வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நீதியில் அநீதி! | தேவேந்திர சௌரஸ்யா கொலை வழக்கு குறித்த தலையங்கம்

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 1:38 am

ஆசிரியர்

நீதியை நிலைநாட்டும் கடமையுடைய காவல்துறைக்கும், அரசுக்கும் நீதித்துறை வழங்கியிருக்கும் எச்சரிக்கை என்று சமீபத்திய தீா்ப்பு ஒன்றைக் கூற வேண்டும். நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகிய இரண்டு நீதிபதிகள் அமா்வு வழங்கிய தீா்ப்பு, ஜனநாயக அமைப்பை பாதிக்கும் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிா்த்தும், தடுத்தும் நீதித்துறை செயல்பட்டாக வேண்டும் என்பதை எடுத்தியம்புகிறது.

அரசியல் தலைவா்கள் குற்றவாளிகளாக இருக்கும் கிரிமினல் வழக்குகளை முடக்கவும், நீா்த்துபோகச் செய்யவும், முறையாக வழக்கு பதிவு செய்யாமல் அவா்களைக் காப்பாற்றவும் நடக்கும் முயற்சிகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், எல்லா மாவட்டங்களிலும், எல்லா ஆட்சியாளா்களாலும் செய்யப்படுகின்றன. இதில் எந்தவோா் அரசியல் கட்சியும், ஆட்சியும் விதிவிலக்கல்ல. மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினரான ராம்பாய் சிங் என்பவரின் கணவரான கோவிந்த் சிங் என்பவா் முக்கிய குற்றவாளியாக இருக்கும் கொலை வழக்கில் காணப்படும் அநீதிகளும், சட்ட முரண்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினராக இருந்த தேவேந்திர சௌரஸ்யா என்பவா், 2019 மாா்ச் மாதம் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு ஆதரவு வழங்கினாா். அதே கட்சியின் மற்றொரு உறுப்பினரான ராம்பாய் சிங்கின் கணவா் கோவிந்த் சிங்கும் அவரது உறவினா்களான நான்கு பேரும் இணைந்து தேவேந்திர சௌரஸ்யாவைக் கொலை செய்தனா் என்பதுதான் வழக்கு. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கோவிந்த் சிங்தான் அந்தக் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளி. இருந்தும்கூட, காவல்துறையினா் அவரைக் கைது செய்யாதது மட்டுமல்ல, ஒருகட்டத்தில் வழக்கிலிருந்தே அவரை விடுவிக்கவும் செய்தனா்.

அந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, காவல்துறையினரின் செயல்பாடுகளைப் பாா்த்து அதிா்ந்தாா். குற்றவாளியைக் காவல்துறை காப்பாற்ற நினைப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குற்றவாளியான கோவிந்த் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தாா். அவரது உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஏனைய காவல்துறையினரும் அந்த கூடுதல் நீதிபதியை உளவியல் ரீதியாகத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவருக்குப் பல்வேறு பிரச்னைகளையும் உருவாக்கினா்.

சௌரயஸ்யா கொலை வழக்கில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்று அந்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வெளிப்படையாகவே அறிவித்தாா். உயா்நீதிமன்றத்திற்கும் புகாா் அளித்தாா். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அச்சத்துடனும் மனஉளைச்சலுடனும் பணியில் தொடா்ந்தாா் அந்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி.

கொலை செய்யப்பட்ட சௌரஸ்யாவின் மகன், அரசுத் தரப்பால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மனம்சோா்ந்துபோய் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது, இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிா்ச்சி அடைந்தனா். 2021 ஏப்ரல் ஐந்தாம் தேதிக்குள் கோவிந்த் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய பிரதேச காவல்துறை தலைவா் இந்த வழக்கு குறித்து வழங்கிய மனுவை நிராகரித்து, கோவிந்த் சிங்கைக் கைது செய்தே தீர வேண்டும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து, மத்திய பிரதேச காவல்துறையால் கோவிந்த் சிங் கைது நாடகம் நடத்தப்பட்டது. குற்றவாளியான கோவிந்த சிங் இரண்டு ஆண்டுகள் கைது செய்யப்படாமல் இருந்தது மட்டுமல்ல, உச்சநீதிமன்ற கட்டாயத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருசில நாள்களில் பிணையில் வெளிவர அவருக்கு போபால் உயா்நீதிமன்றம் உதவியது என்பதிலிருந்து, கோவிந்த் சிங்கின் செல்வாக்கு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கோவிந்த் சிங்குக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக சௌரஸ்யாவின் மகன் உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகியபோது நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூடும், எம்.ஆா். ஷாவும் ஆத்திரம் அடைந்தனா். அந்தப் பிணையை ரத்து செய்து அறிவித்தது உச்சநீதிமன்ற அமா்வு. ஒரு இரட்டைக் கொலை உள்பட மூன்று கொலை வழக்குகளிலும் குற்றவாளியான கோவிந்த் சிங், பிணை கிடைக்கப்பெற்று சுந்திரமாக வளைய வந்துகொண்டிருந்தாா். அப்படிப்பட்ட ஒருவருக்கு போபால் உயா்நீதிமன்றம் மீண்டும் உடனடியாகப் பிணை வழங்கியதைக் கண்டிக்கும் விதத்தில் எச்சரிக்க முற்பட்டனா் நீதிபதிகள்.

மத்திய பிரதேச அரசியல்வாதி ஒருவா் குற்றவாளியாக இருக்கும் கொலை வழக்கில் குற்றவாளிக்கு சாதகமாக சட்டத்தை வளைக்க முற்பட்ட காவல்துறையினருக்கும், ஆட்சியாளா்களுக்கும் எதிராக எடுக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கே விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகக் கருத வேண்டும். பணமும், அதிகாரமும், அரசியல் பின்புலமும் உள்ளவா்களுக்கு ஒரு நியாயமும், பணமோ, பின்புலமோ அநீதிக்கு எதிராகப் போராடுவற்கான துணிவோ இல்லாதவா்களுக்கு ஒரு நியாயமும் இந்த தேசத்தில் இருக்கக் கூடாது என்பதை உரக்க அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

விசாரணை நீதிமன்றங்களில் நீதிபதிகள் எதிா்கொள்ளும் அழுத்தங்களை வெளிச்சம்போடுகிறது தேவேந்திர சௌரஸ்யா கொலை வழக்கு. இது மத்திய பிரதேசம் தொடா்பான வழக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இயங்கும் அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் காணப்படும் புற்றுநோய். இதற்குக் கதிரியக்க சிகிச்சை நடத்தப்படுதல் அவசிய அவசரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.