையும், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும் வழங்கின.
400-க்கும் மேற்பட்ட சாகித்யங்கள், உலகளாவிய அளவில் 25,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் என்று தனது 86 வயதில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்கு அளவே இல்லை. தனது தாய் மொழியான தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், சம்ஸ்கிருதம், மலையாளம், இந்தி, வங்காளம், பஞ்சாபி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் பேசவும், எழுதவும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அந்தந்த மொழிகளில் எல்லாம் அவரால் கிருதிகள் அமைக்க முடிந்தது.
டாக்டர் ஜோயல் என்கிற ஆங்கில இசையமைப்பாளர் ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு பெற்ற கவிதையான "கீதாஞ்சலி'க்கு இசையமைத்தபோது, அந்தப் பாடல்களைப் பாடுவதற்கு அவர் தேர்ந்தெடுத்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா. அவரது துல்லியமான (ஸ்பஷ்டமான) வங்காள உச்சரிப்பால் கவரப்பட்டு, தாகூரின் அனைத்துப் பாடல்களும் அடங்கிய ரவீந்திர சங்கீத் தொகுப்பை விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தில் பாலமுரளிகிருஷ்ணாவைப் பாடச் சொல்லிப் பதிவு செய்தார்கள் என்றால் அவரது சிறப்பை நாம் உணரலாம்.
பாலமுரளிகிருஷ்ணா கர்நாடக இசை மேடைகளில் பிரபலமான பிறகுதான், தியாகராஜ கிருதிகள் சரியான உச்சரிப்புடன் இசைக்கப்படத் தொடங்கின என்று சொன்னால்கூடத் தவறில்லை. அது தமிழோ, தெலுங்கோ, இந்தியோ, வங்காளமோ எந்த மொழியானாலும் பாலமுரளியின் உச்சரிப்பு அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையேகூட ஆச்சரியப்பட வைக்கும்.
விருதுகள் ஒரு மனிதனின் வீட்டு வாசலில் வரிசை கட்டி நின்றது என்றால் அது பாலமுரளிகிருஷ்ணாவாகத்தான் இருக்கும். இந்திய அரசின் பத்ம விபூஷண், பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது, "யுனெஸ்கோ' விருது, சங்கீத நாடக அகாதெமி விருது, சங்கீத கலாநிதி, பல மாநில அரசு விருதுகள் என்று அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியலைப் புத்தகமாகத்தான் போட வேண்டும். இசைத்துறையில் மட்டுமல்ல, சினிமா துறையிலும் சரி, சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதையும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்ற பெருமைக்குரியவர் பாலமுரளிகிருஷ்ணா.
பாலமுரளிகிருஷ்ணாவின் சிறப்பு அவரது எளிமையும் தனது திறமையின் மீதான தன்னம்பிக்கையும். "திருவிளையாடல்' திரைப்படத்தில் வரும் "ஒருநாள் போதுமா' பாடலை அன்றைய பின்னணிப் பாடகர்கள் பலர் பாட முன்வரவில்லை. "பாட்டும் நானே பாவமும் நானே' பாடலிடம் இந்தப் பாடல் தோற்றுப் போவதாகக் காட்சி வருவதால், தங்களது குரல் தோற்றுப்போனதாக இருக்கும் பாடலைப் பாடத் தயங்கினார்கள். இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும், தயாரிப்பாளர் - இயக்குநர் ஏ.பி. நாகராஜனும் பாலமுரளிகிருஷ்ணாவை அணுகி விவரம் சொன்னபோது, அவர் எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் பாட ஒப்புக்கொண்டார்.
அப்போது, அவர் "என்னுடைய பாடலும் நிற்கும், அந்தப் பாட்டும் நிற்கும்' என்று சொன்னாராம். அவருக்கு அந்த அளவுக்குத் தன்னம்பிக்கை.
பாலமுரளிகிருஷ்ணாவின் தனிச்சிறப்பு அவரது இடைவிடாத இசை ஆராய்ச்சிகள். இசை என்பது காலத்துக்கு ஏற்ப மாற்றமடையத்தான் செய்யும், செய்ய வேண்டும் என்று கருதிய புரட்சிகரமான சிந்தனையாளர். நான்கே ஸ்வரங்களில், அவர் அமைத்த மஹதி, லவாங்கி, சித்தி, சுமுகம் போன்ற ராகங்கள் அற்புதங்கள் என்றால், மூன்றே ஸ்வரங்களில் உருவாக்கிய சர்வஸ்ரீ, ஓம்காரி, கணபதி போன்றவை ஆச்சரியங்கள். ஸ்வரங்களில் மட்டுமல்ல, தாளத்திலும் பல புதுமைகளைப் புகுத்திய பெருமைக்குரியவர் பாலமுரளிகிருஷ்ணா.
இசை உலகில் மட்டுமல்லாமல், திரையுலகிலும் நடிகராக, பின்னணிப் பாடகராக, இசையமைப்பாளராக அவரால் தடம் பதிக்க முடிந்தது. இசைக் கருவிகளில் வயலின், கஞ்சிரா, மிருதங்கம் போன்றவற்றிலும் பாலமுரளிக்குப் புலமையுண்டு. கச்சேரிகளே செய்திருக்கிறார். அஷ்டாவதானி என்றால் நிஜமான அஷ்டாவதானி.
பாலமுரளிகிருஷ்ணா சாமானியர்களையும் கவர்ந்த சாஸ்த்ரிய இசை மேதை. தொழில்நுட்பம் அவரது இசையை நமக்குப் பாதுகாத்துத் தந்திருக்கிறது. தமிழ் வாழும் காலம், "தங்கரதம் வந்தது வீதியிலே' பாடலும் "சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடலும் தமிழர்கள் செவிகளில் ரீங்காரம் செய்தவண்ணம் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com