

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் காரணமாகக் காற்றை மாசுபடுத்தாத இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் வாகனங்களை நோக்கி உலகத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் சர்வதேச வாகனத் தயாரிப்பாளர்கள் மின்சார வாகனங்களைத் தயாரிப்பதில் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களான டெஸ்லா, மின்சார வாகன உற்பத்திக்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கிவிட்டிருக்கிறது. டெஸ்லாவைத் தொடர்ந்து ஏனைய பன்னாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான பி.எம்.டபிள்யூ., டேம்லர், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டயோட்டா ஆகியவையும் மின்சார வாகன உற்பத்திக்கான திட்டங்களுடன் களமிறங்கிவிட்டிருக்கின்றன. சீனாவில் கீலி நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வோல்வோ வாகனத் தயாரிப்பு நிறுவனம் 2019-க்குள் மின்சார வாகனத் தயாரிப்புக்கு முழுமையாக மாறிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறது.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிப்பது என்கிற இலக்கை நிர்ணயித்துக் கொள்வது எளிது. ஆனால், அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மின் ஏற்றத்துக்குமான (சார்ஜ்) வாகன பயண தூரம், போக்குவரத்து பாதைகளில் தங்குதடையில்லாமல் மின்னேற்றத்துக்கான இடங்கள் போன்றவற்றை உறுதிப்படுத்துவது சுலபமாக இருக்கப்போவதில்லை. ஆனாலும்கூட, முதலீட்டாளர்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களிலிருந்து (பாசில் ப்யூயல்ஸ்) இருந்து மின்சாரம் சார்ந்த பொருளாதாரத்துக்கு மாறுவது குறித்துப் பெருத்த வரவேற்பு காணப்படுகிறது.
இன்றைய நிலையில் உலகளாவிய அளவில் மின்சார வாகனங்களின் பங்கு 0.2 சதவீதம் மட்டுமே. அவையும்கூட குறைந்த திறன் உள்ள வாகனங்களின் காரணமாக உள்ளவையே தவிர, வியாபார ரீதியாக அன்றாடப் போக்குவரத்துக்கு பயன்படுபவையாக இல்லை. மின்சார வாகனங்களின் விலை தற்போதைய பெட்ரோல், டீசல் வாகனங்களைவிடக் குறைவாக இருப்பதும், ஒவ்வொரு மின் ஏற்றத்தின் மூலமும் வாகனம் பயணிக்கும் தூரம் கணிசமாக இருப்பதும் மட்டும்தான் மின்சார வாகனங்களைத் தற்போதைய பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைவிட வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற ஊக்குவிக்கும்.
டெஸ்லா நிறுவனம் பெரிய அளவில் விற்பனைக்கு கொண்டுவர விழையும் மின்சார வாகனங்கள் ஒவ்வொரு மின் ஏற்றத்திலும் குறைந்தது 340 கி.மீ. பயணிக்கும் விதத்தில் அமைய இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால், ஒருவேளை அந்த வாகனங்கள் வரவேற்பு பெறக்கூடும்.
இந்தியாவைப் பொருத்தவரை பல ஆண்டுகளுக்கு முன்பே இப்போது மகேந்திரா குழுமத்தில் அங்கமாகிவிட்டிருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த ரேவா மோட்டார் கார் நிறுவனம் மின்சார வாகன உற்பத்திக்கு ஆரம்பம் குறித்துவிட்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸ். மாருதி சுசூகி ஆகிய இந்தியாவின் இரண்டு முக்கியமான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் விரைவிலேயே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்து விட்டிருக்கிறார்கள்.
உலகளாவிய அளவிலும் மின்சார வாகனத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2016-இன் முதல் காலாண்டை விட, 2017-இன் முதல் காலாண்டு மின்சார வாகனங்களின் விற்பனை 40 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இப்போது உலகில் இயங்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 1,90,700. பிரான்ஸ், 2015-லேயே 7,000 யூரோக்களுக்கு குறைவான விலையில் மின்சார வாகனம் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முனைப்புடன் அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. 2040-க்குள் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்று பிரான்ஸ் அறிவித்து விட்டிருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் இதுகுறித்த தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருக்கின்றன.
மின்சார வாகனத் தயாரிப்பின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது மின்கல (பேட்டரி) தயாரிப்பாகத்தான் இருக்கும். வாகனத்தின் விலையும் குறைவாக இருக்கவேண்டும். வாகனம் பயணிக்கும் தூரமும் அதிகமாக இருக்கவேண்டும் என்று சொன்னால் மின்சாரத்தை தேக்கி வைக்கும் மின்கலம் மிகவும் திறனுள்ளதாகவும், அதேநேரத்தில் சிறியதாகவும் அமைய வேண்டும். கோடிக்கணக்கான மின்கலங்களை தயாரிப்பதற்குத் தேவையான லிதியம், கோபால்ட், நிக்கல் ஆகிய கனிமங்கள் தேவைப்படும் என்பது மட்டுமல்ல, அவற்றை மறுசுழற்சி செய்வது எப்படி என்பது குறித்தும், அவற்றின் விலை குறித்தும் சிந்தித்தாக வேண்டும்.
நரேந்திர மோடி அரசு 2030-க்குள் இந்தியாவை முற்றிலுமாக மின்சார வாகனத்துக்கு மாற்றுவது என்று திட்டமிடுகிறது. மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அதன் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைவடிவ எரிபொருள்களுக்கான அந்நியச் செலாவணியை (சுமார் ரூ.5 லட்சம் கோடி) மிச்சப்படுத்த முடியும் என்று கருதுகிறது அரசு.
அதெல்லாம் சரி, இப்போது அரசுக்கு கிடைக்கும் நிதி வருவாயில் கணிசமான அளவு பெட்ரோல், டீசலில் இருந்துதான் பெறப்படுகிறது. அதை இழக்க அரசு தயாரா? பல லட்சம் கோடி ரூபாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவசரப்பட்டு மின்சார வாகனங்களுக்கு மாறினால், பொருளாதாரம் தடம்புரண்டு விடாதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எல்ஐகே வெளியீட்டுத் தேதி புரோமோவுடன் அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட மிட்செல் ஸ்டார்க்; காரணம் என்ன?

மும்பையில் டெலிவரி டெம்போவிலிருந்து 27 எல்பிஜி சிலிண்டர்கள் திருட்டு!

இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 202 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

