வேளாண் இடர்ப்பாடு!

வடகிழக்குப் பருவமழை பொய்த்திருப்பதால் தமிழகம் மிகப்பெரிய வறட்சியை எதிர்கொள்ள இருக்கிறது.
Updated on
2 min read

வடகிழக்குப் பருவமழை பொய்த்திருப்பதால் தமிழகம் மிகப்பெரிய வறட்சியை எதிர்கொள்ள இருக்கிறது. காவிரியில் போதிய நீர் கிடைக்கப் பெறாததாலும், தென்மேற்குப் பருவமழையும் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் இருந்ததாலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு ஒட்டுமொத்த விவசாயத்தையும் சீர்குலைத்து விட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் வடகிழக்குப் பருவமழைக் காலம். இந்தப் பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப் பெறுவது வழக்கம். ஆனால் நிகழாண்டில் வெறும் 168.3 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் 60%க்கும் குறைவாகவே மழைநீர் பெற்றிருக்கின்றன.
இந்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பொய்த்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இந்த ஆண்டு முழுமைக்குமே தமிழகம் பெற்ற மழைநீரின் அளவு 168 மி.மீ. இதற்கு முன்னால் இதுபோன்ற சூழ்நிலை 1876-இல் ஏற்பட்டிருக்கிறது. அப்போதைய பருவமழையின் அளவு 163.5 மி.மீ.
காவிரி நதிநீர் பெறுவதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி ஜூன் - டிசம்பர் காலகட்டத்தில் தமிழகத்துக்கு நியாயமாக 179 டி.எம்.சி. காவிரி நீர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் நமக்குத் தந்திருக்கும் மொத்த நீரளவுவெறும் 66.60 டி.எம்.சி. மட்டுமே.
டெல்டா மாவட்டங்கள் இதனால் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. விவசாயம் என்பது அறவே அற்றுப் போய்விட்ட நிலைமை. பருவமழை பொய்க்காது, காவிரி நீர் கிடைத்துவிடும் என்று நம்பிப் பயிரிட்ட விவசாயிகளின் பயிர்கள் கருகியதுதான் மிச்சம். விவசாயம் பொய்த்ததால் விவசாயிகளில் சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மரணமடைந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
நல்ல வேளையாக மத்திய அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதைத் தமிழக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவும் செய்திருப்பதால் ஓரளவுக்குப் பண இழப்பு ஈடுகட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம். டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 12.86 லட்சம் ஏக்கர் நிலங்களில், 11.01 லட்சம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது 86% பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டிருப்பதால், 5.48 லட்சம் விவசாயிகள் பெரும் நிதியிழப்பு இல்லாமல் தப்பிக்கக்கூடும்.
விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகைக்காக மாநில அரசின் பங்காக ரூ.410 கோடி செலுத்தப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் பங்காக ரூ.44.81 கோடி செலுத்தியுள்ளனர். அதனால், பயிர் பாதிப்பு அளவைப் பொருத்து அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு கிடைக்கக் கூடும்.
விவசாயிகளின் முதலீடு இழப்பு என்பது மட்டுமே அல்ல பிரச்னை. போதிய பாசன நீர் இல்லாமல் விவசாயம் பொய்க்கும்போது, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பது குறித்து நாம் சிந்தித்தாக வேண்டும். சங்கம் வைத்து விவசாயிகள் அவர்களது உரிமையைப் பாதுகாத்துக் கொள்வது போல, பயிர்க் காப்பீடு செய்து இழப்பீடு பெறுவதுபோல, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களுக்கு, அவர்களது அன்றாட வாழ்க்கையை நடத்த எந்தவித நிவாரணமும் தரப்படுவதில்லை. தமிழகம் மிகப்பெரிய வேளாண் இடர்ப்பாடை (அக்ரேரியன் கிரைசிஸ்) எதிர்கொள்கிறது.
இப்படி இயற்கை பொய்க்கும் என்பதை எதிர்பார்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குறுவை சாகுபடிக்காக 54 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடித் திட்டத்தையும், சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலான சம்பா சாகுபடித்திட்டத்தையும் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை மாநில அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வறட்சி பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேவையான நிவாரணங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இப்போது அறிவித்திருக்கிறார். விவசாயிகள் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறும் இழப்பீட்டுத் தொகை மட்டுமல்லாமல், மாநில அரசின் நிவாரணத் தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
மாநில அரசு சில முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், அரசு இரண்டு முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்தியாக வேண்டும்.
விவசாயத்தை நம்பிப் பிழைக்கும் கூலித் தொழிலாளர்களும், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் தினசரிக் கூலிகளாகவும் அன்றாடம் காய்ச்சிகளாகவும் இருப்பவர்கள். இவர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்க என்ன செய்யப் போகிறது என்பது குறித்து அரசு சிந்தித்தாக வேண்டும். இவர்களுக்காகக் குரல் கொடுக்க எந்தவித சங்கங்களும் இல்லை என்றாலும், இந்தப் பிரிவினர்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நிரந்தர வாக்கு வங்கியாக இருந்து வருபவர்கள் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
சென்னை மாநகரம் இதுவரை கண்டிராத அளவிலான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இருக்கிறது. அதுகுறித்தும், அரசு இப்போதே விழித்துக்கொண்டு முன்னேற்பாடு நடவடிக்கைகளை முடுக்கி விட்டாக வேண்டும். ஜெயலலிதா இல்லாத அதிமுக அரசு இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதில்தான் ஆளும்கட்சியின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com