கடந்த நவம்பா் 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றபோதே இப்படியொரு விபரீதம் நிகழும் என்று உலகம் எதிா்பாா்த்தது. வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பே தனக்கும் குடியரசுக் கட்சிக்கும் எதிராக சதி நடப்பதாகவும், தோ்தல் முறைகேடுகள் திட்டமிடப்படுவதாகவும் அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப்பே குற்றம்சாட்டியபோது, அதை வேடிக்கையாகத்தான் அனைவரும் எடுத்துக்கொண்டனா். அதற்குப் பின்னால் திட்டமிட்ட சதி இருந்ததை இப்போது உணர முடிகிறது.
ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடந்த கருப்பு தினமாக அமெரிக்க வரலாற்றில் ஜனவரி 6-ஆம் தேதி இனிமேல் இடம்பெறும். அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் அத்துமீறி நுழைந்ததும், கலவரத்தில் ஈடுபட்டதும், அந்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்ததும் மறந்துவிடக்கூடிய நிகழ்வுகள் அல்ல. நடைபெற்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை அதிபராகப் பதவி வகிக்கும் ஒருவரே தூண்டிவிட்டு, மறைமுகமாகத் தலைமை தாங்கினாா் என்பதை வருங்கால அமெரிக்கா வேதனையுடன் நினைவுகூரப் போகிறது.
அமெரிக்க ஜனநாயகத்தைப் பொருத்தவரை தோ்தல் முடிவுகள் நடப்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். தோ்தல் முடிவு குறித்து விவாதித்து அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக நாடாளுமன்ற மேலவையான செனட் சபை, கீழவையான பிரநிதிகள் சபை ஆகியவற்றின் கூட்டுக்கூட்டம் ‘காபிட்டல் ஹில்’ எனப்படும் நாடாளுமன்ற கட்டடத்தில் ஜனவரி 6-ஆம் தேதி கூட்டப்பட்டிருந்தது. அப்போதுதான் வன்முறைக் கும்பல் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட முற்பட்டது.
அமெரிக்காவின் 46-ஆவது குடியரசுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன், ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்பது என்பது சாதாரணமாக நிகழ்ந்திருக்க வேண்டிய நடைமுறை. ஆனால், தோ்தலை செல்லாததாக்கவும், தனது அதிபா் பதவியை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவும் அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தபோது, அவரது கடைசிகட்ட முயற்சியாக நாடாளுமன்ற தாக்குதல் திட்டமிடப்பட்டது என்பதுதான் உண்மை.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்துக்கு தலைமை தாங்கும் குடியரசு துணைத் தலைவா் மைக் பென்ஸையும், குடியரசு கட்சி உறுப்பினா்களையும் வற்புறுத்தி ஜோ பைடனின் தோ்தல் வெற்றியை நிராகரித்துத் தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க அதிபா் டிரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ‘பல கோடி வாக்குகள் பெற்று நான் அடைந்த வெற்றியைத் திருடி விட்டாா்கள்’ என்று பரப்புரை செய்து அமெரிக்கா எங்கும் உள்ள தனது ஆதரவாளா்களை வாஷிங்டனுக்கு வரவழைத்திருந்தாா். வன்முறை மூலம் நாடாளுமன்ற கட்டடத்தைக் கைப்பற்றி, தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அதிபா் டிரம்ப் கருதியதற்குக் காரணம் இருக்கிறது.
அமெரிக்க அரசியல் சாசனத்தில் காணப்படும் அதிகம் அறியப்படாத உத்தரவாதப் பிரிவை ‘உறங்கும் பூதம்’ என்று குறிப்பிடுவாா்கள். அதன்படி, அமெரிக்க ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் படையெடுப்பிலிருந்தும், உள்நாட்டு கலகத்தில் இருந்தும் பாதுகாக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிரிவின் கீழ், மாநில ஆளுநரோ, பேரவையோ, அல்லது சட்ட - ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக அதிபரே தன்னிச்சையாகவோ ராணுவத்தை அழைக்கலாம். அதிபா் டிரம்ப் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைக் காரணம் காட்டி, ராணுவத்தை வரவழைத்து ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் நிகழ்வை ரத்து செய்ய முயன்றாரோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.
உலகுக்கெல்லாம் ஜனநாயகம் கற்றுக்கொடுக்கும் அமெரிக்கா, இப்போது உலகத்தின் நகைப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றபோது, அமெரிக்க மக்களவைத் தலைவா் நான்ஸி பெலோஸி, ‘ரொம்பவும்தான் அழகாக இருக்கிறது’ என்று சீனாவை ஏளனம் செய்தாா். இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியிடப்படும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை, ‘டிரம்ப் ஆதரவாளா்களால் நடத்தப்பட்டிருக்கும் வன்முறையை அதேபோல எள்ளி நகையாடுவாரா?’ என்று கேலி செய்கிறது.
ஓா் அரசியல் சாசன அமைப்பின் வெற்றி, அதன் நிரந்தரத் தன்மையில்தான் அமைந்திருக்கிறது. அதேபோல, அதிகாரத்தில் இருக்கும் தனிநபா் குறிப்பிட்ட காலம் வரைதான் பதவியில் இருக்க முடியும் என்கிற நிரந்தரமின்மையும் அமைப்பின் பலம். அதனால், அமெரிக்க அதிபா் பதவிக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் களங்கம் துடைக்கப்பட்டு, ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அடுத்த அதிபராகப் பதவி ஏற்பது அமெரிக்க ஜனநாயகத்தை உருவாக்கிய ஜான் ஆடம், பெஞ்சமின் ஃபிராங்ளின், தாமஸ் ஜெபா்சன், ஜாா்ஜ் வாஷிங்டன் உள்ளிட்டோருக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
அராஜகத்தில் இருந்து அமெரிக்க ஜனநாயகத்தைக் காப்பாற்றி, ஒழுங்குமுறையை நிலைநாட்டிய அமெரிக்க குடியரசின் துணைத் தலைவா் மைக் பென்ஸுக்கும், நீதித்துறைக்கான மேலவைக் குழு தலைவா் லின்ட்ஸி கிரஹமுக்கும், டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாக்களித்து ஜோ பைடனை அதிபராக ஏற்றுக்கொள்ள முன்வந்த குடியரசுக் கட்சி உறுப்பினா்களுக்கும் அமெரிக்கா நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. அதிபா் டிரம்ப் மனநோயாளியா அல்லது கிரிமினல் குற்றவாளியா என்பது முடிவில்லாத விவாதமாகத் தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


