கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

அம்பானியே ஆனாலும்...

இந்தியப் பொருளாதார நிதித்துறை உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

News image
Updated On :1 மார்ச் 2019, 7:51 pm

ஆசிரியர்


இந்தியப் பொருளாதார நிதித்துறை உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு அம்பானி குடும்பத்திலிருந்து ஒருவருக்கு சிறைத்தண்டனை எச்சரிக்கை வழங்கப்படும் நிலை வரும் என்று  கனவில்கூட கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. 
ஸ்வீடன் நாட்டு எரிக்ஸன் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தரவேண்டிய கடன் பாக்கியை உடனடியாக வழங்காவிட்டால்,  நீதிமன்ற அவமதிப்புக்காக  சிறைத் தண்டனையைச் சந்திக்க நேரிடும் என்று அனில் அம்பானியின்  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். 
அனில் அம்பானியும் அவரது நிறுவனங்களும் ஏதாவது நிதிப் பிரச்னையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து சிக்கிக்கொண்டாலும்கூட, கடன் கொடுத்தவர்களும், ஒழுங்காற்று ஆணையங்களும் அதற்கு மெளன சாட்சியங்களாக இருந்து வந்திருக்கின்றனவே தவிர, அப்பாவி முதலீட்டாளர்களின் பங்குகள் சரிந்து அவர்களுக்கு இழப்பு நேரிட்டது குறித்துக் கவலைப்பட்டதில்லை. இதிலிருந்து இந்தியாவின் நிதி ஒழுங்காற்று ஆணையங்கள் தங்கள் கடமைகளை முறையாக நிர்வகிக்கவில்லை என்பதும், சக்தி வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவைகளாக அவை செயல்படுகின்றன என்பதும் வெளிச்சம் போடப்பட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்கிற அனில் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே  இழப்பைச் சந்திக்கிறது.  ரூ.40,000 கோடிக்கும் அதிகமான கடன் சுமையுடன் இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கடந்த பிப்ரவரி  7, 2017-இல்  கடன் பத்திரத் தவணையான ரூ.375 கோடியை, கட்ட வேண்டிய கெடுவுக்குள் கட்டவில்லை. 
கடன் வழங்கிய நிதி நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும், பங்குதாரர்களுக்கும் செப்டம்பர் 2017-க்குள் திருப்பிக் கொடுக்க வேண்டிய ரூ.25,000 கோடியைக் கொடுத்து விடுவோம் என்று அறிவித்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரங்களை விற்பதன் மூலமும், அந்த நிறுவனத்தை ஏர்செல் நிறுவனத்துடன் இணைப்பதன் மூலமும்தான்  ரூ.25,000 கோடியைப் புரட்ட அனில் அம்பானி நிறுவனம் திட்டமிட்டது.
 இதில் ஆச்சரியம் என்னவென்றால்,  வேறு எந்தவித உத்தரவாதமோ,  பிணையோ இல்லாமல் கடன் கொடுத்தவர்கள் அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான்.  ரிலையன்ஸ் நிறுவனம் எதிர்பார்த்தது போல இரண்டு ஒப்பந்தங்களும்  நடக்காததால், 18 மாதங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தரவேண்டிய பணத்தைத் திருப்பித் தருவதற்குக் கடனாளிகள் வாய்ப்பளித்திருக்கிறார்கள்.   இந்த முறை ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் ஆகிய இரு நிறுவனங்களையும் காரணம் காட்டி,  தவணை பெற்றிருக்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.
இனியும் பொறுக்க முடியாது என்று  கடன் கொடுத்தவர்களான எல்.என்.டி. நிதி நிறுவனமும், எடல்வைஸ் குழுமமும் தங்களிடம் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளை வெளிச்சந்தையில் விற்க முற்பட்டன. அவர்கள் சட்டரீதியான ஒழுங்காற்று நடவடிக்கைகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கையாகவும் அதிர்ச்சியாகவும்  வழங்கப்பட்டிருக்கிறது.
நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை திவால் சட்டம். சரக்கு சேவை வரியைவிட இந்தச் சட்டம்தான் நிதித் துறையையும் வணிகத் துறையையும் புரட்டிப் போட்டு எவ்வளவு பெரிய கார்ப்பரேட் நிறுவனமானாலும் முன்பு போல வங்கிகளில் இருந்தும், பங்குச்சந்தை மூலமும், முதலீட்டாளர்களிடமிருந்தும் பணத்தைப் பெற்று, அதை  மடைமாற்றம் செய்து ஏமாற்ற முடியாமல்  திவால் சட்டம் கடிவாளம் போட்டிருக்கிறது. 
கடனாளிகளுக்கும், கடன் கொடுத்தவர்களுக்கும் இடையேயான உறவைத் தெளிவுபடுத்தி இந்தச் சட்டம் வருவதற்கு முன்வரை கடன் வாங்கியவர்கள் தவணை தவறினாலோ, பணம் திருப்பித் தராமல் போனாலோ, கடன் கொடுத்தவர்கள் பலவித சலுகைகளை வழங்கி, தங்களது முதலீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல் நிலவியது. திவால் சட்டத்துக்குப் பிறகு நிலைமை அதுவல்ல.
பணம் கொடுத்தவர்கள் திவால் நீதிமன்றமான நேஷனல் கம்பெனி லா ட்ரிப்யூனலிடம் புகார் வழங்கி, கடன் பெற்றவர்கள் மீது திவால் நடவடிக்கையை மேற்கொண்டு தாங்கள் வழங்கிய கடனைத் திரும்பப் பெற முடியும்.  அதைத்தான் எரிக்ஸன் நிறுவனம் செய்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உச்சநீதிமன்ற அனுமதியுடன் எரிக்ஸன் நிறுவனத்திடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டது. அதன்படி அனில் அம்பானி நிறுவனம் செயல்படாததைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது, எரிக்ஸன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியைத் திருப்பி அளிக்காவிட்டால், 3 மாத சிறைத் தண்டனைக்குத் தயாராகும்படி அனில் அம்பானிக்கு எச்சரிக்கை வழங்கியிருக்கிறது.
கடந்த பல மாதங்களாக அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள்  கடும் சரிவை எதிர்கொண்டு, லட்சக்கணக்கான சாமானிய முதலீட்டாளர்களின் சேமிப்புகள் காற்றோடு கரைந்திருக்கின்றன. அதை செபி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போது நீதித் துறையாவது தட்டிக் கேட்க முன்வந்திருக்கிறதே என்பது மிகப் பெரிய ஆறுதல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.