மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தடுமாறும் தமிழகம்! | தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த தலையங்கம்

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 2:45 am

ஆசிரியர்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, முடிவுக்காக தமிழகம் காத்துக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் அள்ளி வீசியிருக்கும் வாக்குறுதிகளை, எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் நிறைவேற்றுவது சுலபமாக இருக்கப்போவதில்லை. தமிழக அரசின் நிதி நிலைமை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பது குறித்து அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
கடன் தள்ளுபடி, இலவசங்கள் என்றெல்லாம் தேர்தல் பரப்புரைகளில் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு ஆட்சியில் அமரும்போதுதான் அவற்றை நிறைவேற்றுவது ஒன்றும் எளிதானதல்ல என்பது அவர்களுக்குத் தெரியப்போகிறது. உடனடியாக சில கடுமையான நிதி நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு புதிதாக ஆட்சியமைக்கும் கட்சி தள்ளப்படும்.
2011-12 நிதியாண்டுக்கும் 2018-19 நிதியாண்டுக்கும் இடையில் நிதிப் பற்றாக்குறையை 3% அளவிலும், கடன் அளவை மாநில ஜிடிபியின் 25% அளவிலும் தமிழகம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 2019-20 இல் பல மாநிலங்களில் பொருளாதாரம் பின்னடவை எதிர்கொண்டது. தமிழகத்திலும், நிதிப் பற்றாக்குறை அனுமதிக்கப்பட்ட 3% என்கிற அளவைக் கடந்து 2019-20-இல் 3.24%-ஆக அதிகரித்தது.
தமிழகத்தின் வருவாய், இரண்டு வகையிலிருந்து பெறப்படுகிறது. மத்திய தொகுப்பிலுள்ள ஜிஎஸ்டி பங்கும், மத்திய அரசின் உதவித் தொகைகளிலிருந்தும் முதலாவது வகை வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தின் சொந்த வருவாயிலிருந்து இரண்டாவது வகை பெறப்படுகிறது. மாநிலங்களின் சராசரி சொந்த வருவாய் 54% என்றால், தமிழகத்தில் அதுவே 69%.
மாநிலத்தின் சொந்த வருவாயில் பெரும்பகுதி கலால் வரியிலிருந்து கிடைக்கிறது. சமீப காலமாக சொந்த வருவாய் குறைந்து மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கான ஜிஎஸ்டி பங்கை அதிகம் நம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. பத்திரப் பதிவு, டாஸ்மாக் விற்பனை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தமிழகம், மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீடு பெற்று வருகிறது. 2018-19 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டிலிருந்து 3% அளவிலான வருவாய் கிடைத்து வந்தது. ஜூன் 2022-க்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்படும். அப்போது தனது வருவாயில் மிகப் பெரிய துண்டு விழுவதை தமிழகம் எதிர்கொள்ள வேண்டும்.
2013-14-க்கும் 2018-19-க்கும் இடையில் மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை மாநில ஜிடிபி-யின் 0.2%-லிருந்து 1.4%-ஆக அதிகரித்தது. 2019-20-இல் அது மேலும் அதிகரித்து 1.9%-ஆக உயர்ந்திருக்கிறது. மாநில அரசின் செலவினங்களை எதிர்கொள்ளும் அளவில் மாநில வரி வருவாய் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அதிகரித்து வரும் வருவாய் செலவினங்களை ஈடுகட்டும் அளவுக்கு தமிழகத்தின் வரி வருமானம் உயரவில்லை.
தேவைக்கேற்ற வருவாய் இல்லாத நிலையில், செலவினங்களை ஈடுகட்ட அரசு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தன்னுடைய அன்றாட செலவினங்களுக்காகக்கூட கடன் வாங்கும் நிலையில், மூலதனச் செலவுகளுக்கு மாநிலத்துக்கு வழியில்லாத நிலைமை ஏற்படுகிறது. புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதையும் மேற்கொள்ள முடியாத தேக்கநிலை ஏற்படுவதன் அறிகுறிதான் இது.
மாநிலத்தின் மூலதனச் செலவுகள் 2011-12-இல் மாநில ஜிடிபியில் 2.9% என்றால், 2018-19-இல் அதுவே 1.9%-ஆக குறைந்துவிட்டது. மாநில அரசு கடன் வாங்குவதற்கான அளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் மூலதனச் செலவுகளுக்கு மிகக் குறைவாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
தமிழகத்தின் நிதி நிலைமை தடுமாற்றம் காண்பதற்கு மிக முக்கியமான காரணம், தமிழக அரசின் மின் வாரியம். இலவச மின்சாரம், மின்சார வாரியம் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை, பகிர்மான இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியில் தொடர்கிறது.
2015-16 நிதியாண்டுகளில் தமிழக அரசு மின் வாரியத்தின் ரூ.22,815 கோடி கடனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் மாநிலத்தின் நிதி நிலைமையும் பாதிக்கப்பட்டது. 2020-இல் மின் வாரியம் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக ரூ.30,230 கோடிக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது.
தமிழக மின் வாரியத்தின் கீழ் 2 கோடி வீட்டு மின் இணைப்புகள், 36 லட்சம் வணிகம் சார்ந்த மின் இணைப்புகள், 7 லட்சம் தொழிற்சாலைகள், 21 லட்சம் விவசாய மோட்டார் இணைப்புகள், 11 லட்சம் குடிசைகளுக்கான இணைப்புகள் என்று மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திலும் மின் வாரியம் ரூ.2 இழந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடியும் என்பது தெரியவில்லை.
2021-22 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 4%-ஆகவும், கடன் அளவு 28.1%-ஆகவும் உயரும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது கடனைத் திருப்பி அடைக்கவும், கடனுக்கான வட்டியைக் கொடுப்பதற்கும்கூட தமிழக அரசு தடுமாற வேண்டிய நிலை ஏற்படப் போகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியமைத்தால் ஒருவேளை மத்திய நிதியமைச்சகம் ஆதரவுக் கரம் நீட்டலாம். பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக அரசுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தால்..?


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.