செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வருங்காலம் என்னவாகும்? | மனித வளத்தின் ஆதாரம் குறித்த தலையங்கம்

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் வலுவான தரமான மனித வளம்தான் அடிப்படை. அந்த மனித வளத்தின் ஆதாரம் குழந்தைகள்தான். அவர்களுக்குத் தரமான கல்வியையும், திறன் மேம்பாட்டுக்குச் சாதகமான சூழலையும்...

News image
Updated On :13 பிப்ரவரி 2021, 3:17 am

ஆசிரியர்


ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா உயர வேண்டும் என்று கனவு காண்கிறோம். வருங்காலத்தில் இந்தியா உலக வல்லரசுகளில் ஒன்றாக இருக்கப் போகிறது என்று பெருமை பேசுகிறோம். இவையெல்லாம் நனவாகுமா இல்லை வெறும் பகல் கனவாகத் தொடருமா என்பதை வருங்கால சந்ததியினர்தான் தீர்மானிக்க வேண்டும். 

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் வலுவான தரமான மனித வளம்தான் அடிப்படை. அந்த மனித வளத்தின் ஆதாரம் குழந்தைகள்தான். அவர்களுக்குத் தரமான கல்வியையும், திறன் மேம்பாட்டுக்குச் சாதகமான சூழலையும், சமவாய்ப்புகளையும் வழங்குவது வளமான வருங்காலத்தின் அடிப்படைகள். இந்த அடிப்படைகள் இந்தியாவில் வலுவாக இல்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்தியம்புகின்றன. 

உலக வங்கியின் 2019 அறிக்கையின்படி, 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இந்தியாவில் 36.3 கோடி. அரசியல் சாசனத்தின் 39-வது பிரிவின்படி, எல்லா குழந்தைகளும் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடன் இயங்குவதற்கும், தங்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதற்கும் அரசு கடமைப்பட்டிருக்கிறது. 

"குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்கிற சர்வதேச தன்னார்வ நிறுவனம் 2019-இல் வெளியிட்ட குழந்தைகளின் நல்வாழ்வு குறித்த சர்வதேச ஆய்வின்படி, 176 நாடுகளின் தரப்பட்டியலில் இந்தியா 113-வது இடத்தில் இருக்கிறது. குழந்தை மரணம், ஊட்டச் சத்து குறைவு, வளர்ச்சியின்மை, கல்வியின்மை ஆகியவற்றின் அடிப்படையில் அந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

2018 நிலவரப்படி, 5 வயதுக்குக் கீழேயுள்ள இந்தியக் குழந்தைகளில் 38.4% பேர் உடல் வளர்ச்சிக் குறைவானவர்களாக இருக்கிறார்கள். அதுவே சீனாவில் வெறும் 6% மட்டுமே; 8 முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் சீனாவில் 7.6% என்றால் இந்தியாவில் 20%; குழந்தைத் தொழிலாளர்களை உலகிலேயே அதிகமாகப் பணி அமர்த்தும் நாடு இந்தியாதான். செப்டம்பர் 2020-இல் வெளியிடப்பட்டிருக்கும் ஓர் ஆய்வின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவிலுள்ள 6 வயதுக்கு குறைவான 19.9 கோடி குழந்தைகளில் 21% குழந்தைகள் போதிய அளவு ஊட்டச் சத்துணவு பெறாதவர்கள்; 36% குழந்தைகள் எடை குறைவானவர்கள்; 38% குழந்தைகள் அனைத்து தடுப்பூசிகளும் போடாதவர்கள். 

இந்தியாவிலுள்ள மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் குள்ளமாகவும், எலும்பும் தோலுமாகவும் வளர்ச்சி குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கும் மனித வளத்தை வைத்துக்கொண்டு நாம் எப்படி வருங்கால இந்தியப் பொருளாதாரத்தை நிர்வகிக்கப் போகிறோம் என்கிற அச்சம் மேலிடுகிறது. 

கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு கடுமையாகக் குறைந்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. தனி நபர் வருமான வீழ்ச்சி, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் இருப்பது, மருத்துவச் செலவு ஆகியவை கீழ் மற்றும் நடுத்தர, அடித்தட்டு மக்களை மிகக் கடுமையாகப் பாதித்திருப்பதால் அதன் நேரடி விளைவாக குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தும் குறைந்துவிட்டதில் வியப்பொன்றுமில்லை. 

2020 உலக பட்டினி குறியீட்டின்படி, 107 நாடுகளில் இந்தியா 94-ஆவது இடத்தில் இருக்கிறது. "லான்செட்' பத்திரிகை ஆய்வின்படி, தரமான மருத்துவ வசதி வழங்குவதில் 195 நாடுகளில் இந்தியாவின் இடம் 145. இதெல்லாம் நேரடியாக குழந்தைகளைப் பாதிக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

ஊட்டச்சத்து குறைவு, மருத்துவ வசதி குறைவு என்பவை மட்டுமல்லாமல், கல்வியிலும் வருங்கால இந்தியத் தலைமுறை கடுமையாக வஞ்சிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி என்கிற கோஷம் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில், வசதி பெற்றோருக்குத்தான் கல்வி என்பதுதான் நிஜம். 

உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கல்வி அமைப்பு இந்தியாவில்தான் காணப்படுகிறது. ஏறத்தாழ 15 லட்சம் பள்ளிக்கூடங்களில் 2.5 கோடி குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். இத்துடன் நமது சாதனை முடிந்துவிடுகிறது. இதற்கே 60 ஆண்டுகள் போராடியிருக்கிறோம்.

பள்ளியில் சேர்க்கை அதிகமாக இருந்தாலும், ஆரம்பப் பள்ளியிலிருந்து உயர்நிலைக் கல்விக்கும், உயர்நிலைக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்விக்கும் போகப்போக பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம். அதன் விளைவாகப் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. 

ஆரம்பக் கல்வியின் தரம் அச்சுறுத்துகிறது. 5 வருட பள்ளிப் படிப்புக்குப் பிறகு, சரி பாதி குழந்தைகளின் வாசிப்புத் திறனும், கணக்குப்போடும் திறனும், எழுதும் திறனும் தலைகுனிய வைக்கின்றன. ஐந்தாம் வகுப்பு குழந்தைகளில் பலர் இரண்டாம் வகுப்பு பாடங்களைக்கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதாக 2018 ஏசர் ஆய்வு தெரிவிக்கிறது. 

இதற்கு வறுமை, தரமில்லாத பயிற்றுவிப்பு, ஆசிரியர்களின் தரம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிராமப்புற அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பது இதற்குக் காரணம் என்று எத்தனையோ அறிக்கைகள் சுட்டிக்காட்டியும்கூட அரசியல் காரணங்களால் ஆட்சியாளர்கள் அது குறித்துக் கவலைப்படாமல் இருக்கிறார்கள். 

இந்த நிலை தொடருமானால், வல்லரசுக் கனவு பலிக்காது என்பதை சொல்லியா தெரியவேண்டும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.