கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் அனுராக் தாகுரும், செயலாளர் அஜய் ஷிர்கேயும் உச்சநீதிமன்றத்தால் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது எந்தவித வியப்பையும் தரவில்லை. அவர்களை மட்டுமல்ல, நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்காத, நிறைவேற்ற மறுக்கும் மாநில அமைப்புகளின் நிர்வாகிகளையும் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதை உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்புமீறல் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிப்பதைத் தவறு என்று சொல்ல முடியாது. உச்சநீதிமன்றம் இந்த முடிவை தடாலடியாக எடுத்துவிடவில்லை. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளால் அப்படியொரு நிர்பந்தத்திற்கு உச்சநீதிமன்றம் தள்ளப்பட்டது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும், அதன் நிர்வாகிகள் நியமனத்தில் எந்த விதிமுறையும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதும் நீண்டநாட்களாகவே இருக்கும் குற்றச்சாட்டு. இதன் காரணமாகத்தான் உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி லோதாவின் தலைமையிலான குழுவை அமைத்து, கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த பரிந்துரைகள் வழங்கக் கேட்டுக் கொண்டது.
கடந்த ஜூலை 18, 2016-இல் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று, அதனடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆறு மாத அவகாசத்திற்குப் பிறகும் அந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும்போது உச்சநீதிமன்றம் இப்படியொரு நடவடிக்கையை மேற்கொண்டதில் தவறு காண முடியாது.
கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழுவில், கிரிக்கெட் வீரர்களின் சங்க உறுப்பினர்களுக்கும் இடமளிப்பது, நிர்வாகிகளுக்கு வயது 70 என்று வயது வரம்பு விதிப்பது, கணக்குத் தணிக்கை அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு இடமளிப்பது, மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்கிற முறை இவை எதையும் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேள்வி கேட்கவும் தொடங்கிவிட்டது.
இந்தியக் கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி, லோதா கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்துத் தீர்மானங்கள் நிறைவேற்ற மாநில கிரிக்கெட் வாரியங்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை வற்புறுத்தியது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாகுர், லோதா கமிட்டிப் பரிந்துரை என்பது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளில் அரசின் தலையீடு என்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மூலமாகக் கண்டனம் தெரிவிக்கத் தூண்டினார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது உறுதிப்படுத்தப்பட்டால் அனுராக் தாகுர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாயக் கூடும்.
லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் சில நடைமுறைக்கு ஒத்து வராதவை என்பது உண்மை. எல்லா மாநிலங்களுக்கும் தலா ஒரு வாக்கு என்கிற பரிந்துரையில் அர்த்தமில்லை. கிரிக்கெட்டே விளையாடப்படாத மணிப்பூருக்கும் அதிகமாக விளையாடப்படும் மகாராஷ்டிரத்திற்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் சமமான வாக்குரிமை என்பது அபத்தமானது. இதை கிரிக்கெட் வாரியம்
உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து விதிவிலக்கு பெற்றிருக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த மாற்றத்தையும் தடுக்க முற்பட்டது முட்டாள்தனம்.
உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான். அவ்வளவு பணம் கொட்டிக் கிடக்கிறது. கடந்த எட்டு வருடங்களாக கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ரூ.300 கோடிவரை வழக்குரைஞர்களுக்குக் கட்டணமாகச் செலவழித்திருப்பார்கள் என்றால், எந்த அளவுக்குக் கிரிக்கெட் வாரியத்திடம் பணம் புழங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி முடிவால் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இனிமேல்தான், உச்சநீதிமன்றம் புதிய நிர்வாகிகளை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறது, ஏதாவது குழுவை ஏற்படுத்தப் போகிறதா, அப்படி தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட அதிகாரம் வழங்கப்படும் உள்ளிட்ட பிரச்னைகள் எழப் போகின்றன. கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் தானே நேரிடையாகக் கண்காணிக்கப் போகிறது என்றால் அது வேண்டாத தலைவலியாகத்தான் இருக்கும்.
இப்போது இருக்கும் 70 வயதைக் கடந்த நிர்வாகிகள் அனைவரும் அகற்றப்பட்டு, அரசியல் தொடர்புடையவர்கள் விலக்கப்பட்டால், கிரிக்கெட் வாரியத்தை நடத்த அனுபவசாலிகளே இல்லாத நிலைமை ஏற்படுமே, அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது நீதிமன்றம்? இனிமேல்தான், உச்சநீதிமன்றத்திற்கு புதிய பல பிரச்னைகள் தொடங்கப் போகின்றன.
கிரிக்கெட் வாரியம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் முடிவிலும் தவறு காண முடியாது. ஆனால், லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் சில நடைமுறைக்கு ஒவ்வாதவை. அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிடிவாதம் பிடிப்பது கிரிக்கெட் விளையாட்டுக்கு நன்மை பயக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.