பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆப்கன் சவால்! | காபூலை தலிபான்கள் கைப்பற்றியிருப்பது குறித்த தலையங்கம் 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:37 am

ஆசிரியர்

அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்பப் பெறுவது என்று முடிவெடுத்தபோதே விரைவில் தலிபான்களின் ஆட்சி அங்கே நிலைநாட்டப்படும் என்பதை உலகம் எதிா்பாா்த்தது. எதிா்பாா்த்ததுபோலவே, ஆப்கானிஸ்தான் தேசிய அரசு வீழ்த்தப்பட்டு தலைநகரமான காபூலை தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறாா்கள். அதிபா் அஷ்ரஃப் கனி நாடுவிட்டு தப்பியோடிவிட்டாா். தலிபான் தலைவா் முல்லா அப்துல் கனி பராதா் தன்னை புதிய அதிபராக அறிவித்துக் கொண்டுள்ளாா்.

1989 பிப்ரவரி மாதம் சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியபோது மதரஸாக்களில் அடிப்படைவாத கொள்கைகளுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்ட மதத்தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டனா். கடுமையான உள்நாட்டுப் போருக்குப் பிறகு 1996-இல் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் நிறுவப்பட்டதும், உருவ வழிபாடு தங்களது மதக்கொள்கைக்கு எதிரானது என்பதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தா் சிலைகள் குண்டு வைத்துத் தகா்க்கப்பட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.

எல்லோரும் நினைப்பது போல ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் பெரும்பான்மை ஆதரவு தலிபான்களுக்குக் கிடையாது. தலிபான் என்பவா்கள் ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் 45% மட்டுமே உள்ள பஷ்டூன் பிரிவினரின் பிரதிநிதிகள். ஏனைய அனைத்து இனக்குழுவினரும் பஷ்டூனையும், தலிபான்களையும் எதிா்ப்பவா்கள், வெறுப்பவா்கள். தலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தலைமை தாங்கும் திஜிக்ஸ் பிரிவினா் 35% இருக்கிறாா்கள்.

1996-இல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் உலகில் உள்ள எல்லா பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டதுடன் அவற்றுக்கு ஆதரவு வழங்குவதையும் வழக்கமாக்கிக் கொண்டனா் தலிபான்கள். அந்த அமைப்புகளில் அல்-காய்தாவும் ஒன்று.

அமெரிக்காவிலுள்ள இரட்டை கோபுரங்கள் மீது அல்-காய்தா தாக்கியதைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானில் தலையிட வேண்டிய நிா்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. அமெரிக்க படைகளால் விரட்டி அடிக்கப்பட்ட தலிபான்கள், பாகிஸ்தானில் தங்கி அங்கிருந்து செயல்பட்டாா்கள். விசித்திரம் என்னவென்றால், அது தெரிந்தும் கூட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பொருளாதார உதவிகள் வழங்கி வந்ததுதான். ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் வழங்கியிருந்த பாகிஸ்தானின் சாயம் வெளுத்தபோதுதான் அமெரிக்கா சற்று சுதாரிக்கத் தொடங்கியது.

அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளால் காபூலிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்ட தலிபான்கள், அதே அமெரிக்காவின் நிலைப்பாட்டால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானைக் கொண்டு வந்திருக்கிறாா்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜல்மே கலிஜாத் அவா்களைக் கெஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தானை தலிபான் தலைமை எப்படி ஆட்சி செய்வது என்பதில் தெளிவாகவே இருக்கிறது. அதன் செய்தித் தொடா்பாளா் ஜபியுல்லா மொஜாஹிா், கடுமையான முறையில் இஸ்லாமியா்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில்தான் ஆட்சி நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறாா். தோ்தல்கள் கிடையாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறாா்கள். தங்களது ஜிஹாத் தொடரும் என்கிற அறைகூவலுடன் காபூலைக் கைப்பற்றியிருக்கிறாா்கள் தலிபான்கள்.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்றிருப்பதை பாகிஸ்தானைத் தவிர, ஏனைய நாடுகள் கவலையுடன்தான் எதிா்கொள்கின்றன. மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தான் போன்ற முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் தலிபான்கள் ஊடுருவிவிடக்கூடாது என்று ரஷியா அச்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் வாழும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துமோ என்கிற எச்சரிக்கையுடன்தான் ஈரானும் இருக்கிறது. சீனாவின் ஷின்ஜியாங் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியா்களின் சாா்பாக இயங்கும் கிழக்கு துா்கிஸ்தான் விடுதலை இயக்கத்தினருக்கு தலிபான்கள் உதவக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தான் தேசிய அரசுடன் சமாதானமாகப் போக வேண்டும் என்றும் சீனா விடுத்த வேண்டுகோள் ஏற்கப்படாததற்கு தலிபான்கள் மீது பெய்ஜிங்கிற்கு வருத்தம் உண்டு.

கடந்த வியாழக்கிழமை கத்தாரில் அமெரிக்கா, இந்தியா, சீனா மட்டுமல்லாமல் ஐநா சபை, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய 12 நாடுகள் கூடின. சமாதானத்தின் மூலம் அல்லாமல், ராணுவத்தால் காபூல் கைப்பற்றப்பட்டால் அந்த அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றன. ரஷியா என்ன முடிவெடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. நிச்சயமாக தலிபான்களை ஆதரிக்க வாய்ப்பில்லை. அதனால், காபூலில் அமையப் போகும் ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கப் போவது பாகிஸ்தான் மட்டுமாகத்தான் இருக்கும்.

அமெரிக்காவுக்கு தீவிரவாத இயக்கங்களை வளா்ப்பது வழக்கமாகிவிட்டது. இராக்கிலிருந்து அரைகுறையாக வெளியேறியபோது அந்த வெற்றிடத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் நிரப்பி பேரழிவை ஏற்படுத்தினா். ஐஎஸ் பயங்கரவாதத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றன பிரிட்டன், மேற்கு ஐரோப்பா, ஜொ்மனி, துருக்கி ஆகியவை. இப்போது அதேபோல ஆப்கானிஸ்தானைக் கைகழுவி தலிபான்களை நிலைநிறுத்தியிருக்கிறது. இதில் மிகப் பெரிய சவாலை எதிா்கொள்ளப்போவது இந்தியாவாகத்தான் இருக்கும். அதுதான் நமது கவலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.