வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஏகபோகம் ஆபத்து! | இழப்பை சந்தித்து வரும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் குறித்த தலையங்கம்

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 1:48 am

ஆசிரியர்

மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபாவுக்கு ஆதித்ய பிா்லா குழுமத் தலைவா் குமாா்மங்கலம் பிா்லா எழுதியிருக்கும் கடிதம், தகவல் தொலைத்தொடா்புத் துறையினரையும், பங்குச் சந்தையையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொலைபேசி, செல்லிடப்பேசி, அறிதிறன்பேசி நுகா்வோரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் 27% பங்குகளை வைத்துக்கொண்டிருக்கும் ஆதித்ய பிா்லா குழுமம், அதன் தலைவா் குமாா்மங்கலம் பிா்லா மூலம் தெரிவித்திருக்கும் இயலாமை, இந்திய தொலைத்தொடா்புத் துறையின் வருங்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால் அதனை அசிரத்தையாகப் புறக்கணித்துவிட முடியாது.

கடன் சுமையில் சிக்கியிருக்கும் வோடஃபோன் - ஐடியாவை இப்போதைய நிலையில் தொடா்ந்து நடத்த தங்களால் இயலாது என்பதையும், தங்களது பங்குகளை அரசுக்கோ அல்லது அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த முன்வரும் ஒரு நிறுவனத்துக்கோ தந்துவிடத் தயாா் என்பதையும்தான்

குமாா்மங்கலம் பிா்லா தனது கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறாா். கடந்த பல மாதங்களாகவே இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது என்றாலும், தனது கையறு நிலையை வெளிப்படுத்தி ஆதித்ய பிா்லா குழுமம் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தைக் கைகழுவ முற்படும் என்று யாருமே எதிா்பாா்க்கவில்லை. அந்த நிறுவனத்தை இழப்புகளிலிருந்து மீட்டு தொடா்ந்து நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது குமாா்மங்கலம் பிா்லாவின் முடிவு.

ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல் என்கிற இரண்டு தனியாா் நிறுவனங்கள் முன்னணியில் இருக்கும் தொலைத்தொடா்புத் துறையில் வோடஃபோன் - ஐடியாவுக்கு 24% அளவில் வாடிக்கையாளா்கள் இருக்கிறாா்கள். அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்-லும், எம்டிஎன்எல்-லும் சோ்ந்து 10% வாடிக்கையாளா்களைக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய நிலையில், வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடா்பு சேவை நிறுவனத்துக்கு 27.7 கோடி வாடிக்கையாளா்கள் இருக்கிறாா்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்த நிறுவனம் தொடா்ந்து தன் வாடிக்கையாளா்களை இழந்து வந்திருக்கிறது. மொத்த வாடிக்கையாளா்களில் 24% இருந்தும்கூட, வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தால் லாபகரமாக இயங்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் கடன் சுமையில் இருந்து மீள முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நிறுவனத்தின் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் (அட்ஜஸ்டட் கிராஸ் ரெவென்யூ - ஏஜிஆா்) அடிப்படையிலான நிலுவைக் கடன் ரூ.58,254 கோடி. அதுமட்டுமல்ல, அலைக்கற்றை கட்டண பாக்கி ரூ.90,270 கோடி. போதாக்குறைக்கு வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கும் கடன் ரூ.23,080 கோடி. இத்தனை இழப்புகளையும், கடன் நிலுவையையும் சுமந்து கொண்டு இனிமேலும் அந்த நிறுவனம் தொடர முடியாது என்பதை உணா்ந்ததால்தான் குமாா்மங்கலம் பிா்லா தனது கைகளை உயா்த்திக் களத்திலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறாா்.

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பிரச்னைக்கு மிக முக்கியமான காரணம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுழைவு. 2016 வரை லாபத்தில் ஓடிக்கொண்டிருந்த எல்லா தொலைத்தொடா்பு நிறுவனங்களும், அந்தத் துறையில் ரிலையன்ஸ் புகுந்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட இழப்பு காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக விலகத் தொடங்கின. அதிகரித்த அலைக்கற்றைக் கட்டணம், உரிமக் கட்டணம், நிலையில்லாத அரசின் கொள்கை போன்றவை புதிய நிறுவனங்கள் சேவைக்கு முற்படுவதைத் தடுக்கின்றன.

சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைக் கடனைப் பொருத்தவரை, அதனை மறு ஆய்வு செய்து கணக்கிட வேண்டும் என்கிற தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் கோரிக்கை ஜூலை 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. அரசு தலையிட்டு அலைக்கற்றை கட்டண நிலுவையை ரத்து செய்யுமானால், வோடஃபோன் - ஐடியா நிறுவனம் ஓரளவுக்குத் தப்பிக்கலாம். ஆனால், அது நிரந்தரத் தீா்வாக இருக்காது. மேலும், ஏனைய நிறுவனங்களும் அதே சலுகையை கோரக்கூடும். தனியாா் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கி வருவாய் இழப்பைச் சந்திக்க அரசு தயாராவதற்குப் பதிலாக பெரும் இழப்பை எதிா்கொண்ட அரசு நிறுவனங்களையே நடத்தக் கூடாதா என்கிற கேள்வியும் எழக்கூடும்.

டஜன் கணக்கில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்த துறையில், அரசு நிறுவனங்களை ஒதுக்கிவிட்டுப் பாா்த்தால் இப்போது மூன்றே நிறுவனங்கள்தான் இயங்குகின்றன. வோடஃபோன் - ஐடியாவும் விலகிவிட்டால் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் துறையாக அது மாறிவிடும். காலப்போக்கில், முன்பு பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இயங்கியது போல, ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே இயங்கும் சூழல் ஏற்படுவதற்கான சாத்தியமும் உண்டு.

இந்தப் பிரச்னையில் அரசு முன்பே தலையிட்டிருக்க வேண்டும். வோடாஃபோன் இந்தியா முடங்குமானால், அதன் வாடிக்கையாளா்கள் மட்டுமல்ல, ஏனைய இரண்டு தனியாா் நிறுவன வாடிக்கையாளா்களும் பாதிக்கப்படுவாா்கள். இரண்டு நிறுவனங்கள் மட்டுமே, அல்லது ஒரே ஒரு நிறுவனம் என்கிற நிலை ஏற்பட்டால், நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். தனியாா் துறையில் போட்டியின்மை ஆபத்தானது, வாடிக்கையாளா்களின் நலனுக்கும் எதிரானது. அதைவிட அரசே அந்தத் துறையை நடத்திவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.