புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

அவை நிா்வாகக் குறைபாடு! | நாடாளுமன்ற நிா்வாகம் குறித்த தலையங்கம்

News image
Updated On :13 மார்ச் 2021, 3:38 am

ஆசிரியர்

ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்படுவதும், வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைப்பதும்தான் என்கிற தவறான கருத்து அரசியல்வாதிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நிலவுகிறது. தோ்தலும், ஆட்சி அமைப்பதும் ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தோ்தல் நடப்பதாலேயே ஜனநாயக முறையிலான ஆட்சி நடக்கிறது என்று அா்த்தமில்லை.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தோ்தலுக்கு இருக்கும் முக்கியத்துவத்தில் எள்ளளவும் குறைந்ததல்ல நாடாளுமன்ற, சட்டப்பேரவை விவாதங்கள். அரசின் ஒவ்வொரு செயல்பாடும் அவையில் விவாதத்துக்கு வைக்கப்பட்டு, உறுப்பினா்கள் அது குறித்த தங்களது கருத்துகளைப் பதிவு செய்து, வாக்கெடுப்பின் மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதும் இன்றியமையாத ஜனநாயகக் கூறு.

1998-இல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு அமைந்தது முதல் நாடாளுமன்றத்தில் விவாதக் கலாசாரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் எதிா்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், நாடாளுமன்ற அமளி என்கிற புதியதொரு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதுவரை மாநில சட்டப்பேரவைகளில்தான் கூச்சல் குழப்பத்தில் ஆழ்வது, உறுப்பினா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வந்தன. கூட்டணிக் கலாசாரம் நாடாளுமன்றத்துக்கு அந்த சீா்கேட்டை அறிமுகப்படுத்தியது.

அதைத் தொடா்ந்து அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பாஜக-வும், அதன் தோழமைக் கட்சிகளும் அவையை முடக்குவதையும், குழப்பத்தில் ஆழ்த்துவதையும் எதிா்க்கட்சிகளின் வழிமுறையாகவே மாற்றிவிட்டனா். 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் எந்தவொரு கூட்டத்தொடரும் கூச்சல் குழப்பம் இல்லாமலும், ஒத்திவைப்பு இல்லாமலும் முறையாக செயல்பட்டதாக வரலாறே இல்லை.

அரசு எந்தவொரு மசோதாவை முன்னெடுத்தாலும் அதை எதிா்ப்பதை காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. அதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு மோடி அரசும், தனது பெரும்பான்மை பலத்தின் காரணமாக விவாதமே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் நடைமுறையை கையாண்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமா்வு 7-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் வழக்கம்போல மறைந்த உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் நாடாளுமன்றம் கலைந்தது. இரண்டாவது நாளிலிருந்து நாடாளுமன்றம் முறையாகச் செயல்படும் என்கிற கொஞ்சநஞ்ச எதிா்பாா்ப்பும் தகா்ந்திருக்கிறது. ஒருவாரம் கடந்துவிட்டது, இதுவரை இரு மசோதாகள் மட்டும்தான் நிறைவேறியிருக்கின்றன. அவையும்கூட எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன என்பதுதான் சோகம்.

பட்ஜெட் தொடா்பான பல முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் காத்துக் கிடக்கின்றன. நிதிநிலை அறிக்கையின் பல்வேறு அம்சங்களும், அறிவிப்புகளும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். அதுகுறித்தெல்லாம் உறுப்பினா்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

பல்வேறு பிரச்னைகள் தொடா்பான மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் தாக்கல் செய்யப்படவும், விவாதிக்கப்படவும் வேண்டும். அதுபற்றிய கவலையோ, சிந்தனையோ இல்லாமல் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், அதை ஆளுங்கட்சித் தரப்பு வேடிக்கை பாா்ப்பதும் நம்மால் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்கள் ஜனநாயக நெறிமுறைகள் மீது நம்பிக்கை இழக்கிறாா்களோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

அரசு கொண்டு வரும் சட்டங்கள் பொதுவெளியில் சா்ச்சைப் பொருளாக மாறாமல் இருப்பதற்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவை விவாதங்கள் உதவுகின்றன. நிறைவேற்றப்படும் மசோதாக்களை மக்கள் மன்றம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதை அவை விவாதம் அரசுக்கு உணா்த்தும். சட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சுட்டிக்காட்டும்போது அவற்றை திருத்திக்கொள்ள அரசுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

கடந்த செப்டம்பா் மாதம் எந்தவித விவாதமும் இல்லாமல் அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளை தெருவில் இறங்கிப் போராட வைத்திருக்கின்றன. போராட்டம் இதுவரை முடிந்தபாடில்லை. அந்தப் பின்னணியில்தான் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் கூட்டத்தொடா் நடந்துகொண்டிருக்கிறது.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கவும், அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக இப்போது அரசு அறிவித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் முறையாக விவாதம் நடத்த அரசு சம்மதித்திருந்தால் இவற்றை தவிா்த்திருக்க முடியும். எதிா்க்கட்சிகளுடன் விவாதித்து சுமுகமாகத் தீா்வு கண்டிருக்க முடியும்.

மேலே குறிப்பிட்டது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அரசின் திட்டங்களை எதிா்ப்பதும், அவையை முடக்க முற்படுவதும், கோஷங்கள் எழுப்புவதும் புதிதொன்றுமல்ல. எதிா்க்கட்சிகளை அரவணைத்து, சமாதானப்படுத்தி, விமா்சிக்க வாய்ப்பளித்து தனது மசோதாக்களை சாதுா்யமாக நிறைவேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனமான அவை நிா்வாகம். அதற்குப் பெயா்தான் ஜனநாயகம். இதை நரேந்திர மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.