வேண்டாம் சிபிஐ!
ஒருபுறம் மத்திய புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.


ஒருபுறம் மத்திய புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். இன்னொருபுறம் மத்திய புலனாய்வுத் துறையில் காணப்படும் ஊழல்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களும் தங்களது மாநிலம் சார்ந்த வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறை தலையிடக் கூடாது என்று உத்தரவே பிறப்பித்திருக்கின்றன.
சிபிஐ என்பது தேசிய புலனாய்வு அமைப்பைப்போல நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதல்ல. தில்லி சிறப்புக் காவல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் மத்திய புலனாய்வுத் துறை. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதால், எந்த ஒரு மாநிலத்திலும் விசாரணை நடத்தவோ, புலனாய்வு செய்யவோ, சோதனை நடத்தவோ அந்த மாநில அரசின் ஒப்புதலை சிபிஐ பெற்றாக வேண்டும்.
ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் மத்திய அரசு துறைகளையும் ஊழியர்களையும் விசாரிக்கும் அதிகாரம் மட்டும்தான் மத்திய புலனாய்வுத் துறைக்கு உண்டு. சட்டம் அப்படி இருந்தாலும்கூட, எல்லாவித வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைப்பது என்பது நம்பகத்தன்மை வாய்ந்தது என்கிற மாயத் தோற்றம் இருப்பதால், மாநில அரசுகளும் தங்களது பொறுப்பைத் தட்டிக்கழிக்க, துப்பு துலக்க முடியாத வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு மாநிலத்திலும் மத்திய புலனாய்வுத் துறை எந்தவோர் ஊழல் குறித்தோ, குற்றச் செயல்பாடு குறித்தோ விசாரணை நடத்த வேண்டுமானால், அந்த மாநில அரசிடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறையை இதுவரை பயன்படுத்தி மத்திய புலனாய்வுத் துறைக்குத் தங்களது மாநிலத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கும் துணிவு எந்த மாநிலத்துக்கும் ஏற்படவில்லை. இப்போது ஆந்திரம் அதற்கு வழிகாட்டியிருக்கிறது. மேற்கு வங்கம் அதை வழிமொழிந்து செயல்பட முற்பட்டிருக்கிறது.
ஆந்திர அரசின் உள்துறை, ஆணை 176-இன் அடிப்படையில் ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆந்திர அரசின் முதன்மைச் செயலாளர் ஏ.ஆர். அனுராதா இந்த ஆணையைப் பிறப்பித்திருக்கிறார். தில்லி சிறப்புக் காவல் சட்டம் 1946-இன் பிரிவு 6 அளித்திருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் ஆந்திர அரசு கடந்த 2018 ஆகஸ்ட் 3-ஆம் தேதி சிபிஐக்கு வழங்கியிருக்கும் பொது அனுமதியைத் திரும்பப் பெற்றிருக்கிறது. அதன் மூலம் தில்லி சிறப்புக் காவல் துறை மேலே குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் எந்த ஓர் அதிகாரத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று அந்த அரசாணை தெரிவிக்கிறது.
தில்லி சிறப்புக் காவல் சட்டத்தின் 6-ஆவது பிரிவின்படி, சட்டப்பிரிவு 5-இல் காணப்படும் எந்த ஓர் அதிகாரத்தையும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தில்லி சிறப்புக் காவல் துறையால் யூனியன் பிரதேசத்திலோ, மத்திய அரசு தொடர்பான அலுவலகங்களிலோ, ரயில்வே பகுதியிலோ அல்லாத மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்த முடியாது. இதன் அடிப்படையில் மத்திய புலனாய்வுத் துறைக்கு ஆந்திர அரசு தனது மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட எந்த ஒரு வழக்கிலும் தலையிடவோ, புலனாய்வு செய்யவோ இனிமேல் அனுமதி அளிக்காது. அதே நேரத்தில் இதற்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளில் விசாரணை நடத்தும் அதிகாரம் மத்திய புலனாய்வுத் துறைக்கு உண்டு.
ஆந்திரத்தில் ஆட்சியிலிருக்கும் சந்திரபாபு நாயுடு அரசு மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்தபோது சிபிஐக்கு தனது மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்கப் பொது அனுமதி வழங்கியிருந்தது. இப்போது பாஜகவுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையேயான உறவு கசந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவும், மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய புலனாய்வுத் துறைக்குக் கொஞ்சநஞ்சம் இருக்கும் மரியாதையை மேலும் குறைக்கவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இதை முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் முடிவு என்று எடுத்துக்கொள்ளலாமே தவிர, சிபிஐயை முற்றிலுமாக அகற்றி நிறுத்திவிட்டதாகக் கருதிவிட முடியாது. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவின்படி, ஆந்திரத்திலும், மேற்கு வங்கத்திலும் இன்னும்கூட சிபிஐயால் வழக்குகளை விசாரிக்க முடியும். அந்த வழக்குகள் தில்லியில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மாநில அரசின் உள்துறை ஆணை அதைக் கட்டுப்படுத்தாது. உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ ஒரு மாநிலத்தில் வழக்கு சரியாக துப்புத் துலக்கப்படவில்லை என்றால், அந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் விசாரணைக்கு உத்தரவிடுவதை மாநில உள்துறையின் ஆணை தடுத்துவிட முடியாது.
நரேந்திர மோடி அரசுக்கு எதிரான அரசியல் நடவடிக்கையாக ஆந்திரம், மேற்கு வங்க மாநிலங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றன. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்கள், தங்களது மாநிலங்களில் மத்திய புலனாய்வுத் துறைக்கு அனுமதி மறுக்கக் கூடும். அதனால் பயனிருக்காது என்றாலும்கூட, மத்திய புலனாய்வுத் துறையின் மரியாதை மேலும் குலைகிறது என்பதை மறுக்க இயலாது.
தேசிய அளவில் ஊழல் இல்லாத, நேர்மையும் திறமையும் வாய்ந்த மத்திய புலனாய்வுத் துறை என்பது மிக மிக அவசியம் என்பதை நாம் உணர வேண்டும். சிபிஐ தனது கெளரவத்தை எப்படி மீட்டெடுக்கப் போகிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...