யாகாவாராயினும்...

தேர்தல் ஆணையம் தரக்குறைவான பரப்புரைக்காக ஏற்கெனவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,

தேர்தல் ஆணையம் தரக்குறைவான பரப்புரைக்காக ஏற்கெனவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவி மாயாவதி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு பிரசாரத் தடை விதித்து எச்சரித்திருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு மத ரீதியிலான உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பரப்புரையாற்றினார்கள் என்பதுதான். 
சுதந்திர இந்தியாவின் முதல் கால் நூற்றாண்டு காலம் தலைசிறந்த ஜனநாயக வாதிகளையும், கொள்கைப் பிடிப்புள்ள அரசியல் தலைவர்களையும் கொண்டிருந்தது. அவசர நிலை பிரகடனத்தைத் தொடர்ந்து 1977-இல் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு  இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்க முற்பட்டபோதுகூட, தரக்குறைவான வார்த்தைப்  பிரயோகங்களைக் கையாளவில்லை. இந்திரா காந்தியும் சரி, எதிர்க்கட்சிகளின் கொள்கை முரண்பாடுகளையும், பிரதமர் பதவி மோகத்தையும், ஒற்றுமையின்மையையும் விமர்சித்தாரே தவிர எந்தவொரு தலைவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. 
1989-இல் போஃபர்ஸ் ஊழலின் பின்னணியில் இடதுசாரிகள், பாரதிய ஜனதா கட்சி, பல மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய முன்னணி என்கிற பெயரில் ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகக் களமிறங்கியபோதும்கூட தனிப்பட்ட முறையிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. போஃபர்ஸ் ஊழலில் சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்களான குவாத்ரோச்சி உள்ளிட்டவர்களின் தொடர்பு விமர்சிக்கப்பட்டதே தவிர, முறையற்ற விமர்சனங்களில் எந்தவொரு கட்சியும் ஈடுபடவில்லை. 1991-இல் நடந்த 10-ஆவது மக்களவைக்கான தேர்தலுக்குப் பிறகுதான், அரசியல் தரம் தாழ்ந்து ஜனநாயகப் பண்புகள் வலுவிழக்கத் தொடங்கின.
கடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் இருந்து, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களின் அடிப்படையில் மாறியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், 2012-இல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை மரண வியாபாரி  என்று அன்றைய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி குற்றஞ்சாட்டியதில் இருந்து அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்று கூறலாம். 
அதன் எதிர்வினையாக பாஜகவினரும் சோனியா காந்தியையும், அவரது குடும்பத்தினரையும் வெளிநாட்டவர்கள் என்று குற்றஞ் சாட்டி, அவர்களது இத்தாலியத் தொடர்பை தேர்தல் பரப்புரையாக்கினர். அவையெல்லாம் சகித்துக்கொள்ளக் கூடியவை என்று மாற்றி விட்டிருக்கிறது இப்போதைய  17-ஆவது மக்களவைக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம்.
தமிழகத்தில் ஆரம்பம் முதலே திமுகவின் அரசியல் பிரசாரங்கள் தனிப்பட்ட முறையிலான தாக்குதலின் அடிப்படையில்தான் அமைந்து வந்திருக்கின்றன. தொடக்க காலத்தில் ராஜாஜியையும், அதற்குப் பிறகு காமராஜரையும், தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் திமுகவின் மூத்த தலைவர்கள் நாக்கூசும் விதத்தில் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பது வரலாறு. 
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்தக் கட்சியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், முன்னாள் துணை முதல்வராகவும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொலைகாரன், மண்புழு என்றெல்லாம் தேர்தல் பிரசாரத்தின்போது வசைமாரி பொழிந்தது முகம் சுளிக்க வைத்தது. அவரிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் இருக்கும் ராகுல் காந்தியின் பிரசாரம் கண்ணியக்குறைவானது என்பது மட்டுமல்ல, அவர் வகிக்கும் பதவிக்கு கௌரவம் ஏற்படுத்துவதாகவும் இல்லை. 
பிரதமர் நரேந்திர மோடி குறித்து மேடைகளில் வாய்க்கு வந்தபடி அவர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவதும் விமர்சிப்பதும் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. 
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறாத ஒரு கருத்தை நீதிமன்றம் குறிப்பிட்டதாகக் கூறி பிரதமர் மோடி திருடன் என்கிற ராகுல் காந்தியின் பரப்புரைக்கு மன்னிப்புக் கோரச் சொன்னது உச்சநீதிமன்றம். மன்னிப்புக் கோராமல் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பதிலளித்ததன் விளைவாக நீதிமன்றத்தின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஒரு தேசியக் கட்சியின் தலைவருக்கான அணுகுமுறை ராகுல் காந்தியிடம் காணப்படவில்லை. 
இவையெல்லாம்கூடப் பரவாயில்லை. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் முடிவுக்குப் பிறகு 40 திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்குக் கட்சி மாறத் தயாராக இருக்கிறார்கள் என்று கூறியிருப்பது, அவர் வகிக்கும் பதவியின் கௌரவத்தையே குலைப்பதாக இருக்கிறது. இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துபோய், கட்சித் தாவலை ஊக்குவிக்கும் விதத்தில் இதுவரை எந்வொரு இந்தியப் பிரதமரும் பேசியதில்லை. 
தேர்தல் வெற்றி - தோல்விக்காக, மூன்றாம் தரப் பேச்சாளர்களைப்போல, பிரதமர் பதவி வகிப்பவரும் பிரதமராகத் துடிப்பவரும் தரம் தாழ்ந்து வசைமாரி பொழியும் அரசியல் சூழல் வரும்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. 
சிலப்பதிகாரப் பாயிரம் கூறுவதைப்போல, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்திய ஜனநாயகம் பிழைக்கும் போலிருக்கிறதே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com