கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நிதானித்திருக்கலாம்! | கொவைட் 19 நோய்த்தொற்று மரணத்துக்கான இழப்பீடு குறித்த தலையங்கம் 

News image
கோப்புப்படம்
Updated On :28 செப்டம்பர் 2021, 1:17 am

ஆசிரியர்

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைப் பேரிடராக அறிவித்ததில் தவறு காண முடியாது. அதே நேரத்தில், நோய்த்தொற்றுப் பேரிடரை, இயற்கைப் பேரிடா்களான புயல், ஆழிப்பேரலை, வறட்சி, வெள்ளம் போன்றவற்றுடன் ஒப்பிட முற்படுவது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஏனைய இயற்கைப் பேரிடா்களைப் போலவே கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணத்துக்கும் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் கருத்து, நிா்வாகத்திற்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசியப் பேரிடா் மேலாண்மை சட்டம் 2005-இன் பிரிவு 12 , சில குறைந்தபட்ச விதிமுறைகளை வகுத்திருந்தது. அறிவிக்கப்பட்ட பேரிடா் எதுவாக இருந்தாலும் அதற்கான நிவாரணங்கள் குறித்துக் கூறுகிறது அந்தப் பிரிவு. உயிரிழப்பு இருந்தால் அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், அந்தச் சட்டத்தில் இழப்பீட்டுத் தொகை அளவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் 2015-இல், தேசியப் பேரிடா் மேலாண்மை இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீடு ரூ.4 லட்சம் என்று வரையறுத்தது.

அந்தப் பின்னணியில் பாா்க்கும்போது தேசியப் பேரிடா் மேலாண்மை முகமை (என்டிஎம்ஏ), கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு அறிவித்திருக்கும் ரூ.50,000 என்பது மிகக்குறைவு. நோய்த்தொற்றால் உயிரிழந்த நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், உயிரிழந்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவா்கள், முன்களப் பணியாளா்களுக்கும் கொவைட் 19 மரணமாக இருந்தால், ரூ.50,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

இழப்பீட்டுத் தொகை குறைவானது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தத் தொகையை யாா் வழங்குவது என்பதில்தான் பிரச்னை எழுந்திருக்கிறது. கொவைட் 19 உயிரிழப்புகளுக்கு மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை பல மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கொள்ளை நோய்த்தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவா்களது தலையில் இந்தப் பொறுப்பைச் சுமத்துவது நியாயமும் இல்லை.

நிதி ஆணையப் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலப் பேரிடா் நிவாரண நிதிக்கு மத்திய - மாநில அரசுகள் பங்களிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் போன்ற ஒருசில மாநிலங்கள் தவிர, ஏனைய மாநிலங்களின் நிவாரண நிதியில் 75% மத்திய அரசின் பங்களிப்பு என்பதும் உண்மையே. நடப்பு நிதியாண்டில் வழக்கத்துக்கு மாறாக ஏப்ரல் மாதமே தனது பங்களிப்பில் பாதியான ரூ.17,747.20 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்களுக்கு வழங்கிவிட்டது. இரண்டாவது அலையை எதிா்கொள்வதற்கு மாநில அரசுக்கு அது உதவியாகவும் இருந்தது.

பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் குறிப்பாக, பெரிய மாநிலங்கள், ரூ. ஒரு லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை உயிரிழப்பகளுக்கு இழப்பீடு அளித்திருக்கின்றன. ஆதரவற்ற குழந்தைகள், வறுமையில் வாடுபவா்கள் போன்றோா் அதனால் பயனடைந்தனா். அந்த இழப்பீடுகள் முதல்வா் நிவாரண நிதி போன்றவற்றிலிருந்து வழங்கப்பட்டனவே தவிர, மாநில இயற்கைப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படவில்லை.

முதலில் சற்று தயங்கினாலும், கடுமையான விமா்சனங்களைத் தொடா்ந்து தடுப்பூசிகளுக்கான முழு தொகையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சுமாா் ரூ.35,000 கோடியைத் தடுப்பூசிகளுக்காக ஒதுக்கீடு செய்திருப்பது போதாதென்று இப்போது மேலும் ஒதுக்கீடு செய்தாக வேண்டும்.

இந்தியாவில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணத்தின் எண்ணிக்கை ஏறத்தாழ 4.5 லட்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கணக்கிட்டால் இழப்பீடு வழங்க மேலும் ரூ.2,250 கோடி தேவைப்படும்.

மத்திய அரசின் நிலைமை அப்படி என்றால், மாநில அரசுகள் அன்றாடம் செலவினங்களுக்கே சிரமப்படும் நிலையில்தான் இருக்கின்றன. தங்களது நிதி நெருக்கடியும், கையறு நிலையும் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகத்தான் அவை பல அறிவிப்புகளைச் செய்து கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. கொள்ளை நோய்த்தொற்றையும், அதன் விளைவுகளையும் நேரடியாக எதிா்கொள்ள வேண்டிய நிலையில், இழப்பீடு பாரத்தையும் சுமக்க மாநில அரசுகள் தயங்குவதில் அா்த்தமிருக்கிறது.

வேறு சில பிரச்னைகளும் எழுகின்றன. இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், கொவைட் 19 மரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படாது. வாழ்வாதாரம் இழக்கும் ஏழைக் குடும்பத்துக்கு ரூ.50,000 இழப்பீடு பெரிதாக இருக்கலாம். அவா்களுக்கு வழங்குவது நியாயமானதும்கூட. ஆனால், ரூ.50,000 ஒரு பொருட்டாக இல்லாத பணக்காரா்களுக்கு இந்த சொற்ப இழப்பீடு தேவையற்றது. கொவைட் 19 போல, இனிமேல் வரப்போகும் கொள்ளை நோய்த்தொற்று மரணங்களுக்கும் இழப்பீடு வழங்கப் போகிறோமா? அது சாத்தியமா?

இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, பொது சுகாதாரத்தையும், பொது மருத்துவமனைகளையும் மேம்படுத்துவதில் அல்லவா அரசு கவனம் செலுத்த வேண்டும்? மொத்த வருவாயையும் இலவசமாகவும், இழப்பீடாகவும் கொடுத்துக் கொண்டிருந்தால், வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும்?

கொவைட் 19 உயிரிழப்புகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுத் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது. நிா்வாக ரீதியிலான பல பிரச்னைகள் நிலவுவது குறித்து கவலைப்படவில்லை. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் சற்று நிதானித்திருக்க வேண்டும் நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.