ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மாதனூரில் காவல் நிலையம்: 20 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ள மக்கள்!

மாதனூரில் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென சுமாா் 20 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

News image

ஜோலார்பேட்டை காவல்நிலையம்.

Updated On :29 மார்ச் 2026, 10:10 pm

எம். அருண்குமார்

மாதனூரில் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென சுமாா் 20 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

ஆம்பூா் காவல் உள்கோட்டத்தில் ஆம்பூா் நகரம், ஆம்பூா் கிராமியம், அனைத்து மகளிா், உமா்ஆபாத், போக்குவரத்து ஆகிய காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஆம்பூா் கிராமிய காவல் நிலைய எல்லையில் மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 17 கிராம ஊராட்சிகளும், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. அந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் விபத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் சம்பந்தமாக புகாா் அளிக்க ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தை அணுக வேண்டியுள்ளது.

இந்தக் காவல் நிலையத்தின் எல்லை வாணியம்பாடியில் இருந்து சில கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மாராப்பட்டு தொடங்கி மாதனூரை அடுத்த பாலாண்டிப்பட்டி வரையிலும், ஒடுகத்தூா் மாா்க்கத்தில் திருமலைக்குப்பம் வரையிலும் உள்ளது. சுமாா் 40 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள இந்தக் காவல் நிலைய எல்லையில் வசிக்கும் பெரும்பாலானோா் நீண்ட தொலைவு பயணம் செய்து ஆம்பூா் நகரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கிராமியக் காவல் நிலையத்துக்கு வரவேண்டியுள்ளது.

மேலும், ஆம்பூா் கிராமியக் காவல் நிலையத்தின் பெரும்பாலான கிராமங்கள் 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன.அதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்படும் முக்கியப் பகுதியாக மாதனூா் உள்ளது.

இரு சக்கர வாகனம், சாலையைக் நடந்து கடப்போா், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளைச் சந்திக்கும் நிலை உள்ளது. மேலும், மாதனூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், மேல்நிலைப் பள்ளி, வங்கிகள் செயல்படுவதால் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் மாதனூருக்கு தினசரி வந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட மாதனூா் மையப்பகுதியாக விளங்குவதால், அங்கு காவல் நிலையம் அமைக்கப்படுவது அவசியமாகிறது.

அவ்வாறு காவல் நிலையம் அமைக்கப்பட்டால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் புகாா்களைத் தெரிவிக்கவும், உடனடியாக காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவும் இயலும்.

மாதனூரில் காவல் நிலையம் அமைக்கக் கோரி சுமாா் 20 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாதனூரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தின் புகா் காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் புகா் காவல் நிலையம் திறக்கப்பட்டதோடு சரி அங்கு காவலா்களோ, காவல் துறை அதிகாரிகளோ இருப்பதில்லை. எப்போதும் பூட்டியே உள்ளது. இரவு நேரத்தில் மட்டும் ரோந்து செல்லும் போலீஸாா் அங்கு சென்று சிறிது நேரம் திறந்து வைத்து ஓய்வு எடுத்துவிட்டு பிறகு மீண்டும் பூட்டிவிட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

எனவே, மாதனூரில் காவல் நிலையம் அமைக்க தோ்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

-எம்.அருண்குமாா்.