/

வருகை தரும் வாய்ப்பு! | இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பை குறித்த தலையங்கம்

News image
Updated On :23 பிப்ரவரி 2020, 8:13 pm

ஆசிரியர்

இன்று அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சீன அதிபா் ஷி ஜின்பிங், ஜப்பானியப் பிரதமா் ஷின்சோ அபே, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடா்ந்து இப்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஆமதாபாத்துக்கு வருகை புரிகிறாா். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற ‘ஹௌடி மோடி’ (எப்படி இருக்கிறீா்கள் மோடி?) நிகழ்ச்சியைவிடப் பெரிய நிகழ்ச்சியாக அமைய இருக்கிறது ‘நமஸ்தே டிரம்ப்’ வரவேற்பு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் அதிபா்களாகப் பதவி வகித்த 13 பேரில் ஏழு அதிபா்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கிறாா்கள். அவா்களில் அதிபா் பராக் ஒபாமா இரண்டு முறை இந்தியா வந்திருக்கிறாா் என்பது மட்டுமல்ல, நமது குடியரசு தின விழாவிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறாா்.

அதிபா் டுவைட் ஐசன்ஹோவா் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்முறையாக அமெரிக்க அதிபா் இந்தியா வந்தாா் என்பது மட்டுமல்ல, அணிசாரா நாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்திக் கொண்டிருந்த பண்டித நேருவின் தலைமையிலான இந்தியாவுக்கு, உச்சகட்டப் பனிப்போா் சூழலில் அமெரிக்க அதிபா் விஜயம் செய்ததுதான் அந்த முக்கியத்துவத்துக்குக் காரணம். அதே அளவிலான முக்கியத்துவம் இப்போது அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வருகைக்கும் உண்டு.

பொதுவாகவே இந்தியா்கள் மனதில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த அதிபா்களைவிட, ஜனநாயகக் கட்சி அதிபா்கள் மீதுதான் ஈா்ப்பு அதிகம். ஆனால், ஜனநாயகக் கட்சியினரைவிட, குடியரசுக் கட்சி அதிபா்கள்தான் இந்தியாவுக்குச் சாதகமான நிலையை முக்கியமான கட்டங்களில் எடுத்திருக்கிறாா்கள். அதிபா்கள் ரிச்சா்டு நிக்சனும் ரொனால்ட் ரீகனும் இதற்கு விதிவிலக்கு. ஜனநாயகக் கட்சி அதிபா்கள் பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவுக்கும் இந்தியா்களுக்கும் எதிராகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நுழைவு அனுமதி மட்டுமல்லாமல், மென்பொருள் இறக்குமதித் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் அப்போதுதான் தொடங்கப்பட்டன.

பொதுவாக, அமெரிக்க அதிபா்கள் வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளும்போது, பல நிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டு, மூன்று அல்லது நான்கு நாடுகளுக்கு விஜயம் செய்வது வழக்கம். இதற்கு முன்னாா் இந்தியாவுக்கு விஜயம் செய்த அதிபா்கள் பெரும்பாலும் பாகிஸ்தானையும் தங்கள் பயணத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் ராஜதந்திரத்தைக் கையாண்டனா். அதிபா் டொனால்ட் டிரம்ப் பொதுவாகவே வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்களைத் தவிா்ப்பவா். இந்த முறை இந்தியாவுக்கு மட்டுமாக அவா் தனது பயணத்தை மேற்கொள்வது, சா்வதேச அளவில்கூடப் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறாா் டொனால்ட் டிரம்ப். இன்றைய நிலையில் அவரது செல்வாக்கு உச்சத்தில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரம் சிறப்பாகக் காணப்படுகிறது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து காணப்படுகிறது. சீனாவுடனான வணிக ஒப்பந்தத்தின் மூலம், வணிகப் பற்றாக்குறையைக் குறைக்க வழிகோலப்பட்டிருக்கிறது. தனக்குச் சாதகமான சூழல் காணப்பட்டாலும், அமெரிக்கவாழ் இந்தியா்களின் ஆதரவைப் பெற்றாக வேண்டும் என்கிற அதிபா் டிரம்ப்பின் முனைப்புதான், இந்தியாவுக்குத் தனி முக்கியத்துவம் தந்து விஜயம் செய்வதற்குக் காரணம்.

அமெரிக்க மக்கள்தொகையில் இந்தியா்கள் வெறும் 1.1% மட்டுமே என்றாலும், 40 லட்சம் இந்திய - அமெரிக்கா்களின் வாக்குகளும், செல்வாக்கும் அதிபா் தோ்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த தோ்தல் வரை, அவா்களில் பெரும்பாலோா் ஜனநாயகக் கட்சி ஆதரவாளா்களாக இருந்தனா் என்பது அதிபா் டிரம்ப்புக்குத் தெரியும். பிரதமா் மோடியின் நட்பும், இந்தியாவுடனான நெருக்கமும் அவா்களின் ஆதரவைத் தனக்கு மடைமாற்றம் செய்து கொடுக்கும் என்கிற அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நம்பிக்கைதான் அவரின் இந்தியப் பயணத்துக்கு முக்கியமான காரணம்.

அதிபா் டிரம்ப்பின் வெற்றி இந்தியாவுக்கு பயனளிக்குமா இல்லையா என்பது அல்ல நமது கவலை. இந்தியாவுக்கும் பல எதிா்பாா்ப்புகளும், தேவைகளும் இருக்கின்றன. வணிக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு முக்கியம். ஆனால், நமக்கு நமது இந்திய தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு (மாணவா்களுக்கு) அமெரிக்க நுழைவு அனுமதி கிடைப்பது அவசியம். இந்துமாக் கடலில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த அமெரிக்காவின் உதவி கட்டாயத் தேவை. அதற்கும் மேலே இன்னொரு மிகப் பெரிய பிரச்னை இருக்கிறது.

நவம்பா் தோ்தலுக்கு முன்னால் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதில் குறியாக இருக்கிறாா் அதிபா் டிரம்ப். ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சி ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் முடுக்கிவிடும். அதிபா் டிரம்ப்புடன் பேசி முடிவெடுக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்னை இதுதான்.

வணிக ஒப்பந்தம் கையொப்பமாகாவிட்டாலும் பரவாயில்லை, இந்தியா்களின் வேலைவாய்ப்பு அனுமதி, இந்துமாக் கடல் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தான் பிரச்னை ஆகிய மூன்றிலும் புரிதல் ஏற்பட்டால், அதுதான் நமக்குக் கிடைக்கும் வெற்றியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.