இடைத்தேர்தலல்ல, "எடை' தேர்தல்! | ஆளுங்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்திய முடிவுகள் குறித்த தலையங்கம்


ஒன்றிய பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்திலுள்ள மண்டி, மத்திய பிரதேச மாநிலம் கன்ட்வா ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், 13 மாநிலங்களிலுள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 30) இடைத்தேர்தல் நடைபெற்றது.
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்திருப்பதிலிருந்து இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய ஆளுங்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. மத்திய அரசை கண் திறக்கச் செய்ததற்காக இடைத்தேர்தல் முடிவுகளுக்கு நன்றி கூற வேண்டும்.
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது என்றாலும் படுதோல்வி அளித்திருக்கிறது என்று கூறிவிட முடியாது. மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சிவசேனை ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றியடைந்துள்ளன. சட்டப்பேரவைத் தொகுதி முடிவுகள் வழக்கம்போல ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே காணப்படுகின்றன.
இடைத்தேர்தல் முடிவுகளால் சிவசேனை பூரிப்படையக்கூடும். முதல்முறையாக மகாராஷ்டிரத்துக்கு வெளியே தாத்ரா நகர் ஹவேலி தொகுதியில் சிவசேனை வெற்றியடைந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு அனுதாப வாக்குகள் காரணம் என்றாலும்கூட சிவசேனையின் மகிழ்ச்சியில் நியாயம் இருக்கிறது.
அனைவரது கவனமும் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் ஹிமாசல பிரதேசத்தில் குவிந்திருந்தது. ஹிமாசல பிரதேசத்தின் காங்கிரஸ் முகமாக இருந்த முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மறைவுக்குப் பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் அதன் முக்கியத்துவம் அதிகரித்தது. மண்டி மக்களவைத் தொகுதிக்கும், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றியடைந்திருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மாநில முதல்வர் ஜெயராம் தாக்குரும், பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் மண்டி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தத் தோல்வியின் கடுமை அதிகரிக்கிறது.
பாஜக வசமிருந்த மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் போட்டியிட்டு அவரை எதிர்த்து நின்ற கார்கில் போர் கதாநாயகன் பிரிகேடியர் குஷால் தாக்குரை 8,766 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். பாஜக சற்றும் எதிர்பாராத தோல்வி இது. மக்களவைத் தொகுதியில் மட்டுமல்லாமல் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆளும் பாஜகவால் வெற்றியடைய முடியாதது அந்தக் கட்சியின் செல்வாக்கு, மாநிலத்தில் கடுமையாகச் சரிந்திருப்பதை உணர்த்துகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற ஐந்து சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல, ஆளுங்கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம் பிகாரில் இரண்டு தொகுதிகளையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திரத்தில் ஒரு தொகுதியிலும், திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும், மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் அடைந்திருக்கும் இடைத்தேர்தல் வெற்றிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு நிலவுவதை உறுதிப்படுத்துகின்றன. மிசோரம், மேகாலயா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சிகள் வெற்றியடைந்திருக்கின்றன.
தெலங்கானா மாநிலம் ஹுசாராபாத் தொகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பாஜகவிடம் தோல்வியடைந்திருப்பதை ஆளுங்கட்சியின் செல்வாக்குச் சரிவு என்று கொள்வதா, அல்லது பாஜகவின் வளர்ச்சி என்று கருதுவதா என்பதை வரும் நாள்கள் உணர்த்தும்.
ஹரியாணாவில் ஏல்னாபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்திய தேசிய லோக்தள் கட்சி வேட்பாளர் அபய் சிங் சௌதாலா பாஜக வேட்பாளரை 1,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் வைப்புத்தொகையை இழந்திருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை தண்டனை பெற்ற ஓம்பிரகாஷ் சௌதாலா தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. அவரது மகன் அபய் சிங் சௌதாலாவின் வெற்றிக்கு அவரது பிரசாரம் ஒரு முக்கிய காரணம்.
விவசாயிகள் போராட்டம் நடக்கும் ஏல்னாபாத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் 12,000 வாக்குகளிலிருந்து பாதியாகக் குறைந்திருக்கிறது. காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. விவசாயிகள் போராட்டம் வலுவிழப்பதையும் ஹரியாணாவில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்துகொண்டிருப்பதையும் இடைத்தேர்தல் முடிவு உணர்த்துகிறது என்றும் கருதப்படுகிறது.
பாஜக ஆட்சியிலிருக்கும் மத்திய பிரதேசத்தில் 3 தொகுதியில் இரண்டில் பாஜகவும் ஒரு தொகுதியில் காங்கிரஸூம் வெற்றியடைந்தன என்றால், கர்நாடகத்தில் காங்கிரஸூம் பாஜகவும் தலா ஓர் இடத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் பாஜக தோல்வியடைந்திருப்பது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு.
பெரும்பாலும் ஆளுங்கட்சிகளுக்குச் சாதகமாகவே இடைத்தேர்தல் முடிவுகள் அமைவது வழக்கம். அதையும் மீறி ஆளுங்கட்சி பின்னடைவைச் சந்திக்கிறது என்றால் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது என்று பொருள். அதை பாஜக தலைமை புரிந்துகொண்டால் சரி...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...