புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ஊழலின் ஊற்றுக்கண்! | தேர்தலில் பணப்புழக்கம் மற்றும் விரும்பத்தகாத விஷயங்கள் பற்றிய தலையங்கம்

News image
Updated On :5 ஏப்ரல் 2021, 2:25 am

ஆசிரியர்

 உயர்மதிப்பு செலாவணிகள் 2016-இல் செல்லாததாக்கப்பட்டும்கூட கருப்புப் பணத்தின் ஆதிக்கம் இந்தியாவில் குறையவில்லை என்பதைத் தேர்தல் நேர சோதனைகள் வெளிச்சம் போடுகின்றன. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தங்களும் அவரைத் தொடர்ந்து பதவி வகித்த ஆணையர்களின் நடவடிக்கைகளும் தேர்தலில் காணப்படும் பணப்புழக்கத்தை எள்ளளவும் கட்டுப்படுத்தவில்லை என்பது தெரிகிறது. 
இந்தியாவிலேயே தேர்தலில் மிக அதிகமாக பணம் புழங்கும் மாநிலமாக தமிழகம் உயர்ந்திருக்கிறது என்பது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய போக்கு. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம், ஆபரணங்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.450 கோடியை தாண்டியிருக்கிறது. கடந்த 2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம், ஆபரணங்களின் மதிப்பு ரூ.406.78 கோடி. வருமானவரித் துறையினர் ஆவணங்களில்லாமல் கைப்பற்றியிருப்பது ரூ.71.75 கோடி என்றால், பறக்கும் படை மூலமாக ரூ.134.52 கோடி பறிமுதலாகியிருக்கிறது. 
ரொக்கப்பணம், ஆபரணங்கள் மட்டுமல்ல, ரூ.3.29 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.2.20 கோடி மதிப்பிலான புகையிலை, கஞ்சா போன்ற போதைப் பொருள்களும், வெளிநாட்டு கரன்சிகளும்கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஆரோக்கியமான போக்கு அல்ல. 
தமிழகத்தின் தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி, சிறப்புக் காவல் பார்வையாளர், பொதுப் பார்வையாளர், அமலாக்கத் துறை டி.ஜி.பி., வருமான வரித்துறை இயக்குநர், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி, கலால் துறை ஆணையர் ஆகியோர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி சோதனைகள் குறித்து விவாதித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்பதும், முடிந்தவரை தேர்தலில் முறைகேடாகச் செலவிடப்படும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முயல்கிறார்கள் என்பதும் ஆறுதல் அளிக்கிறது. 
2014 மக்களவைத் தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்டது ரூ.76.89 கோடி என்றால், 2019 மக்களவைத் தேர்தலில் ரூ.952.01 கோடி முறைகேடான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்டது ரூ.139.40 கோடி என்றால், இப்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும் போலிருக்கிறது. இவ்வளவு பணம் தேர்தல் நேரத்தில் புழங்குகிறது என்றால் அது வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் யாருக்கும் இருக்க முடியாது. 
மத்திய அரசின் வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையமும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளை சோதனையிடுவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்றோ, பாரபட்சமான நடவடிக்கை என்றோ கூறிவிட முடியாது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்தார்கள் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறை ஆணையரும் சில இடங்களில் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் பலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோல தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் சந்தேகப்பார்வை பார்க்கப்படுபவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் ஒருபோதும் தேர்தல் பணிகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்தாலும், இந்திய காவல் பணி அதிகாரியாக இருந்தாலும் அதுபோன்ற நடவடிக்கை அவர்களுக்கு நிரந்தரக் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை உயரிய தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக என்கிற வேறுபாடு இல்லாமல் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்திருக்கிறது. மதுரையில் வாக்காளர் பட்டியலும் பணமுமாக இருந்த திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பல அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்திருக்கிறது. விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் வந்த சரக்குப் பெட்டக லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2,380 குக்கர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
சென்னை நீலாங்கரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதுபோன்று சோதனை நடத்துவதை தவறு என்றோ, உள்நோக்கம் கொண்டது என்றோ விமர்சிக்க முற்பட்டால் தங்கு தடையில்லாத பண விநியோகத்துக்கு அது வழிகோலும். 
தேர்தல் என்பது கொள்கையின் அடிப்படையில் இருந்ததுபோய், கார்ப்பரேட் வியாபாரமாக மாறி வருகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. "கையூட்டு கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்' என்று சொல்கிறோம். வாக்குக்குப் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் கணிசமாக இருக்கும் இந்தியாவில் சொல்லிவிட முடியாது. வாக்குகளை அல்ல, அரசியல் கட்சிகள் மக்களை விலை பேசுகின்றன. ஊழலின் ஊற்றுக்கண் தேர்தல்கள்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.