மாய யதார்த்த, அதீதமான ஜோஸெ ஸரமாகோவின் நாவல்கள்!
நோபல் பரிசு பெற்ற போர்த்துகல் எழுத்தாளர் ஜோஸெ ஸரமாகோவின் நாவல்களைப் பற்றிய நூலின் அறிமுக - விமர்சனம்...

ஜோஸெ ஸரமாகோவின் நாவல்கள்
DIN

ஜோஸெ ஸரமாகோவின் நாவல்கள்
DIN
நோபல் பரிசு பெற்ற போர்த்துகல் எழுத்தாளரான ஜோஸெ ஸரமாகோவின் நாவல்கள் பற்றித் தொடர்ந்து, பல ஆண்டுகளாக எஸ்.வி. ராஜதுரை எழுதிவந்த கட்டுரைகள் யாவும் ஸரமாகோ: நாவல்களின் பயணம் என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
ஸரமாகோ: யானையின் பயணம் என்ற விரிவான தொடக்கக் கட்டுரையைத் தொடர்ந்து, ஏறத்தாழ 500 பக்கங்களில் ஸரமாகோவுடனேயே இணைந்து பயணம் செய்து, அவருடைய 17 நாவல்களைப் பற்றி அறிமுகமாகவும் விமர்சனமாகவும் இந்த நூலில் எழுதியிருக்கிறார் எஸ்விஆர்.
ஏற்கெனவே படித்த ஸரமாகோவின் நாவல்களுடன் இந்த நூலையும் நூலின்வழி எல்லா நாவல்களையும் அவற்றின் எழுதுமுறையையும் முழுவதுமாகப் படித்து முடிக்கும்போது, ஸரமாகோவுடன் ஏதோவொரு புள்ளியில் எஸ்.வி. ராஜதுரையும் இரட்டையாகத் தோன்றுகிறார்.
(ஸரமாகோ) அவரது இலக்கியப் படைப்புகளிலுள்ள தனித்துவமான எடுத்துரைப்பு முறை, முரண்நகை நிறைந்த குரல், கட்டுத்தளையற்ற கற்பனையாற்றல், நாவல்களின் உருவகத் தன்மை ஆகிய அனைத்தும் அவர் எழுத்தாளராகப் பரிணமிப்பதற்கு முன்பே அவரது வாழ்க்கையின் வாழ்ந்துபெற்ற அனுபவங்களின் விளைவுகள்தான். தனது இலக்கியப் படைப்புகள் அனைத்துமே கடந்த காலத்துடன் சம்பந்தப்பட்டவை எனக் கருதினார். அந்தக் கடந்த காலம், ஐரோப்பாவிலுள்ள மிக ஏழ்மையான, மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளிலொன்றான போர்த்துகலின் வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் வேர்கொண்டிருந்தது. இது அவரது பார்வையைக் குறுக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிலைமை தனக்கு சாதகமாக இருந்ததாக ஸரமாகோ கருதினார்.
[கேள்விக் குறிகள் அல்லது உரையாடலுக்கான மேற்கோள் குறிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பழைமையான, மரபான நிறுத்தல் குறி முறையை ஒதுக்கிவைத்ததுடன் நிகழ்காலம், கடந்தகாலம் ஆகியவற்றுக்கிடையில் அவரது எடுத்துரைப்பு ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் குதிக்கிறது - எஸ்விஆர்].
கம்யூனிஸ்ட் என்றாலும் கம்யூனிசத்தை மட்டுமல்ல, கிறிஸ்துவத்தையும்கூட விமர்சிக்கும் அவர், மன்னித்தல், அன்பு, கருணை ஆகியவற்றை வாக்களித்த, தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருக்கிற ஒரு கோட்பாட்டின் பெயரால் லட்சக்கணக்கான மக்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.
ஸரமாகோவின் படைப்புகளில் மோட்டுச்சாளரம் நாவல் தவிர அனைத்தும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பிறகு எழுதப்பட்டவையே. அவை எல்லாவற்றிலும் பாசிசம், முதலாளியம் ஆகியவற்றுக்கான எதிர்ப்புணர்வு காணப்பட்டாலும் அவை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுரைகளுக்கோ, கட்டளைகளுக்கோ இணங்கி எழுதப்பட்டவையல்ல. இலக்கிய - கலைப் பிரச்சினைகளைப் பற்றி முடிவெடுக்கும் தகுதி என் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை என்கிறார் ஸரமாகோ.
ஸரமாகோவின் முதல் நாவல் பாவத்தின் நிலம் (The Land of Sin), 1947-ல் வெளிவந்தது. இடையே கவிதைகள், நாடகங்கள், பத்திகள், நாள்குறிப்புகள் எழுதினாலும் அவருடைய இரண்டாவது நாவல் – ஓவியம் மற்றும் எழுத்துக் கலை பற்றிய பயிற்சியேடு (Manual of Painting and Calligraphy), 1976-ல்தான் வெளிவருகிறது.
செல்வந்தர்களின் உருவப் படங்களைத் தீட்டி விற்பனை செய்கிற, ஹெச் என்கிற ஒற்றை எழுத்தால் குறிக்கப்படுகிறவன்தான் கதாநாயகன். அவனுடைய ஓவியங்களும் ஓவிய முயற்சிகளும் எழுத்துகளும்தான் நாவல், பாசிச எதிர்ப்பில் சென்று முடிகிறது. ஸரமாகோவின் புகழ்பெற்ற நாவல்கள் அனைத்தையும் பிறப்பிப்பதற்கான மூலாதாரமாக இந்த நாவல் விளங்குவதாக ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜியோவான்னி போன்டிய்ரோ தெரிவித்துள்ளார்.
ஸராமாகோவின் நாவல்கள் எல்லாவற்றிலுமே கதை, அதைச் சார்ந்த நிகழ்வுகள் ஆகியவற்றுடனும் அவற்றிலிருந்து விலகி நின்றும் – நாவலாசிரியரோ, எடுத்துரைப்பாளரோ தனக்குத் தானேயும், வாசகர்களுடனும் பாத்திரங்களுடனும் பல்வேறு விஷயங்கள் பற்றி (தத்துவம், இலக்கியம், மொழி, கலை, அழகியல், வரலாறு, மத நம்பிக்கை, ஆண் – பெண் உறவு முதலியன) பற்றி நடத்தும் விவாதங்கள் கணிசமாக இடம் பெறும். அத்தகைய விவாதங்களும் சிந்தனையோட்டங்களும்தான் இந்த நாவலின் பெரும்பகுதி (பயணக் குறிப்புகள், அழகியல் பற்றிய கருத்துரைகள், அறிவுத் தோற்றவியல் பற்றிய கருத்துகள்) என்று குறிப்பிடுகிறார் எஸ்விஆர்.
மண்ணிலிருந்து தோன்றியவர்கள் (Raised from the ground) நாவல், காலணி தைக்கிற குடிகாரனான டொமிங்கோஸ் மாவ்-டெம்போவிடமிருந்து தொடங்கி பெரும் பண்ணைகளைப் பின்புலமாகக் கொண்டு, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த மனிதர்களை உள்ளடக்கிய போர்த்துகேய வரலாற்றை, யதார்த்த விவரங்களையும் கற்பனை வளங்களையும் கொண்டு கட்டமைக்கிறது. பன்னூறாண்டு கால நிலப்பிரபுத்துவச் சுரண்டல், சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் கத்தோலிக்கத் திருச்சபை தந்துவந்த ஒப்புதல் ஆகியவற்றைப் பெரும் பண்ணையொன்றையும் அங்கே வாழும் மனிதர்களையும் பற்றிய சித்திரத்தைக் கவிதை நடையில் தருகிறது.
நாவலில் எடுத்துரைப்பாளரின் ஒரு வரி: துன்புறுவோர் தங்கள் துன்பங்களுக்காகத் தங்களைத் தாங்களே போற்றிக் கொள்கிறார்கள், அடிமைகள், தங்கள் அடிமைத்தனத்துக்காக. எப்படி?.
தம் பாட்டன், பாட்டியுடன் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்ததும் 1969-லிருந்து 2010-ல் இறக்கும் வரை போர்த்துகல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தும் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் - 1974-ல் நடந்த புரட்சியிலும் பங்கேற்றவர் ஸரமாகோ - இந்த நாவலில் எதிரொலிக்கின்றன என்று குறிப்பிடும் எஸ்விஆர், இது அரசியலை மட்டும் பேசும் நாவலல்ல என்கிறார்.
பல்தஸாரும் பிலிமுண்டாவும் (Balthasar and Blimunda) நாவலில் இருவருடைய காதல் மட்டுமல்ல அவர்களின் நண்பர் கத்தோலிக்கப் பாதிரியார் பார்த்தலோமியா உருவாக்கும் பறக்கும் எந்திரம், இவர்களுடன் அரசன், மதகுருக்கள் பற்றிய சித்திரிப்புகள், அரச நம்பிக்கை, மடாலயக் கட்டுமானப் பணி, தொடர்ந்து சாமானிய மக்களைப் பற்றிய சித்திரங்கள் என சாமானிய மக்களை அரசும் மதமும் எவ்வாறு வஞ்சிக்கின்றன என்று சொல்லிச் செல்கிறது. பல்தஸார் காணாமல் போவதும் அவனைத் தேடி நாட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஒன்பதாண்டுகள் தொடர்ச்சியாக நடைப்பயணம் செய்யும் பிலிமுண்டாவுமாக நகரும் கதையின் இறுதியில் எரிந்தழியும் கடைசி மனிதானாகிறான் பல்தஸார். நபர்கள் மட்டுமின்றி சம்பவங்கள், சாதனங்கள் யாவும்கூட குறியீடுகளாகக் காட்டப்படும் நாவலில் பாதிரியார் பார்த்தோலோமியா கூறுகிறார் – கடவுள் மனிதர்களின் இதயங்களுக்குள்ளே பார்க்கிறார்... ஒரு மனிதனின் பாவங்கள் கடுமையானதாக இருக்குமானால், அவை தண்டிக்கப்படாமல் போகாது; நியாயத்தீர்ப்பு நாளில் அவன் தண்டிக்கப்படுவதைக் கடவுள் பார்ப்பார் – இதற்கிடையே, அவனது நற்செய்கைகள் பாவச் செயல்களை ஈடுகட்டுவதாக இருந்தாலன்றி... கடைசியில் அனைவருக்குமே பொது மன்னிப்பு வழங்கப்படலாம். அல்லது அனைவரும் தண்டிக்கப்படலாம். ஆனால், இன்னும் தெரிந்துகொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், கடவுளை மன்னிப்பதோ தண்டிப்பதோ யார் என்பதுதான்.
ரிக்கார்டோ ரைஸ் இறந்த ஆண்டு (The Year of the Death of Ricardo Reis). ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கியிருக்கும் ரைஸ், இறந்துபோன நண்பன் பெஸ்ஸாவா, பணிப்பெண் லிடியா, ஹோட்டலுக்கு வந்துசேரும் மார்ஸெண்டோ ஆகியோருடன் 1930-களில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்படத் தொடங்கிய சமூக, அரசியல் கொந்தளிப்புகளைத் தருகிறது இந்த நாவல்.
அரசியல்தான் நாவல். ஐரோப்பாவில் கம்யூனிசம் என்னும் தீமையைக் களைவதற்காக உருவாக்கப்பட்ட பாசிச அரசுகளுக்குத் தாராளவாத முதலாளிய அரசுகளும்கூட எவ்வாறு மறைமுகமான ஒத்துழைப்பைத் தந்தன என்பதை எடுத்துக்காட்டும் நாவலில், புனித பாத்திமாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் ஊடாக, கத்தோலிக்க மதமும் அதன் திருச்சபையும் தங்கள் ஆதாயங்களுக்காகவும் ஆதிக்கத்திற்காகவும் மக்களின் மூட நம்பிக்கையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதைக் காட்ட முழு அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார் ஸரமாகோ.
ஒரு தருணத்தில் வழிதெரியாமல் குழம்பிப்போன பெஸ்ஸாவா, வெங்காய வாடையை அடையாளமாக வைத்துக்கொண்டே வீடு திரும்பியதாக ரைஸிடம் சொல்கிறான் – வெங்காய வாடை இங்கே மக்கள் அனைவரையும் எப்போதும் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும் பாசிசத்திற்கான உருவகமாகக் குறிப்பிடப்படுகிறது.
ஸரமாகோவின் நாவல்கள் பெரும்பாலும் மாய யதார்த்த, அதீத (fantacy) வகைப்பட்டுக் கனவிலும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்களுடன் கடந்து செல்கின்றன.
கல்தெப்பம் (The Stone Raft) நாவலில் ஒரு நிலப்பரப்பு திடீரெனத் துண்டாகி மிதந்து செல்கிறது; தொடர்வதுதான் நாவல். ஜோனா கார்தா நிலத்தை எல்ம் மரக்கிளையால் கீறியபோது, செர்பெரவிலுள்ள எல்லா நாய்களும் குரைத்தன. பெரும் பீதியிலும் அச்சத்திலும் மக்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் இந்த நாய்கள் குரைக்கத் தொடங்கினால் பேரண்டம் முழுவதுமே தன் முடிவை நெருங்கிக்கொண்டிருப்பதாக நம்பிக்கை - நம் ஊரில் பள்ளிகொண்ட பெருமாள் புரண்டு படுத்தால் யுகப் பிரளயம் ஏற்படும் என்பதைப் போல. மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் ஒருங்கிணைகின்றன. பணக்காரர்கள் எல்லாம் வெளியேறிவிட காலியாகக் கிடக்கும் நட்சத்திர ஹோட்டல்களை ஏழை மக்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, தங்களை யாரும் வெளியேற்றாதபடி பார்த்துக் கொள்வதற்காகக் கூட்டுறவு அமைப்புகளும் தோற்றுவிக்கப்படுகின்றன (!) என்பதுதான் ஸரமாகோவின் நக்கல்.
நாடுகளுக்கு இடையிலான உறவுகள், பொருளாதாரம், சந்தை என்று அலைந்துசெல்லும் கதையில், மானுட வேதனைகள், மனித குலத்தின் சோதனைகள், இவற்றினூடே ஒளிரும் மானுட நம்பிக்கைகள் பற்றிக் கூறப்படுகின்றன என்கிறார் எஸ்விஆர்.
லிஸ்பன் மீதான முற்றுகையின் வரலாறு (The History of the Siege of Lisbon) – ரெய்மாண்டோ சில்வா என்கிற மெய்ப்புத் திருத்துகிறவன் எழுதுகிற நாவல், சில்வாவும் மேற்பார்வையாளரான மரியா ஸாராவுமாகவும் நிகழ்காலத்திலும் மொகீம் என்ற போர்த்துகேய படைவீரனும் துணி துவைக்கும் ஔரானாவுமாக கடந்த காலத்திலும் மாறிமாறிச் செல்கிறது.
பின்வரும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்வதும் முன்பு நடந்த நிகழ்வுகளைப் பின்வரும் நிகழ்வுகளுடன் இணைப்பதுமான உத்தி கையாளப்படுவது இந்த நாவலின் மிகச் சிறப்பான கூறு என்கிறார் எஸ்விஆர். நாய்களைப் பற்றிய ரெய்மாண்டோவின் சிந்தனையாக ஸரமாகோ எழுதிய வரிகள், நாயைப் பற்றிய விவரணத்துடன் வழக்கமான கிண்டல் மொழியிலானது. மரியா ஸாராவிடம் தொலைபேசியில் சில்வா பேச முனைகிற விதம் எல்லாருக்குமானது.
‘வரலாறு பற்றிய ஒற்றைப் பரிமாண விளக்கங்கள், நோக்கு நிலைகள் ஆகியவற்றைக் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்படுத்தி, பெரும் வரலாற்று நிகழ்வுகளும்கூட மேலோட்டமாக நம்மால் புரிந்துகொள்ளப்பட்ட தற்செயல் நிகழ்வுகள், மானுடத் தேவைகள், மானுடப் பதற்றங்கள், தூண்டுதல்கள், நோக்கங்கள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றன என்று கூறும் நாவல், அரசர்கள் மீதும் அவர்கள் நடத்தும் போர்கள் மீதும் மட்டுமே கவனம் குவிக்கின்ற வரலாறு எழுதுநெறியைக் கேள்விக்குள்படுத்துகிறது’ – எஸ்விஆர்.
ஏசுவைக் கடவுளின் மகிமைக்காகக் காவு கொடுக்கப்பட்டவராக – கடவுளுக்கும் சாத்தானுக்குமுள்ள அதிகாரப் போட்டிக்குப் பலியானவராக - காட்டுவது ஏசு கிறிஸ்து எழுதிய சுவிசேடம் (The Gospel according to Jesus Christ). கிறிஸ்துவத்தைக் குறிப்பாக, கத்தோலிக்கத்தைக் கடுமையாக, ஆனால், கிண்டலும் கேலியுமாக விமர்சிக்கும் இந்த நாவலால்தான் சொந்த நாடான போர்த்துகலைவிட்டு வெளியேறி, ஸ்பெயினுடைய கானரி தீவுகளில் ஸரமாகோ வசிக்க நேரிட்டது.
ஸரமோகோவின் தலைசிறந்த நாவல் பார்வையிழத்தல் (Blindness) தான் எனலாம். ஒரு நாட்டின் தலைநகரத்தில் திடீரென ஒரு நாளில் தொடங்கி ஒவ்வொருவராகப் பார்வையிழக்கிறார்கள், எல்லாருக்கும் எல்லாமே வெள்ளையாக – கறுப்பாக அல்ல – தெரிகிறது, கண்களிலிருந்து ஏதோ வெள்ளை பெயிண்ட் வழிவதுபோல. குழப்பங்கள், வன்முறைகள், பசி, தாகம், பாலுணர்ச்சி... தொடர்ச்சியாக நேரிடும் மனிதப் பேரவலங்கள்.
கடைசி வரை கண் பார்வை இழக்காமல் – ஆனால், வெளியே காட்டிக்கொள்ளாமல் – இருக்கும் ஒரே நகரவாசி மருத்துவனின் மனைவி. பார்வையின்மை என்பது... நம்பிக்கை அனைத்தும் இழக்கப்பட்ட ஓர் உலகில் வாழ்வதாகும்... நாம் ஒன்றுபட்டிருந்தால் உயிர் வாழ்வதில் வெற்றி பெற முடியும். நாம் பிரிந்து போய்விட்டால் நாம் விழுங்கப்பட்டுவிடுவோம்... எப்போதேனும் நான் கண் பார்வையைத் திரும்பப் பெற்றால், மற்றவர்களின் ஆன்மாக்களுக்குள் பார்ப்பதைப் போல, அவர்களின் கண்களையும் கவனமாகப் பார்ப்பேன்... - எல்லாம் மருத்துவனின் மனைவி பேசுகிறவைதான்.
“இந்த நாவலில் சொல்லப்படுவது நீதிக் கதையா? அப்படியானால் அது கூறும் நீதி என்ன? அல்லது மனிதர்கள் அல்லது சமுதாயத்தின் அடிப்படையான பலவீனமொன்றுக்கான குறியீடா, உருவகமா? ஒரே ஒரு விபத்து (அது நோயாகவோ, வகுப்புக் கலவரமாகவோ, இனக் கலவரமாகவோ இருக்கலாம்) மட்டுமே போதும், சமுதாயத்தின் கட்டுக்கோப்பைக் குலைப்பதற்கும், பல்லாண்டுகால சமூகப் பழக்கவழக்கங்கள், மரபுகள், அறநெறிகள் ஆகியவற்றை ஒரே நொடியில் தகர்ப்பதற்கும் என்று இந்த நாவல் கூறுகிறதா?
“ஸரமாகோவின் நாவல் சித்திரிக்கும் ‘பார்வையின்மை’ அல்லது ‘பார்வையிழத்தல்’, ஸலாசரின் பாசிச அரசுக்கு மட்டும் உரியதல்ல, சாதாரண நாள்களில்கூட தன் விகாரத்தை வெளிப்படுத்தும், இருண்ட காலங்களில் தன் கோர முகத்தைக் காட்டும் ‘ஜனநாயக அரசு’க்கும்தான். தொற்று நோய் மிக அபாயகரமான பரிமாணங்களைப் பெறும்வரை மக்கள் மீது அக்கறையற்றிருக்கும், அந்த அபாயத்தைப் புரிந்துகொண்டவுடன் பாதிக்கப்பட்டவர்களை விலங்கு மாதிரி அடைத்து வைக்கும், தனது ஒடுக்குமுறைக் கருவியான ராணுவத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, நோயாளிகளைக் கடுமையான நிபந்தனைகளுக்குள்படுத்தும் அரசு மட்டும் அல்ல, மனநோய் விடுதியில் வைக்கப்படும் பார்வையிழந்தவர்களை ஒடுக்கும், அவர்களைச் சுரண்டும், பாலியல் வன்கொடுமை செய்யும் முரடர்கள் மட்டும் அல்ல, சாதாரண நாள்களிலும்கூட சாதியம், தீண்டாமை, ஆணாதிக்கம், இனவாதம், பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிற ஆதிக்க சக்திகளும் அவற்றுக்கு இணக்கமும் ஒப்புதலும் காட்டும் சாதாரண மக்களும்கூட ‘பார்வையிழப்பவர்களே.’
பார்த்தல் (Seeing) நாவலில் நவீன பூர்ஷ்வா அரசு தன் ஆட்சியை நியாயப்படுத்தவும் நிலைக்கச் செய்யவும் நடைமுறைப்படுத்தப்படும் ‘ஜனநாயக நெறிகள்’ (தேர்தல், நாடாளுமன்றம், அரசமைப்புச் சட்டம், நீதிமன்றங்கள் முதலியன) எவ்வாறு ஆளும் சக்திகளின் நலன்களைக் காக்க, அந்த அரசு நிலைகொள்வதற்கான அடிப்படைக் காரணமான ‘வன்முறை’யைக் கட்டாயம் பயன்படுத்தியே தீரும் என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்கிறார், என்கிறார் எஸ்விஆர். நாவலின் கதைப் போக்கும் அப்படிதான்.
நாவலில் மிக நக்கலாகத் தேர்தலும் வாக்குப் பதிவும் விமர்சிக்கப்படுகிறது. வாக்குப் பதிவில் மக்கள் செய்யும் அழிச்சாட்டியத்தால் திணறிப் போகும் அரசாங்கம், தன்னைக் காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறது என்று செல்லும் நாவலின் முடிவில், பார்வையிழத்தல் (பார்த்தலிலும் தொடர்ந்து வருகிறாள்) மருத்துவனின் மனைவியும் அவள் கணவனும் அவர்களின் நாயும் சுட்டுக்கொல்லப்பட்டுக் கதையை முடிக்கிறார்கள்.
ஜனநாயகம் என்பதன் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் பங்கேற்பது போதுமானதல்ல. நாலாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்குமாறு மக்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அதற்கிடையே, தான் விரும்புவதை அரசாங்கம் செய்துகொள்கிறது. இது போர்த்துகலுக்கு மட்டுமே உரிய விஷயமல்ல – சொல்வது எஸ்விஆர் அல்ல; ஒரு நேர்காணலில் ஸரமாகோதான் இவ்வாறு சொல்கிறார். ஸரமாகோவின் இந்த வரிகளை எந்த நாட்டுடனும் எந்த நாட்டின் தலைவருடன் எப்போது வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ள முடியும்.
மேற்கு நாடுகளில் ஜனநாயகம் என்பது முதலாளியப் பொருளாதார நலன்களுக்குச் சேவை செய்யும் கருவி என்று சொல்லிவந்த ஸரமாகோ, தான் உறுப்பினராக இருந்த போர்த்துகேய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் கையாலாகத்தனத்தையும் விமர்சித்திருக்கிறார் என மேற்கோள் காட்டுகிறார் எஸ்விஆர்.
அனைத்துப் பெயர்களும் (All the Names) நாவலில் அறியப்படாத பெண்ணைத் தேடும் ஜோஸெ, ஆவணக்காடான அலுவலகம், அங்கே ஒரு முனையை முழங்காலிலும் இன்னொரு முனையைப் பதிவாளர் மேசையிலும் கட்டிக்கொண்டு ஆவணத்தைத் தேடச் செல்லும் ஜோஸெ, ஏசு கிறிஸ்துவின் சுவிசேடத்தில் வரும் சாத்தானைப் போலத் தோற்றமளிக்கும் ஆட்டிடையன் எனத் தொடருகிறது.
இங்கேயும் முதலாளியம் உருவாக்கியுள்ள அபத்தமான உலகில், தனக்கான உண்மையான வாழ்க்கையை வாழ முடியாத, ஜோஸெ போன்ற சாமானியர்கள் சமுதாயத்திலிருந்து அந்நியமாக்கப்படுவதை, மேல் கீழ் வரிசையிலான, அதிகாரிவர்க்க அமைப்பை மனநோய்க்குத் தள்ளப்படுவதை, தனிமனிதர்கள் தங்கள் சுயமான அடையாளத்தை மறைத்துக்கொண்டு பிறருக்கான போலி அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதைச் சித்திரிக்கின்றது என்று குறிப்பிடுகிறார் எஸ்விஆர்.
அறியப்படாத தீவின் கதையோ (The Tale of the Unknown Island) அதிகாரி வர்க்கத்தை நையாண்டி செய்வதில் தொடங்கி, காதல் கதையாக மலர்ந்து, உன்னையே நீ அறிவாய் என்ற சாக்ரடீசிய தத்துவக் கூற்றுடன் முடிவடைகிறது. மன்னனிடம் பாய்மரப் படகைப் பெற்றவன், அவனுடன் வந்துவிட்ட துப்புரவுப் பணிப் பெண்ணிடம் கூறுகிறான்: தீவைப் பார்க்கும் பொருட்டு நீ தீவை விட்டு வர வேண்டும். நம்மிடமிருந்தே நாம் நம்மை விடுவித்துக் கொண்டாலொழிய, நம்மை நாமே பார்க்கவியலாது!
குகை – இதிலும் எந்த நாடு, எந்த ஊர் என்று எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. இந்த உலகமயத்துக்குள் சிக்கி நாம் எங்கே, என்னவாகச் சென்றுகொண்டிருக்கிறோம், எவற்றையெல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் மனைவியை இழந்த, மகள், மருமகனுடன் வசித்துக்கொண்டிருக்கிற பீங்கான் பண்டங்களைச் செய்து விற்கிற கிராமத்துக்காரரான சிப்ரியானோ அல்கோரின் பார்வையில் நாவலாக நகர்த்திச் செல்கிறார். நாவலில் வரும் பேரங்காடி என்ற பெரும்பூதத்தை இன்று உலகமயம், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என எதனுடன் வேண்டுமானாலும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.
எஸ்விஆர் சொல்கிறார்: ‘இந்த நாவலில் தாக்குதலுக்கு இலக்காக்கப்படுவது, சிறு உற்பத்தியாளர்களை விழுங்கி ஏப்பமிடும் சக்தி வாய்ந்ததும், சக மனிதர்களை ஒரேபடித்தான, இணக்கமான, தங்களின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதற்கோ, அதை மாற்றியமைப்பதற்கோ அதிகாரம் சிறிதுமற்ற, வெறும் மக்கள் கூட்டமாக அல்லது மந்தைகளாக மாற்றுகின்றதுமான உலக முதலாளியம் மட்டுமல்ல; இப்படி மனிதர்களைக் குறுக்குகின்ற, சிறுமைப்படுத்துகின்ற, கொடுங்கோன்மையுடன் ஒத்துழைப்பதற்கு விருப்பம் தெரிவிக்க முன்வருபவர்களும்தான். மையத்தின் இருப்பு, தன் வாடிக்கையாளர்களும் அதில் குடியிருப்பவர்களும் அது வழங்கும் வணிகரீதியிலான போதைகள், நிவாரணிகள் ஆகியவற்றைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வதைச் சார்ந்திருக்கிறது. அது காட்டும் அபரிமிதமான பொருள்கள், வரம்பற்ற கேளிக்கைகள், எல்லையில்லா பொழுதுபோக்கு வெளிகள் ஆகியவற்றின் பின்னால் ஒரு கொடூரமான எதேச்சாதிகாரம் – ரசனை வேறுபாட்டையோ, அபிப்ராய வித்தியாசங்களையோ, மாற்று வாழ்க்கை முறைகளையோ சகித்துக்கொள்ளாத எதேச்சாதிகாரம் – நிலவுவதை மூடிமறைக்கிறது’.
எளிதாகப் பார்க்க டெர்டூலியானா என்பவனை – இரட்டை அல்லது மூன்று நகல்கள் - மையப்படுத்திச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டும் த்ரில்லர் வகைப்பட்டதைப் போன்ற நாவல் நகல் மனிதன் (The Double).
இந்த நாவலை அறிமுகப்படுத்தும் எஸ்விஆர், முதலாளியத்தின் கீழ் வாழ்வதால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளை ஸரமாகோவின் பல நாவல்கள் எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டு, முதலாளிய சமுதாயத்தில் மனிதர்கள் மீது அன்றாட வாழ்க்கை ஏற்படுத்தும் மனச்சுமைகள் அவர்களை மனக் குழப்பமுடையவர்களாக, சித்த சுவாதீனமற்றவர்களாக்குகிறது என்கிறார்.
சாவு விடுமுறையில் சென்றுவிட்டால் என்ன நடக்கும்... இடைவெளிகள் விட்டு மரணமும் (Death without Interruptions) திடீரென ஒரு நாட்டில் மரணங்கள் நின்றுபோக, சாவு இல்லையென்றால் அது கடவுள் இல்லையென்பதற்கு சமமாகிவிடும் என்கிறார் கர்தினால்.
நாட்டில் சாவு ஏற்படாதது குறித்து முதலில் கவலை தெரிவித்தது, மனிதராசியின் அடிப்படையான பலவீனமான சாவை வைத்தே தனது கோட்பாடுகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் உருவாக்கி அவற்றைக் கொண்டு தன்னைப் பலம் பொருந்திய ஒடுக்குமுறை நிறுவனமாக்கிக் கொண்ட கத்தோலிக்க சபைதான்... என்று உண்டு இல்லை என்றாக்குகிறார் ஸரமாகோ.
சாலமனின் பயணம் (The Elephant’s Journey) என்பது கோவாவிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரியா சென்றடைந்த ஒரு யானையின் பயணம்தான். நகைச்சுவையாகச் செல்வது போல தோன்றினாலும் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் அரச மரபுகளையும் கிறிஸ்துவத்தின் புரட்டுகளையும் வைத்து செய்கிறார் ஸரமாகோ. ஒரு சாதாரண கிராமவாசியாகப் பன்றிகளுக்குள் ஆவி புகும் விவிலியக் கதையைக் கேலி செய்கிறார்
ஸரமாகோவின் கடைசி நாவலான காயினைப் (Cain) படித்து ரசிக்க, அல்லது வெறுக்க விரும்பும் எவரும் விவிலியத்தை – குறிப்பாகப் பழைய ஏற்பாட்டைப் படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடும் எஸ்விஆர், கடவுளின் ‘பொழுதுபோக்கு நடவடிக்கை’களில் ஒன்றெனக் குறிப்பிட்டு, ஆபிரஹாம், ஈசாக் பலி கதையை நாவலில் என்னவாக மாற்றியமைத்திருக்கிறார் ஸரமாகோ என்று விவரிக்கிறார். கதையில் காயினுடைய எதிர்வினை நகைச்சுவையின் உச்சம். நாவலில் கடவுளைக் குற்றவாளியாக்கி, நான் ஒரு சகோதரனைக் கொன்றேன், கடவுள் என்னைத் தண்டித்தார், இந்த சாவுகளுக்கெல்லாம் கடவுளைத் தண்டிக்கப் போகிறவர் யார் எனச் சிந்திக்கிறான் காயின்.
ஏறத்தாழ ஆங்கிலத்தில் வெளிவந்த அனைத்து நாவல்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்துவிட்டார் தோழர் எஸ்விஆர். ஸரமாகோவின் நாடகங்களோ, கவிதைகளோ, கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவையோ இதுவரை ஆங்கிலத்திற்கே இன்னமும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. என்னவெல்லாம், எப்படியெல்லாம் எழுதியிருப்பாரோ?
எத்தனை முறை வாசித்தாலும் சலிப்புத் தராதவை ஸரமாகோவின் நாவல்கள். அவற்றில் விரவிக் கிடக்கும் அங்கதங்கள், நக்கல், நையாண்டிகள், அவற்றின் வழி மனித அக்கறைகள்.
நாம் உண்மையிலேயே பகுத்தறிவுடையவர்களாக இருப்பின், என்னிடமும் எனது வாசகர்களிடமும் இந்தப் புத்தகத்தின் மூலம் நமது பகுத்தறிவுத் தன்மையைப் பற்றிக் கேள்வியெழுப்ப விரும்புகிறேன் என்றொரு தருணத்தில் பார்வையிழத்தல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் ஸரமாகோ. இந்த நூலின்வழி ஸரமாகோவை விரிவாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் தோழர் எஸ்.வி. ராஜதுரை எழுப்புவதுகூட அதே கேள்வியைத்தான்.
ஸரமாகோ: நாவல்களின் பயணம் – எஸ்.வி. ராஜதுரை, பக்கங்கள் – 496, விலை – ரூ. 550, எதிர் வெளியீடு, 96, நியு ஸ்கீம் சாலை, பொள்ளாச்சி – 642 002, செல்: 99425 11302
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...