அரசியல் படுத்தும் பாடு!

மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்காக மிகப்பெரும் மகிழ்ச்சி அடையக்கூடிய நபர் மம்தா பானர்ஜி மட்டுமாகத்தான் இருப்பார்.
Updated on
2 min read

மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்காக மிகப்பெரும் மகிழ்ச்சி அடையக்கூடிய நபர் மம்தா பானர்ஜி மட்டுமாகத்தான் இருப்பார். ஏதோ அடைய முடியாததை அடைந்து விட்டதுபோல், அவரும், "இனி நிம்மதியாக உயிரை விடுவேன்' என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

அந்த அளவுக்கு இந்த வழக்கில் அவர் ஈடுபாடு கொண்டிருக்கக் காரணம், சிங்கூர் விவசாயிகள் பிரச்னைதான், மேற்கு வங்கத்தில் கால் நூற்றாண்டாகக் கோலோச்சிய இடதுசாரிக் கூட்டணி கட்சி மீது ஏற்கெனவே இருந்த அதிருப்தியை வலுப்படுத்தவும், திரிணமூல் கட்சியை வளர்த்தெடுக்கவும், திரிணமூல் கட்சி இரு முறை மேற்குவங்க ஆட்சியைப் பிடிக்கவும் உதவியது.

ஆனாலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பினால் என்ன பயன் என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கான விடை, இந்தக் கொண்டாட்டத்தை மட்டுப்படுத்திவிடும் என்பது உறுதி. குறிப்பாக, நிலம் கையகச் சட்டம் 2013 அமலுக்கு வந்துவிட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு எதன் மீதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சவில்லை.

நீதிபதிகள் இருவரும் மாறுபடும் கருத்தாகிய, பொதுநோக்கு என்பது என்ன என்ற கேள்வியும்கூட, நிலம் கையகச் சட்ட வரையறைக்குள் தெளிவாகவே இருக்கிறது. மேலும், ஊரகம் என்றால் நான்கு மடங்கு சந்தை மதிப்பு விலையாக தரப்பட வேண்டும், பொதுநோக்கத்துக்காக தனியாருக்கு கையகப்படுத்தினால் அதற்கான நிபந்தனைகள் என்ன, எத்தனை காலத்துக்குள் அத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும், தனியாருக்காக அரசு நிலம் கையகப்படுத்தினால் 80 விழுக்காட்டினரின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்றெல்லாம் தெளிவான விதிமுறைகள் நிலம் கையகச் சட்ட வரைவில் வகுக்கப்பட்டு விட்டதால் இந்தத் தீர்ப்பில் புதிதாக ஒன்றுமில்லை.

2006-ஆம் ஆண்டில், அன்றைய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, நானோ கார் தொழிற்சாலைக்காக சிங்கூர் பகுதியில் 1,053 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரும் எதிர்ப்பு எழுந்தது. கலவரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நானோ கார் நிறுவனத்தை குஜராத் மாநிலத்துக்கு மாற்றிக் கொள்கிறோம் என்று டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா 2008 அக்டோபரில் அறிவித்தார். அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த பிரதமர் மோடி, "ஸ்வாகதம்' என்று குறுந்தகவல் அனுப்பி வரவேற்றார். அடுத்த 14 மாதங்களில் அங்கே சானந்த் என்ற இடத்தில் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டுவிட்டது.

எந்த நோக்கத்துக்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் இன்று இல்லை. நானோ கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்துக்கு சென்றுவிட்டது. ஆகவே இந்த நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்கின்றது தீர்ப்பு. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதில் அரசு நடைமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்று மட்டுமே தீர்ப்பில் குறை காணப்பட்டுள்ளது. அதாவது பின்னாளில், நீதிமன்றத்தில் மேற்கு வங்கு அரசு அளித்த பதில் மனுவில் குறிப்பிட்டதைப்போல, 30 விழுக்காடு நிலம் அதன் உரிமையாளர்களின் விருப்பம் கேட்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் வழங்க விருப்பம் இல்லாத அந்த 30 விழுக்காட்டினரின் நிலத்தைத் திரும்ப ஒப்படையுங்கள் என்று அப்போது கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தால் பிரச்னை 2008-லேயே முடிந்துபோயிருக்கும். அல்லது குஜராத் மாநிலத்துக்கு தொழிற்சாலையை இடம் மாற்றிக்கொண்ட டாடா நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தாலும் பிரச்னை இயல்பாகவே முடிவுக்கு வந்திருக்கும். ஆனாலும், நானோ கார் தொழிற்சாலையை மீண்டும் மேற்கு வங்கத்தில் தொடங்கும் எண்ணம் இல்லாத டாடா நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்யவில்லை. நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியது.

ஒருவேளை மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருந்தால், இன்று நீதிமன்றம் தெரிவித்ததைப் போலவே, கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்துக்கு சென்றுவிட்ட பிறகு ஏன் இந்த பிடிவாதம், ஒப்பந்தத்தை நாமே ரத்து செய்துகொள்வோம் என்று அழைப்பு விடுத்திருந்தால் இந்த விவகாரம் இந்நேரம் மிகச் சுமுகமாக முடிந்துபோயிருக்கவும் கூடும். மம்தா பானர்ஜியும் அதைச் செய்யவில்லை.

இப்போதும்கூட, டாடா நிறுவனம் இத்தீர்ப்பு குறித்து கருத்து கூறுகையில், "நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்திய அரசின் நடைமுறை குறித்துத்தான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. சிங்கூர் நிலச் சட்டம் 2011 குறித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது' என்று சொல்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டாடா நிறுவனத்துடன் சுமுகமாகப் பேசி, மேல்முறையீடுகளுக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, விவகாரத்தை முடித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதை இன்னமும் நீட்டிப்பதால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது.

சிங்கூர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்த மம்தா முதல்வராகிவிட்டார். இங்கே நான் இடம் தருகிறேன் என்று அழைத்து, இடம் கொடுத்த நரேந்திர மோடி பிரதமர் ஆகிவிட்டார். இடம்பெயர்ந்த டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலையை தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சிக்கிய நிலம் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக கரம்பாகவே கிடக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com