போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காட்டுமிராண்டித்தனம்!

பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப் படையினர், திங்கள்கிழமை அதிகாலையில் இந்திய எல்லையில் காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியிலுள்ள கிருஷ்ணகாட்டி என்கிற பகுதிக்குள்

News image
Updated On :3 மே 2017, 7:55 pm

ஆசிரியர்

பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப் படையினர், திங்கள்கிழமை அதிகாலையில் இந்திய எல்லையில் காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியிலுள்ள கிருஷ்ணகாட்டி என்கிற பகுதிக்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். சரமாரியாகத் தாக்குதல் நடத்தி சில வீரர்களைக் கொன்றதுடன் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பரம்ஜித் சிங் (42 வயது) என்பவரையும், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பிரேம் சாகர் (50 வயது) என்பவரையும் ஈவு இரக்கமே இல்லாமல் தலையைத் துண்டித்திருக்கிறார்கள். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடுவது பாகிஸ்தானிய ராணுவத்துக்குப் புதிதொன்றும் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்த செயல்பாட்டை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தொடங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததை மறுக்கவில்லை. இதுபோல எல்லையில் இந்திய வீரர்களின் தலையைத் துண்டிப்பது என்பது பாகிஸ்தான் ராணுவத்திற்குப் புதியதல்ல என்பதால், இதை யார் செய்திருக்கக் கூடும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.
போர்க்களத்தில் உடல் உறுப்புகளைத் துண்டிப்பது என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகளாவிய அளவில் போர்க் குற்றமாகக் கருதப்படுகிறது. 1949 ஜெனீவா ஒப்பந்தம் இதுபோன்ற கொடூரத்தைத் தடை செய்திருக்கிறது. அதைமீறி செயல்பட்டால், அது சர்வதேசச் சட்டத்தின் கீழ் போர்க் குற்றமாகக் கருதப்படும் என்பதுடன், இதுபோன்ற செயல்பாட்டுக்கு அனுமதி அளிக்கும் நாடுகள் 'போக்கிரி நாடு' என்று முத்திரை குத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது சர்வதேச மனித உரிமை ஆணையம்.
ராணுவ வீரர்கள் தமது நாட்டுக்காக உயிரைக் கொடுத்துப் போராடினாலும்கூட, எதிர் தேசத்து ராணுவ வீரர்களை ஒரு வீரனுக்கு உரிய மரியாதையுடன் நடத்துவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போதும், அதற்குப் பின்னாலும் பல படையெடுப்புகள் நடந்திருக்கின்றன என்றாலும், எந்தவொரு ராணுவ மோதலிலும் மாற்று நாட்டு வீரர்களை அவமரியாதைப்படுத்தும் வகையிலோ, போர்க் கைதிகளை மரியாதைக் குறைவாக நடத்தும் விதத்திலோ எந்த நாடும் நடந்து கொண்டதில்லை. இதற்கு ஒரே விதிவிலக்காகத் திகழ்வது பாகிஸ்தான் மட்டும்தான்.
கடந்த பல ஆண்டுகளாகவே, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி செய்து வந்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானிய ராணுவமே நேரிடையாக இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்க முற்படுவது என்பது கடந்த ஓராண்டாக அதிகரித்திருக்கிறது. இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலுக்கு இந்திய அரசு உடனடியாக பதிலடி கொடுக்காமல் இருந்தால், இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.
அப்படி தாக்குதல் நடத்தினால் அதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான போராக மாறினால், அது இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதை இந்திய அரசு உணர்ந்திருக்கும் அளவுக்குப் பாகிஸ்தான் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு சில பின்னணிகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்திய}பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தியா வந்திருக்கும் துருக்கி அதிபர் காஷ்மீர் பிரச்னையில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். எப்போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் கமர் பாஜ்வா எல்லைப்புறத்துக்கு விஜயம் செய்ய இருக்கும் 24 மணி நேரத்துக்கு முன்னால், இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது திட்டமிட்ட நடவடிக்கையாகத்தான் தோன்றுகிறது. பாகிஸ்தான் பிரதமருக்கும் ராணுவத்துக்கும் இடையே சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் மோதலின் வெளிப்பாடாகவும் இந்தத் தாக்குதலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் எதிர்வினை எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் சிக்கலான சவால். உடனடியாக எதிர்த் தாக்குதலை நடத்தாமல் இருந்தாலோ, எல்லைப்புறத்தில் இருக்கும் ராணுவத் தளங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தாமல் இருந்தாலோ, நமது ராணுவ வீரர்கள் மனம் சோர்ந்து விடுவார்கள்.
கார்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட அஜய் விக்ரம் சிங் குழு, நடுத்தர வயதிலான வீரர்களை எல்லைப் பாதுகாப்புப் படையில் வைத்திருக்கக் கூடாது என்று பரிந்துரைத்திருந்ததே, அது ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை என்கிற கேள்விக்கு ராணுவம்தான் பதிலளிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு நாம் நடத்திய துல்லியத் தாக்குதலால் எந்தவித பயனும் ஏற்படவில்லை என்பதும், எல்லைப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவில்லை என்பதும் தெளிவு. கடந்த டிசம்பர் மாதம்வரை நாம் 60 வீரர்களை பலி கொடுத்திருக்கிறோம். இது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளைவிடவும் அதிகம். அதுமட்டுமல்ல, துல்லியத் தாக்குதலுக்குப் பிறகுதான் அதிக ராணுவ வீரர்களை நாம் இழந்திருக்கிறோம்.
எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் ஏற்படுத்தி இருக்கும் பதற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நமது தலையங்கத்தில் பலமுறை வற்புறுத்தியும்கூட, மத்திய அரசு இன்னும் முழுநேரப் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு. இன்னும் காலம் தாழ்த்துவது வியப்பளிக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.