பற்றாக்குறை! | அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த தலையங்கம்


நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. கடந்த ஓர் ஆண்டாக வரலாறு காணாத கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தாக்கல் செய்தாக வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, 1990}இல் தேசிய முன்னணி அரசில் நிதியமைச்சராக இருந்த மது தண்டவதே எதிர்கொண்ட சோதனையைவிட அதிகமான சோதனையை இப்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கொள்கிறார். பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாத, உலகமயச் சூழலில் இந்தியா இணையாத நிலையில், கடுமையான நிதிப்பற்றாக்குறையையும் வருவாய் பற்றாக்குறையையும் எதிர்கொண்டார் மது தண்டவதே. இப்போது நிலைமை அதுவல்ல. இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
அப்போதைய நிதியமைச்சர்களாக இருந்த மது தண்டவதேவும், யஸ்வந்த் சின்ஹாவும் அநேகமாக திவாலாகிவிட்டிருந்த கஜானாவுடன் போராட வேண்டியிருந்தது. அதை எதிர்கொள்ள பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் வேறு வழியில்லாமல், பொருளாதார தாராளமயக் கொள்கைக்கு கதவுகளைத் திறந்து வைத்து இந்தியா திவாலாகி விடாமல் காப்பாற்றினார்.
நடப்பு நிதியாண்டான 2020 } 21}இல் வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒருபுறம் தடுமாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு ஊக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசு, இன்னொருபுறம் வருவாய் பற்றாக்குறையையும் எதிர்கொள்கிறது.
செப்டம்பர் மாத இரண்டாவது காலாண்டு முடிவைவிட, டிசம்பர் மாத மூன்றாவது காலாண்டு முடிவில் முன்கூட்டிய வரி வரவு (அட்வான்ஸ் டாக்ஸ் கலெக்ஷன்ஸ்) சற்று அதிகம்தான். ஆனால், பல்வேறு அனுமானங்களின் அடிப்படையில் பார்த்தால், நிதியாண்டின் முடிவில் கிடைக்கும் மொத்த நேரடி வரி வருவாய் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கப் போகிறது. சுமார் ரூ.3 லட்சம் கோடி குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் இலக்கு, ரூ.13.19 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மூன்று காலாண்டுகளின் போக்கின் அடிப்படையில் பார்க்கும்போது நிதியாண்டின் முடிவில் சுமார் ரூ.9 லட்சம் கோடி அளவில்தான் நேரடி வரி வருவாய் இருக்கக் கூடும் என்று தெரிகிறது.
கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, நேரடி வரி வருவாய் ரூ.5.89 லட்சம் கோடி. அதாவது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 45%. கடந்த ஆண்டு இதே அக்டோபரில் அதுவே ரூ.6.75 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரல் } அக்டோபர் மாதத்திற்கு இடையில், நேரடி வரி வருவாய் ரூ.7.34 லட்சம் கோடி. அதாவது, பட்ஜெட் எதிர்பார்ப்பில் 34%. கடந்த ஆண்டு அதுவே 46.2%}ஆக இருந்தது.
பஞ்சப்படி நிறுத்தி வைப்பு, அதிகரித்த வரி விதிப்பால் கிடைக்கும் ஆதாயம் ஆகியவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும்கூட, நிகர வரி வருவாய் வரவு, பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைவிட ரூ.3.8 லட்சம் கோடி குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கிறது பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு. பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை மூலம் எதிர்பார்த்த வருவாயும் ரூ.1.6 லட்சம் கோடி குறைவாக இருக்கக் கூடும் என்று கணிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினங்கள் ஜிடிபியில் 1% அளவில்தான் குறைகிறது என்றால், வருவாய் இழப்பு குறைந்தது 8%}ஆக குறையக்கூடும். வருமான வரி போன்ற நேரடி வரி வருவாயும் சரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரி வருவாயும் சரி கடந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. பெட்ரோல், டீசலுக்கான அதிகரித்த சுங்க வரி காரணமாக, சுங்க வரி வருவாய் அதிகரித்திருப்பது சற்று ஆறுதல்.
கொள்ளை நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தையும், சுகாதாரத் தேவைகளையும் எதிர்கொள்ள நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் கருதப்படாத பல ஊக்குவிப்பு தொகுப்புகளை நிதியமைச்சர் அறிவித்தார். வரி விலக்குகளும், வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. ரூ.4.5 லட்சம் கோடி அளவிலான நிதியமைச்சரின் அறிவிப்பு தவிர்க்க முடியாதது.
நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை சுமார் ரூ.15.5 } ரூ.15.8 லட்சம் கோடி அளவில் இருக்கக்கூடும். அதாவது, மார்ச் மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டின் மொத்த நிதிப்பற்றாக்குறை ஜிடிபி}யில் 7.8% } 8% அளவில் இருக்கப் போகிறது. இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அவரது தலைமையில் இயங்கும் நிதியமைச்சகமும் அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பொருளாதார மந்தநிலை மாறவில்லை. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகத் திரும்பி விட்டது என்று சொல்லிவிட முடியாது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்காத நிலை. சேமிப்பைப் பாதுகாப்பதில் காட்டும் முனைப்பை செலவழிப்பில் காட்ட மக்கள் தயங்குகிறார்கள்.
புதிய வரி விதிப்புக்கும், வருவாய் அதிகரிப்புக்கும் அதிக வாய்ப்பு காணப்படாத நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுகின்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புத்திசாலித்தனத்தில்தான் நரேந்திர மோடி அரசின் வெற்றியும் தோல்வியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...