துல்லியத் தேர்வு!

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜெனரல்
Updated on
2 min read

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜெனரல் விபின் ராவத் பதவி ஏற்றிருக்கிறார். பணிமூப்பு அடிப்படையில் அல்லாமல், திறமையின் அடிப்படையிலும், எல்லைப் பாதுகாப்பில் அனுபவசாலி என்பதாலும் இவரைவிட மூத்த அதிகாரிகள் இருவரை ஒதுக்கிவிட்டு, விபின் ராவத்தை ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமித்திருக்கிறது மத்திய அரசு. இவரது அனுபவமும் பின்னணியும் இந்தப் பதவிக்கான தகுதியை இவருக்கு அளிக்கின்றன.
உத்தரகண்ட் மாநிலம் பெüரி கர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெனரல் ராவத்தின் குடும்பமே ராணுவத்துக்காக தலைமுறை தலைமுறையாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம். இவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் லச்சு சிங் ராவத்தும் ராணுவத்தில் பொறுப்பான பதவி வகித்து ஓய்வு பெற்றவர். டேராடூன் இந்திய ராணுவ அகாதெமியில் பயிற்சி பெற்று ராணுவத்தில் அதிகாரியாக இணைந்த விபின் ராவத் நமது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பியல் மற்றும் திறனியல் துறையில் நிறைஞர் (எம்.பில்.) பட்டம் பெற்றவர்.
மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பதவிகளில் உத்தரகண்டைச் சேர்ந்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "ரா' புலனாய்வு அமைப்பின் தலைவர் அனில் தாஸ்மனா, கடற்கரைப் படைத் தலைவர் ராஜேந்திர சிங், ராணுவ இயக்ககத்தின் தலைவர் அனில் பட் ஆகியோரைத் தொடர்ந்து, உத்தரகண்டைச் சேர்ந்த ஜெனரல் ராவத்தும் நியமிக்கப்பட்டிருப்பது, எந்த அளவுக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இப்போதைய அரசின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
பதவி ஏற்றதைத் தொடர்ந்து ஜெனரல் ராவத் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துகள், அவரது தலைமையில் இந்திய ராணுவத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எல்லையோர ஊடுருவல் தடுப்பு, எல்லைப்புறக் காவல் ஆகியவற்றில் ஜெனரல் ராவத் அனுபவசாலி என்பதால்தான் அவர் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரது பத்திரிகையாளர் சந்திப்பின்போதான உரையாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.
பாகிஸ்தான் குறித்தும், வருங்காலத்தில் பாகிஸ்தானுடன் போர் மூளுவதற்கான சாத்தியம் குறித்தும் விவரமாகத் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார் ஜெனரல் ராவத். பாகிஸ்தானுடனான போர் என்பது தவிர்க்கவே முடியாத நிலையில் மட்டுமே போரிடப்பட வேண்டும் என்று எச்சரிக்கையாகக் கூறியிருக்கும் ராணுவத்தின் தலைமைத் தளபதி, அப்படியே ஒரு சூழல் ஏற்பட்டால் அதற்கு பாகிஸ்தான்தான் காரணமாக இருக்குமே தவிர, இந்தியாவாக இருக்காது என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
"பாகிஸ்தானின் வசம் உள்ள காஷ்மீரப் பகுதிகளில் இயங்குகிற தீவிரவாதி முகாம்களின்மீது நாம் நடத்திய துல்லியத் தாக்குதல்
களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் போக்கை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டிருக்கிறது. துல்லியத் தாக்குதலுக்குப் பிறகும்கூட இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவின் சமாதான நல்லெண்ணத்தைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு செயல்படாவிட்டால் துல்லியத் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவது தவிர்க்க இயலாதது. துல்லியத் தாக்குதலுக்குப் பிறகுதான் காஷ்மீரத்தில் ராணுவத்தால் கட்டுப்பாட்டையும் அமைதியையும் ஏற்படுத்த முடிந்தது' என்று கூறியிருக்கிறார் ஜெனரல் ராவத்.
அவரது பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து, இதுவரை கடைப்பிடித்து வந்த தாக்குதலை எதிர்கொள்வது என்கிற போர் திறனியல் திட்டம் (ஸ்ட்ராடஜி) கைவிடப்பட்டு, எதிரியை எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் புதிய அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிக்க உத்தேசிக்கிறது என்பது தெரிகிறது. அதற்குத் தகுந்தாற்போல, நமது ராணுவத்திற்கு தளவாடங்கள் மட்டுமல்லாமல், விரைவான தொடர்புக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப சாதனங்களையும் போதிய அளவு வாங்கியாக வேண்டும். அதுமட்டுமல்ல, பாகிஸ்தான் நேரடிப் போரில் இந்திய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்போது, அணு ஆயுத யுத்தத்தில் ஈடுபட்டு விடாமல் பார்த்துக் கொள்ளும் அவசியமும் நமக்கு உண்டு.
ஜெனரல் ராவத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட இன்னொரு முக்கியமான பிரச்னை, ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது குறைகளை வெளிப்படுத்துவது தொடர்பானது. ராணுவத்தில் மட்டுமல்லாமல், அரசுத் துறை, தனியார் துறை என்றில்லாமல் எல்லா இடத்திலும் சமூக வலைதளங்களில் குறைகள் வெளியிடப்படுவது அதிகரித்துவரும் வேளையில் ஜெனரல் ராவத்தின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
ராணுவத்தில் ஏற்கெனவே இருக்கும் குறைகள் தீர்ப்பு முறையைப் பயன்படுத்தாமல் சமூக வலைதளங்களில் நேரடியாகப் பதிவு செய்வதை ஜெனரல் ராவத் வன்மையாகக் கண்டிக்கிறார். தனக்கு நேரிடையாகத் தங்கள் குறைகளை ராணுவ வீரர்கள் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது பெயர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறார் அவர். சமூக வலைதளங்களின் மூலம் கருத்துகளையும், குறைகளையும் தெரிவிப்பது என்பது பரவலான ஒழுக்கக் கேட்டுக்கு வழிகோலும் என்கிற ஜெனரல் ராவத்தின் கருத்து, காலத்திற்கு ஏற்ற எச்சரிக்கை. இதை சுதந்திரம் என்கிற பெயரில் அங்கீகரித்து அனுமதிப்பது விஷக்கிருமியை வளரவிடுவதற்கு நிகரானது!
ராணுவத்தின் தலைமை தளபதி விபின் ராவத்திற்கு நமது வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com