வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கட்டணம் தீர்வாகாது!

உலகளாவிய அளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலாக மாறியிருக்கிறது நெகிழி (பிளாஸ்டிக்). அகில இந்திய அளவில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 40,000 டன்

News image
Updated On :22 நவம்பர் 2018, 8:06 pm

ஆசிரியர்

உலகளாவிய அளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலாக மாறியிருக்கிறது நெகிழி (பிளாஸ்டிக்). அகில இந்திய அளவில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 40,000 டன் நெகிழிக் கழிவு உருவாகிறது. கடந்த 2015-இல் வெறும் 15, 342 டன்னாக இருந்த நெகிழிக் கழிவு, இப்போது 160 % அதிகரித்திருக்கிறது. 
இந்தியாவிலேயே தலைநகர் தில்லியில்தான் மிக அதிகமான நெகிழிக் கழிவு உருவாகிறது. அதற்கு அடுத்தபடியாக, சென்னையும் கொல்கத்தாவும் அதிகமாக நெகிழிக் கழிவுகளை எதிர்கொள்கின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ 8,000-க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும், 10,000-க்கும் அதிகமான அனுமதி பெறாத தொழிற்சாலைகளும் நெகிழி மறு சுழற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றில் நேரடியாக இரண்டு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக நான்கு லட்சம் பேரும் வேலைவாய்ப்புப் பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
மத்திய சூற்றுச்சூழல் அமைச்சகம் 2017-இல், நெகிழிக் கழிவு பிரச்னையை எதிர்கொள்வதற்காக ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. அந்தக் குழு, நெகிழிக் கழிவுகளை சேகரித்துக் கையாளும் பொறுப்பை நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. திடக்கழிவு மேலாண்மைச் சட்டம் 2016, நெகிழிக் கழிவு மேலாண்மைச் சட்டம் 2016 ஆகியவற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கியிருக்கிறது. 
திடக்கழிவு மற்றும் நெகிழிக் கழிவு மேலாண்மைச் சட்டங்கள், நெகிழிக் கழிவுகளை சேகரிப்பது, மறு சுழற்சிக்கு உள்படுத்துவது, அகற்றுவது ஆகிய பொறுப்புகளை நெகிழி உற்பத்தியாளர்கள் மீது சுமத்துகின்றன. இந்தக் கடுமையான சட்டம் மட்டுமே நெகிழியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குத் தீர்வு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆனால், நெகிழிக் கழிவைக் கையாளும் பொறுப்பை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது நெகிழி உற்பத்தியாளர்களின் நியாயமான கருத்து.
உலகிலேயே மிக அதிகமான நெகிழிப் பயன்பாடு அமெரிக்காவில்தான். ஆனால், மிகவும் திறமையாக நெகிழிக் கழிவுகளை சேகரித்து அவற்றை அகற்றுவதில் அமெரிக்கா தேர்ச்சி பெற்றிருக்கிறது. மொத்த நெகிழிக் கழிவுகளில் 10% மட்டுமே மறுசுழற்சிக்கு உள்படுத்தப்படுகிறது. 15% எரிக்கப்பட்டு எரிசக்தியாக மாற்றப்படுகிறது. மீதமுள்ள நெகிழிக் கழிவுகள், கட்டடங்கள் கட்டும்போது பள்ளங்களை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவில் 39.1%, சீனாவில் 22% நெகிழிக் கழிவுகள் மறு சுழற்சிக்கு உள்படுத்தப்படுகின்றன. மீதமுள்ளவை அங்கேயும் பிரச்னையாகத்தான் இருக்கின்றன.
அமெரிக்காவில் நெகிழிப் பயன்பாடு ஆண்டொன்றுக்கு ஒருவருக்கு 109 கிலோ என்றால், பிரேஸிலில் 32 கிலோ, ஐரோப்பாவில் 65 கிலோ, சீனாவில் 38 கிலோ. உலக சராசரி அளவு 28 கிலோ. இந்தியாவில் இதுவே 2014-15-இன் புள்ளிவிவரப்படி வெறும் 11கிலோ மட்டுமே. 2022-இல் இதுவே 20 கிலோவாக உயரக்கூடும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் மதிப்பீடு தெரிவிக்கிறது. 
இந்தியாவில் நெகிழித்துறை என்பது ரூ.1,10,000 கோடி வணிகம் உடையது. ஏறத்தாழ 30,000-க்கும் அதிகமான நெகிழி உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 90% முதல் 95% உற்பத்தியாளர்கள் சிறு தொழில் முனைவோர். 40 லட்சத்துக்கும் அதிகமானோர் நெகிழி தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். நெகிழி குறித்து எடுக்கும் எந்தவொரு முடிவும், அகில இந்திய அளவில் நெகிழி தயாரிப்பாளர்களையும் அதில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களையும் பாதிக்கக்கூடும். அதனால்தான் எந்தவொரு கடுமையான நடவடிக்கையையும் எடுக்க மத்திய-மாநில அரசுகள் தயங்குகின்றன.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வுக் குழுவில் ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மத்திய -மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட அந்தக் குழு, நெகிழி தயாரிப்பாளர்கள் நெகிழிக் கழிவுகளைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது நடைமுறை சாத்தியமல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. நெகிழி சேகரிப்பு, அவற்றைப் பிரித்தெடுப்பது, மறு சுழற்சிக்கு உள்படுத்துவது ஆகியவை நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.
உற்பத்திக்கு ஏற்றாற்போல, நெகிழித் தயாரிப்பாளர்களிடமிருந்து நெகிழிக் கழிவு மேலாண்மைக்காக ஒரு கட்டணம் வசூலிப்பது என்றும், அதன் மூலம் நெகிழிக் கழிவுகளைச் சேகரிப்பது, பிரித்தெடுப்பது, அழிப்பது, மறு சுழற்சிக்கு உள்படுத்துவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது. நெகிழிப் பைகளை மண்ணில் போடும்போது அவை மக்கி மண்ணோடு மண்ணாக மாறுவதற்கு 1000 ஆண்டுகள் ஆகக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நெகிழி மேலாண்மை என்பது மிக மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியிருப்பதில் வியப்பில்லை. 
மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பொருள்களை அழிப்பதற்கு உடனடியாக முயற்சி மேற்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அபாயத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும். மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் பொறுப்பை ஒப்படைப்பதால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது. நெகிழி உற்பத்தியாளர்களுக்கும், நெகிழிக் கழிவு மேலாண்மையில் ஏதாவது பங்கு இருந்தாக வேண்டும். கட்டணம் செலுத்தி அவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதிப்பது தவறு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.