/

தொடங்கியது தேர்தல் திருவிழா!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக முயற்சி நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது.

News image
Updated On :11 ஏப்ரல் 2019, 8:41 pm

ஆசிரியர்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக முயற்சி நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது. 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முதல்கட்ட வாக்கெடுப்பில் வாக்காளர்கள் பங்கு பெற்றனர். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பாலான தொகுதிகளிலும் இந்த முதல்கட்ட வாக்கெடுப்பில் பங்கு பெற்றன. முதல்கட்ட வாக்கெடுப்பில்  பங்கு பெறும் உத்தரப் பிரதேசம், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளும் இதில் அடக்கம். மக்களவைக்கு மட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசம், அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தொகுதிகளும், ஒடிஸா மாநிலத்தில் 147 சட்டப்பேரவை இடங்களில் 28 தொகுதிகளும் முதல்கட்ட வாக்குப்பதிவில் கலந்துகொண்டன. 
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, மத்திய அமைச்சர் வி.கே. சிங், மகேஷ் சர்மா, கிரண் ரிஜிஜு ஆகியோர் முதல்கட்ட வாக்கெடுப்பில் இடம் பெற்ற முக்கியப் பிரமுகர்கள். விசாகப்பட்டினத்திலிருந்து என்.டி.ராமாராவின் மகளும், முன்னாள் காங்கிரஸ் அமைச்சருமான புரந்தேஸ்வரி பாஜக வேட்பாளராக நேற்றைய வாக்கெடுப்பில் களம் கண்டார். உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர் நகர் தொகுதியில் ராஷ்ட்ரீய லோக்தளத் தலைவர் அஜீத் சிங் பாஜகவின் சஞ்சீவ் பல்யானை எதிர்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், ஹைதரபாதிலிருந்து அசாதுதீன் ஒவைசி ஆகியோர் முதல்கட்ட போட்டியில் களமிறங்கிய பிரபலங்களில்  சிலர். 
மக்களவைக்கான தேர்தல் என்பது உண்மையிலேயே பிரம்மாண்டமானது. உலகில் வேறு எந்த நாடும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சாதனை. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள். எந்தவொரு வாக்காளரும் தனது வாக்கைப் பதிவு செய்ய இரண்டு கி.மீ. அதிகம் செல்ல வேண்டியதில்லை என்கிற அளவிலான முன்னேற்பாடுகள். வாக்குச்சாவடிகளில் ஏறத்தாழ 20,000-க்கும் அதிகமானவை வனப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன என்பது, 1.1 கோடி அரசு ஊழியர்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும், ரயில் மூலமும், படகுகள் மூலமும், ஹெலிகாப்டர்கள் மூலமும், சில இடங்களில் யானைகள் மூலமும்கூடப் பயணித்து வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்துகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்... 
கடந்த 2014 தேர்தலில், நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளிலிருந்து 32 பாஜக உறுப்பினர்களும், 7 காங்கிரஸ் உறுப்பினர்களும், ஏனைய 52 இடங்களில் மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முறை மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள 8 தொகுதிகள், உத்தரகண்டிலுள்ள 5 தொகுதிகள், மகாராஷ்டிரத்திலுள்ள  7 தொகுதிகள், அஸ்ஸாமில் 5-இல் 4 தொகுதிகள், பிகாரில் 1 தொகுதி உள்ளிட்ட கடந்த முறை வென்ற தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முதல்கட்ட வாக்கெடுப்பில் ஆளும் பாஜக போராடியது என்றால், காங்கிரஸ் கட்சி 2014-இல் வெற்றி பெற்ற 7 தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகக் களம்கண்டது. 
முதல்கட்ட வாக்கெடுப்பில் 1,266 வேட்பாளர்கள் களம் கண்டனர். அவர்களில் 619 பேர், அதாவது 49% பேர் படித்தவர்கள், பட்டதாரிகள். போட்டியிட்ட வேட்பாளர்களில் 89 பேர் மட்டுமே மகளிர். அரசியல் கட்சிகள் மகளிருக்கு 33% ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதிகள் வழங்குகின்றனவே தவிர, வேட்பாளர்களில் வெறும் 7 % மட்டுமே மகளிர் என்பது அரசியல் கட்சிகளின் போலித்தனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வேதனையை ஏற்படுத்தும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. போட்டியிடும் 1,266 பேரில் 213 பேர், அதாவது 17% வேட்பாளர்கள், குற்றப் பின்னணி உடையவர்கள். அதிலும், 146 பேர் மிக மோசமான கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்பவர்கள். சாமானியர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதன் வெளிப்பாடுதான் மொத்த வேட்பாளர்களில் 32%, அதாவது 401 பேர், கோடீஸ்வரர்கள். அதில் ஏறத்தாழ 30%-க்கும் அதிகமானோர் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள். 
ஏறத்தாழ 1.5 கோடி புதிய வாக்காளர்கள் 7 கட்டத் தேர்தல்களில் வாக்களிக்க இருக்கிறார்கள். அவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படும். அதேபோல, வாக்களிப்போரில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை குடும்ப ரீதியாக முடிவெடுத்து வாக்களித்தது போய், இன்று மகளிர் சுதந்திரமாக சிந்தித்து வாக்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதைக் கடந்த மூன்று, நான்கு தேர்தல்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மகளிர் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் தேர்தல் முடிவுகள் அமையக்கூடும்.
30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் நரேந்திர மோடி தலைமையில் தேர்தலைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மை அளித்து வரலாறு சிருஷ்டித்தனர். இப்போது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தை ஏற்படுத்துமா அல்லது திரும்பவும் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் ஆட்சியில் தொடர அனுமதிக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள நாம் மே 23-ஆம் தேதி வரை காத்திருந்தாக வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.