/

புத்திசாலித்தனமான மறுபதிப்பு!

17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 8:42 pm

ஆசிரியர்


17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக கடந்த திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 2014 தேர்தல் அறிக்கையின் மறுபதிப்புதான் இந்தத் தேர்தல் அறிக்கை என்று காங்கிரஸ் கட்சியும், ஏனைய எதிர்க்கட்சிகளும் பாஜகவின் 2019-க்கான தேர்தல் அறிக்கை குறித்து தெரிவித்திருக்கும் கருத்தை ஒரேயடியாக மறுத்துவிட முடியாது. ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த பிறகு மீண்டும் மக்களைச் சந்திக்கும்போது நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுடன்தான் எந்த ஒரு கட்சியும் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும் என்பதால், அதை ஒரு குறையாகக் கருதிவிடவும் முடியாது.
கடந்த ஐந்தாண்டுகளில் ஊரக வளர்ச்சி, கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் நரேந்திர மோடி அரசு அடைந்திருக்கும் வெற்றிகளையும் சாதனைகளையும் பட்டியலிட்டு, அவற்றின் நீட்சியாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தனது செயல்திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது பாஜக. நரேந்திர மோடியின் தலைமைதான் பாஜக தேர்தல் அறிக்கையின் பின்னணி இசை என்றால், 2022-இல் இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் நிறைவேற்ற வேண்டிய 75 இலக்குகள்தான் பாஜக தேர்தல் அறிக்கையின் புதுமை அம்சம். 
பாஜகவின் தேர்தல் அறிக்கையை மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம். 
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்ததுபோலவே, பாஜக தனது தனித்துவமான பலமாக தேசபக்தியையும் தேசத்தின் பாதுகாப்பையும் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான முனைப்புடன் கூடிய செயல்திட்டமும், ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தேர்தல் அறிக்கையில் முன்னுரிமை பெறுகின்றன. 
ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்கள் வாங்குவதை விரைவுபடுத்த உறுதியளிக்கிறது தேர்தல் அறிக்கை. ஆனால், ராணுவத்தின் தேவைக்கேற்ப போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் இருப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எப்போதும்போல இந்தத் தேர்தல் அறிக்கையிலும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை அகற்றுவது குறித்துக் குறிப்பிடுகிறது. 
பாஜகவின் தேர்தல் அறிக்கையின் இரண்டாவது முக்கியமான அம்சம், கிராமப்புற இந்தியாவுக்கும் விவசாயத்துக்கும் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம். கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து காணப்படும் வேளாண் இடரும், 2014 தேர்தல் அறிக்கையில் தரப்பட்டிருந்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருப்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்கிற 2014 வாக்குறுதி இலக்கை எட்டுவதாகக் குறிப்பிடுகிறது தேர்தல் அறிக்கை. 
அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.22 லட்சம் கோடிக்கும் மேலாக கிராமப்புற வளர்ச்சிக்காக செலவிடப்படும் என்றும், ஒவ்வொரு விவசாயிக்கும் பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000 மானியம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1 லட்சம் வரை வழங்குவது என்பது புதுமையான அம்சம். இதன் மூலம் கிராமப்புறங்களிலும் விவசாயிகள் மத்தியிலும் பாஜக ஆட்சியின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை அகற்ற முயற்சிக்கிறது.  
பாஜக தேர்தல் அறிக்கையின் மூன்றாவது முக்கிய அம்சம், பொருளாதாரம் குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் தரப்பட்டிருக்கும் வாக்குறுதிகள். இந்தியாவின் வறுமை விகிதத்தை 2024-க்குள் 10%-க்குள் கொண்டுவருவது; 2025-க்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது; 2024-க்குள் இந்தியாவிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் குடிநீர் குழாய் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது; ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைப்பதை உறுதிப்படுத்துவது என்று பொருளாதாரம் தொடர்பான பல வாக்குறுதிகளை முன்மொழிகிறது 2019-க்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை. 
உயர் கல்விக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு; இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள்; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 1.5 லட்சம் மருத்துவ நல்வாழ்வு மையங்கள்; 1,400 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையை எட்டுவது உள்ளிட்டவை தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் வேறு சில அம்சங்கள். 
தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை இரட்டிப்பாக்குவதற்கு கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு; துறைமுகங்களின் விரிவாக்கம்; இந்தியாவில் 150 விமான நிலையங்கள் என்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்த வரைபடத்தை பாஜகவின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களுக்குக் காட்சியளிக்கிறது. 
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் போலல்லாமல், ஓரளவுக்குப் பொருளாதாரம் குறித்த சிந்தனையுடனும், நிதி நிலைமையை உணர்ந்தும் பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அயோத்தியில் ராமர் கோயில், சபரிமலைப் பிரச்னை உள்ளிட்ட விவாதத்துக்குரிய வழக்கமான அம்சங்கள் இந்த முறையும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் காணப்படுவது வியப்பை ஏற்படுத்தவில்லை. அவை இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். 
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையையும், தேசப் பாதுகாப்பையும் முன்னிறுத்தி, கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் குறைபாடுகளையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் பின்னுக்குத்தள்ளி, புத்திசாலித்தனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் 2019 மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.