சரியான காய் நகர்த்தல்!

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 20-ஆம் தேதிமுதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Updated on
2 min read

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 20-ஆம் தேதிமுதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் தரப்பில் வரவேற்பு இருப்பதோடு இது சரியான காய் நகர்த்தலும்கூட.
இரண்டு விசாரணையின்போதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு நியாயம் கிடைப்பதாகவே அமைந்ததால், காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள், நம்பிக்கையுடன் சம்பா சாகுபடிக்கான பணிகளைத் தொடங்கிவிட்டனர். இப்போது இந்த அறிவிப்பு அந்த நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.
செப்டம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான விசாரணை எடுத்துக்கொள்ளப்படும்போது, ஏற்கெனவே இரண்டு தவணைகளாக 15,000 கனஅடி, 12,000 கனஅடி என விவசாயத்துக்காக கர்நாடகம் காவிரி நீர் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்தப்பட்டும்கூட, அந்த நீர் விவசாயிகளுக்குப் பயன்படாத நிலைதான் உள்ளது என்பதை கர்நாடகம் ஒரு வாதமாக முன்வைக்க வகையில்லாதபடி இத்தகைய நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார் எனலாம்.
இன்னும் முன்கூட்டியே மேட்டூர் அணையைத் திறந்துவிட்டிருக்கலாம் என்கின்ற வழமையான அறிக்கைகள் எதிர்க்கட்சிகளிடமிருந்து கிளம்பும். ஆனாலும், தற்போது அணையில் 84.7 அடி அளவுக்கே தண்ணீர் தேங்கி இருப்பதாலும், அடுத்த சில நாள்களில் அது 90 அடியை எட்டிவிடும் என்கின்ற கணக்கீட்டின் அடிப்படையிலும் இந்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அணையில் 100 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தால்தான் கடைமடைப் பகுதிகளுக்கும் காவிரிப் பாசன நீர் கிடைப்பது சாத்தியம். அணையில் குறைவாக நீர் இருப்பின் அதை அளந்து கொடுக்கவும், எங்கெல்லாம் சாகுபடி பரப்பு அதிகமுள்ளது என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப நீரை
திட்டமிட்டுப் பகிரவும் முடியும்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட அதே நாளில் மற்ற கட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. இதில் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பங்கேற்கவில்லை. பேருந்து போக்குவரத்து நிறுத்தம் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அறிவிக்கவில்லை. உச்சநீதிமன்றம் இரு மாநிலங்களிலும் வன்முறை, எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவை நடக்கக் கூடாது என்று கண்டித்திருப்பதுதான் இதற்குக் காரணம்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மீறி, மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால், அரசு இயந்திரங்களை முடக்கினால் நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். தற்போது காவிரி விவகாரத்தில் நீதிமன்றம் தமிழகத்தின் நிலையை உணர்ந்து செயல்படும் சூழலில், எதிர்க்கட்சிகளுக்குப் போட்டியாக ஆளும்கட்சியும் களத்தில் இறங்குவது என்பது தமிழக நலனுக்கு உகந்தது அல்ல. இதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டிருப்பதற்கு தமிழக அரசைப் பாராட்ட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா, உச்சநீதிமன்றம் தற்போது வழங்கக் கூறியுள்ள 12,000 கனஅடி நீர் மேலும் அதிகரிக்கப்படுமா அல்லது நீர்அளவு குறையுமா என்பது எதையும் இப்போதைக்குச் சொல்வதற்கில்லை. இந்த விவகாரம் நாம் விரும்பும் அளவுக்கு மிக எளிதாக, மிக விரைவாகத் தீர்வு காண்பது என்பது மிக மிக அரிது.
கர்நாடக மாநிலம் தனது குடிநீர் தேவைக்காக காவிரி நீரின் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கிறது என்று நாம் சொல்லும் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை நாமும் காவிரி நீரை குடிநீருக்காக பயன்படுத்துகிறோம், அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பது.
விநியோகிக்கப்படும் குடிநீர் முழுமையும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில், 50% குடிநீர் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், தோட்டத்துக்குமே செல்கிறது. இதற்காகவா, குளோரின் போட்டு சுத்திகரித்து அனுப்புகிறார்கள்? ஆகவே குடிநீர் என்கின்ற வகைப்பாட்டைத் தனித்து நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட வேண்டும்.
பற்றாக்குறை காலத்தில் நாம் போராடிப் பெற்ற நீரை இந்த நேரத்தில் நாம் எப்படி முழுமையாக, ஒவ்வொரு துளியையும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதை திட்டமிடுவதுதான் இன்றைய தேவை.
அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டிப் பேச வேண்டும் என்று எல்லா கட்சித் தலைவர்களும் அறிக்கை விட்டாலும்
அத்தகைய கூட்டத்தால் ஒரு பயனும் விளையாது. மீண்டும் ஆளாளுக்கு கருத்துகளை அள்ளிவிடுவதாகவே முடியும். இன்றைய தேவை விவசாயிகளையும், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்
களையும் கொண்ட குழுவை தமிழக அரசு உருவாக்கி, நீரைப் பகிர்வது குறித்த பொறுப்பை அவர்களிடம் விடுவதே.
காவிரி மேலாண்மை வாரியம் இரு மாநிலங்களுக்கு இடை
யிலான நீர் பகிர்வை சரியாகத் திட்டமிடும் என்று எப்படி நாம் எதிர்பார்க்கிறோமோ அதேபோன்று, தமிழக விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் மேற்பார்வைக் குழு, தற்போதுள்ள நீரை எவ்வாறு எந்தெந்த மாவட்டத்துக்கு எந்த அளவில் பகிர்ந்துகொள்வது என்
பதைத் தீர்மானிக்கும் குழுவாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைய வேண்டியது அவசியம். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வழிகாட்டியாக இந்தக் குழு அமையட்டும்!
மேலும், பாசன மேலாண்மை, குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களுக்கு மாறுதல் என பலவகையிலும் வேளாண் முறைகளை சீரமைக்கவும் மாற்றியமைக்கவும், இந்தக் குழு வழிகாட்டியாக அமையும். ஆனால், இந்தக் குழு அரசியலுக்கு அப்பாற்பட்டு, வேளாண் வல்லுனர்களும், நீர்ப்பாசனம் அறிந்த அனுபவசாலிகளும், விவசாயிகளும் அடங்கியதாக அமைவது மிக மிக முக்கியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com