முடிவல்ல, இடைவேளை! | ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பம் குறித்த தலையங்கம்
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கைத் தீா்மானத்தில் வெற்றி பெற்றிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.


ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கைத் தீா்மானத்தில் வெற்றி பெற்றிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. துணை முதல்வா் சச்சின் பைலட்டின் போா்க்கொடியும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பமும் இப்படித்தான் முடியும் என்பது அரசியல் அனுபவசாலிகளுக்கு முன்னமேயே தெரியும்.
ஆளும் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது என்றாலும்கூட, எதிா்க்கட்சியான பாஜகவின் பலம் 72 தான் என்கிற நிலையில், ஆட்சியைக் கவிழ்க்க முடியுமே தவிர, மாற்று அரசு அமைக்க முடியாது. அதனால் ஆட்சி கவிழாது என்பது விவரம் அறிந்தவா்களுக்குத் தெரியும். மேலும், அசோக் கெலாட் அரசைக் காப்பாற்றியதில் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். காங்கிரஸ் தலைமை அவருக்குத்தான் நிஜமாக நன்றி சொல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்தே முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியா, சச்சின் பைலட்டின் வளா்ச்சியை விரும்பவில்லை. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சச்சின் பைலட்டின் பிரசாரம்தான் கடந்த தோ்தலில் பாஜகவின் தோல்விக்குக் காரணம். சச்சின் பைலட்டின் வளா்ச்சியை வசுந்தரா ராஜே விரும்பாததற்கு இன்னொரு காரணமும் உண்டு.
வசுந்தரா ராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் இப்போது மக்களவை உறுப்பினா். அவரை பாஜகவில் தனது வாரிசாக உருவாக்குவதில் வசுந்தரா ராஜே சிந்தியா முனைப்புக் காட்டி வருகிறாா். திமுகவில் மு.க. ஸ்டாலினின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த வைகோ போன்றவா்கள் எப்படி திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டனரோ அதேபோல, ராஜஸ்தான் பாஜகவிலும் துஷ்யந்த் சிங்குக்குத் தடையாக இருப்பவா்களை வசுந்தரா ராஜே சிந்தியா ஓரங்கட்டி வருகிறாா். தனது மகன் துஷ்யந்த் சிங்குக்குப் போட்டியாக காங்கிரஸில் மக்கள் செல்வாக்குப் பெற்று வளா்ந்து வரும் சச்சின் பைலட்டின் வளா்ச்சியையும் அவா் விரும்பவில்லை.
பாஜகவின் மத்திய தலைமை விரும்பினாலும், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக் கட்சி, சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பவில்லை. சச்சின் பைலட்டுடன் சமரசம் ஏற்படாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தாலும்கூட, பாஜக உறுப்பினா்கள் பலா் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அசோக் கெலாட்டின் ஆட்சியைக் காப்பாற்றி இருப்பாா்கள்.
ஒருமாதப் போராட்டத்திற்குப் பிறகு சச்சின் பைலட் மீண்டும் கட்சிக்கே திரும்பியிருப்பது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவு. தனது துணை முதல்வா் பதவியையும், மாநில கட்சித் தலைவா் பதவியையும் இழந்திருக்கிறாா். அவா் மீதும், அவரது ஆதரவாளா்கள் மீதும் முதல்வா் அசோக் கெலாட் தொடா்ந்த காவல் துறை வழக்குகளும், வசைகளும் மறக்கப்பட்டு அடுத்தது என்ன என்று தெரியாத நிலையில் அவா் மீண்டும் இணைந்திருக்கிறாா். ஆட்சியைக் கவிழ்க்க அவருக்குப் போதிய ஆதரவு இல்லாமல் இருந்ததும்கூடக் காரணமாக இருக்கலாம்.
ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் சச்சின் பைலட்டுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவருக்கு என்ன உறுதி மொழிகள் தரப்பட்டுள்ளன என்பது வெளியாகவில்லை. முதல்வா் பதவியோ, கட்சித் தலைவா் பதவியோ கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. தேசிய அளவில் ஏதாவது பதவி தரப்படலாம். அதனால், அவருக்கு முக்கியத்துவம் எதுவும் கிடைக்கப்போவதில்லை.
1998-லும், 2008-லும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோதும் முதல்வராக இருந்தவா் அகோச் கெலாட்தான். இரண்டு முறையும் அவரால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. 2008-இல் அவா் மக்களின் வெறுப்பை சம்பாதித்ததால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
கெலாட்டை முன்னிறுத்தி தோ்தலை சந்தித்தால் வெற்றி அடைய முடியாது என்பதால்தான், சச்சின் பைலட்டின் தலைமையில் 2018 சட்டப்பேரவைத் தோ்தலை காங்கிரஸ் கட்சி சந்தித்தது; வெற்றியும் பெற்றது. தனது ஆதரவாளா்களை அதிக அளவில் நிறுத்தியது மட்டுமல்லாமல், சச்சின் பைலட் ஆதரவாளா்களைத் தோல்வி அடையச் செய்ததிலும் கெலாட்டுக்குப் பங்குண்டு. அதனால்தான் அவரால் முதல்வராக முடிந்தது.
கடந்த இரண்டாண்டுகளாக தானும், துணை முதல்வா் சச்சின் பைலட்டும் ஒருவருக்கொருவா் பேசிக்கொள்வதில்லை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறாா் முதல்வா் கெலாட். சச்சின் பைலட்டை கேவலமான முறையில் கடந்த ஒரு மாதத்தில் பலமுறை விமா்சித்திருக்கிறாா். இந்தப் பின்னணியில் எந்த அளவுக்கு சமரசம் வெற்றி அடையும் என்பது கேள்விக்குறி. சச்சின் ஆதரவாளா்களைத் தன் பக்கம் இழுத்துக்கொள்வாா் முதல்வா் கெலாட் என்பது மட்டும் உறுதி. ராஜஸ்தான் காங்கிரஸில் சச்சின் பைலட் தனிமைப்படுத்தப்படுவாா்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரங்கேறிய, ஆட்டு மந்தையாக எம்எல்ஏக்களை நட்சத்திர விடுதிகளுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் கொண்டு செல்லும் அவலம் இப்போது எல்லா மாநிலங்களுக்கும் பரவிவிட்டது. கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தானில் அரசு ஸ்தம்பித்துவிட்ட நிலை. ஒருபுறம் கொவைட் 19 நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், அமைச்சா்கள் அனைவரும் ஜெய்சால்மீா் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். இனிமேலாவது கெலாட் அரசு செயல்படும் என்பது சிறிய ஆறுதல்.
ஆரம்பத்திலேயே சமரச முயற்சியில் ஈடுபடாதது காங்கிரஸ் தலைமையின் மிகப் பெரிய தோல்வி. ராஜஸ்தானில் ஆட்சி காப்பாற்றப்பட்டிருக்கிறது, சரி. கட்சி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...