அனுபவமின்மையின் விளைவு!
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவி நீக்கத்துக்கு அனுமதி அளித்திருக்கிறார்.


தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவி நீக்கத்துக்கு அனுமதி அளித்திருக்கிறார். குடியரசுத் தலைவரின் முடிவு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விவாதத்துக்கு ஆட்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் அனுமதி என்பது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படிதான் உள்ளது என்பதால், இதை ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்றுதான் கருத வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி இந்தப் பிரச்னையை தில்லி உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தொடுத்திருக்கும் வழக்கின் விசாரணை மார்ச் 20-ஆம் தேதிதான் தொடங்கும். பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் அதை எதிர்த்து வழக்குத் தொடர இருக்கிறார்கள். தங்களது தரப்பு வாதத்தைத் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் 2015-இல் தில்லியில் ஆட்சி அமைத்தது. அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இருப்பதால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேரை, 2015 மார்ச் மாதம் பாராளுமன்றச் செயலாளர்களாக நியமித்தார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால். அவரது இந்த முடிவுக்கு தில்லியின் அன்றைய துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. அதனால், 2016-இல் தில்லி உயர்நீதிமன்றம் பாராளுமன்றச் செயலாளர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வழக்குரைஞர் ஒருவர் இந்த உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதாயம் பெறும் எந்தவொரு அரசுப் பதவியும் வகிக்க முடியாது என்று விதிமுறை இருக்கிறது. இதுபோல பாராளுமன்றச் செயலாளர்களை இமாசலப் பிரதேசம் (2005), கோவா (2009), மேற்கு வங்கம் (2015) உள்ளிட்ட மாநிலங்கள் நியமித்தபோது, அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
வேறு சில மாநிலங்கள் இதேபோல பாராளுமன்றச் செயலாளர்களை நியமித்திருக்கின்றன. ஆனால், அந்த மாநிலங்கள், 'பாராளுமன்றச் செயலாளர்கள் பதவியை ஆதாயம் பெறும் பதவி அல்ல' என்று சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து தப்பித்துக் கொண்டிருக்கின்றன. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஆட்சி அதிகாரத்தில் அனுபவம் இல்லாத புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி எடுக்காமல் விட்டதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்.
தனது தவறைப் புரிந்துகொண்டு 2016-இல் ஒரு சட்டத் திருத்தத்தை ஆம் ஆத்மி கட்சி அரசு கொண்டு வந்தது. அந்தச் சட்டத் திருத்தத்துக்குத் துணை நிலை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்கிற காரணத்தால் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதனை நிராகரித்தார். தில்லி உயர் நீதிமன்றமும் பாராளுமன்றச் செயலாளர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
பாராளுமன்றச் செயலாளர்களுக்கு எந்தவித ஊதியமோ, சலுகைகளோ தரப்படாது என்பதை தில்லி அரசு தெளிவுபடுத்தி இருந்தது. அவர்களது பயன்பாட்டுக்கு அரசின் சார்பில் கார் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சகங்களில் அலுவலகங்கள் தரப்படும் என்றும் கூறியிருந்தது. அதுவேகூட ஆதாயம் தரும் பதவியின் வரம்புக்குள் வரும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதால், அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் இந்த முடிவெடுத்திருக்கிறார்என்று தோன்றுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தவறு காண முடியாது. இதேபோல ஜெயா பச்சன் விவகாரத்தில் ஆதாயம் பெறும் பதவி பிரச்னை ஏற்பட்டது. தான் எந்தவித ஊதியமோ பயனோ அந்தப் பதவியால் அடையவில்லை என்கிற ஜெயா பச்சன் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பதவிக்கு ஊதியமோ, இன்னபிற ஆதாயங்களோ வழங்கப்படும் என்றால், அதைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும் ஆதாயம் பெறும் பதவி என்கிற காரணத்தால் பதவி நீக்கத்துக்கு உள்ளாக வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆம் ஆத்மி கட்சி முன்வைத்த வாதம் என்னவென்றால், ராஜஸ்தான், கர்நாடகம், தெலங்கானா சட்டப் பேரவைகளில் பாராளுமன்றச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பதுதான். அதற்குக் காரணம், மேலே குறிப்பிட்ட சட்டப் பேரவைகளில் பாராளுமன்றச் செயலாளர் என்கிற பதவி ஆதாயம் பெறும் பதவி அல்ல என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது என்பதுதான். இயற்கை நீதியின்படி பார்த்தால் ஒருசில மாநிலங்களில் பாராளுமன்றச் செயலாளர்கள் பதவி, ஆதாயம் பெறும் பதவியாகவும், வேறுசில மாநிலங்களில் அப்படி இல்லாமலும் இருப்பது மிகப்பெரிய ஜனநாயக முரண்.
ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை 20 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடாது. 70 உறுப்பினர்கள் உள்ள சட்டப்பேரவையில் 2015-இல் 67 இடங்களை வென்று ராட்சதப் பெரும்பான்மையுடன் அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனாலும்கூட 20 பேர் பதவி நீக்கம் செய்யப்படுவது என்பது அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவாகத்தான் இருக்கும். இந்தத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படும்போதுதான் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு சரிந்திருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.
தான் பதவி ஓய்வு பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னால், சம்பந்தபட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், தில்லி அரசுக்கும் தங்களது வாதத்தை முன்வைக்க வாய்ப்பளிக்காதது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஏ.கே.ஜோதிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய களங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...