சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

வேண்டும்தான், ஆனால்...

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இந்திய

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 9:27 pm

ஆசிரியர்

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இந்திய விஜயத்தின் முடிவில், விமானப் போக்குவரத்து, அணுசக்தி, வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம் என்று 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன என்றாலும்கூட, ஆமதாபாத் -மும்பைக்கு இடையே அதிவிரைவு புல்லட் ரயில் ஒப்பந்தம்தான் பரவலான எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த அதிவிரைவு ரயில் திட்டத்தின் மூலம் இந்தியாவின் ரயில்வே துறை நவீனப்படுத்தப்படுவதுடன் இந்தியாவின் மேற்கு பகுதியில் தொழில் வளர்ச்சியும் கட்டமைப்பு வளர்ச்சியும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் ரயில் 1853-இல் மும்பைக்கும் தாணேக்கும் இடையே உள்ள 34 கி.மீ. தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்தது. 160 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும்கூட இந்திய ரயில்வேயின் சராசரி வேகம் இரட்டிப்பாகி இருக்கிறது, அவ்வளவே. இந்தியாவின் மிக அதிவிரைவு ரயிலான தேஜஸ் ஒரு மணி நேரத்துக்கு 160 கி.மீ. வேகத்தில் விரைகிறது. அரசின் இப்போதைய அதிவிரைவு ரயில்வே திட்டம் முழுமை பெற்றால், 2022-இல் அதைவிட இரட்டிப்பு வேகத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.
மும்பைக்கும் ஆமதாபாத்துக்கும் இடையேயான 508 கி.மீ. தூரத்தை 2 அல்லது 3 மணி நேரத்தில் புல்லட் ரயில் கடக்கும். ஷினாகாசென் டெக்னாலஜிஸ் நிறுவனம் நம்பிக்கைக்கும் தொழில்நுட்பத்துக்கும் பெயர் போனது. 1964-இல் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் புல்லட் ரயில் திட்டம் இதுவரை ஒரு விபத்தைக் கூட சந்தித்ததில்லை என்பதும், அதன் சராசரி காலதாமத நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் எதிர்பார்ப்பின்படி மும்பை - ஆமதாபாத் அதிவிரைவு புல்லட் ரயில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பயணிகளுக்கும் அதிகமானோரை 2023-இல் ஈர்க்கும். ரயிலில் பயணிப்பதை விட்டுவிட்டு விமானத்தில் பயணிக்கத் தொடங்கியிருப்போரை மட்டுமல்லாமல், சாலை போக்குவரத்து பயணிகளையும் இந்த புல்லட் ரயில் ஈர்க்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. விமானப் பயணத்தை போல் அல்லாமல் மும்பைக்கும் ஆமதாபாத்துக்கும் இடையே உள்ள பல சிறு நகரங்களை இந்த ரயில் இணைப்பதால், வழிநெடுக உள்ள பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும், ஏறத்தாழ 40 ஆயிரம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் இந்த அதிவிரைவு புல்லட் ரயில் திட்டம் குறித்து அரசு எதிர்பார்க்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவை உருவாக்குவோம்' திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த நவீன புல்லட் ரயில் திட்ட தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள ஜப்பான் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏனைய பல துறைகளிலும் ஜப்பானின் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கக் கூடும் என்பது இந்த ஒப்பந்தத்தினால் கிடைக்கும் நன்மை.
புல்லட் ரயில் திட்டத்தைப் பொருத்தவரை இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஜப்பானுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தோனேசியாவும் தாய்லாந்தும், ஜப்பானை நாடாமல் சீனாவுடன் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டிருக்கும் நிலையில், வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் தனது முக்கியத்துவத்தை ஜப்பான் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
புல்லட் ரயில் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனங்களை முன்வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய இரண்டு முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பவன் பன்சல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ரயில்வே அமைச்சர்களாக தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது என்பதை அந்தக் கட்சி மறந்திருக்க முடியாது.
அதேநேரத்தில் இந்திய ரயில்வே தொடர்பான வேறு சில நடைமுறை உண்மைகளை நாம் சிந்திக்காமலும் இருக்க முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக நடந்த இரண்டு விபத்துகள் காரணமாக முந்தைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தார்மிக பொறுப்பேற்று பதவி விலகினார். கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பதவியேற்று இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. மூன்று ரயில் விபத்துகள் நடந்தேறி விட்டிருக்கின்றன.
தண்டவாளங்களை மேம்படுத்துதல், பாலங்களை உறுதிப்படுத்துதல், சேவை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தொடர்ந்த செப்பனிடல், மேம்படுத்துதல் என்று ரயில்வேத் துறையை நவீனப்படுத்த மிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிறது. இதற்கெல்லாம் எந்த நாடும் உதவ முன்வராது. ஒருபுறம் புல்லட் ரயில் இயக்க ஆசைப்படும் ரயில்வே துறை ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வியை நாம் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
ஜப்பானைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக, இப்போதைய பிரதமர் ஷின்úஸா அபேயை பொருத்தவரை இந்தியாவுடன் அவருக்கு உணர்வுபூர்வமான நெருக்கம் உண்டு. 1950-இல் ஜப்பான் பிரதமராக இருந்த அவரது தாத்தா நோபுசுக்கே கிஷி, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு சர்வதேச அளவில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஜப்பானை அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு தனிமைப்படுத்த மறுத்ததை நன்றியுடன் அடிக்கடி நினைவுகூறுவார் என்பதுதான் அதற்குக் காரணம். புல்லட் ரயில் வேகத்தில்
இல்லாவிட்டாலும் இந்திய ரயில்வேயின் வேகத்திலாவது இந்திய - ஜப்பான் உறவு மேம்படுகிறது என்பதுவரை மகிழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.