இன்றைய தேவை...

கோதுமை கையிருப்பு குறைவு: அறுவடை நம்பிக்கை கொள்கை மாற்றங்கள்
இன்றைய தேவை...

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உள்ள கோதுமையின் அளவு 9.7 மில்லியன் டன் மட்டுமே என்பதால் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு என்பது உண்மை. 2017-இல் 9.4 மில்லியன் டன் இருந்தபோது காணப்பட்ட கவலை இப்போது பழங்கதை. இந்த நிலைமை அந்த அளவுக்கு மோசமல்ல.

அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் அறுவடைகள் நம்பிக்கை அளிக்கின்றன. வடமாநிலங்களில் காணப்பட்ட அதிகரித்த குளிர், கோதுமை விளைச்சலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், பிகார் மாநிலங்களில் அமோக விளைச்சலுக்கான வாய்ப்பு தெரிகிறது.

2022-23-இல் அதிகரித்த வெப்பத்தாலும், எதிர்பாராத மழையாலும் பயிர்கள் அழிந்ததுபோல், இந்த முறை நிகழவில்லை. கோதுமை விளையும் மாநிலங்களில் அறுவடைக்கு முந்தைய பருவத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாதது நமது அதிருஷ்டம்.

கங்கை சமவெளிப் பகுதியில், முக்கால்வாசிப் பயிர் முற்றிய நிலையில் தட்ப வெப்பம் பெரிய அளவில் மாற்றம் அடையாமல் மார்ச் மாதம் முழுவதும் சீராக இருந்தது, மகசூலை அதிகரித்திருக்

கிறது. மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மத்திய இந்தியாவில் சில பிரச்னைகள் இருந்தன. ஆனாலும், அநேகமாக அவை எதிர்கொள்ளப்பட்டு அறுவடை தொடங்கிவிட்டது. அந்த மாநிலங்களிலும்கூட நவம்பர், டிசம்பர் குளிர்காலம்தான் சற்று பாதிப்பை ஏற்படுத்தியது.

நடப்பாண்டில் இந்திய உணவுக் கழகம் 30 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக கோதுமை கொள்முதல் செய்யக் கூடும். 30 மில்லியன் டன் கையிருப்பு என்பது, தேவைப்பட்டால் விலைவாசியைக் கட்டுப்படுத்த சந்தைக்கு வழங்கவும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் விநியோகம் செய்யவும் இருக்கிறது. கடந்த ஓராண்டாக இந்த அளவிலான கையிருப்பு குறைந்திருந்தது.

4 ஆண்டுகளாக மார்ச் மாதம் சராசரியாக 25 மில்லியன் டன் இருந்த நிலைமைபோய், 2023 மார்ச் மாதத்தில் இந்திய உணவுக் கழகத்திடம் இருந்த கோதுமை கையிருப்பு 17.7 மில்லியன் டன் மட்டுமே. அதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருந்தால் நடப்பாண்டு கோதுமை விலை கடுமையாக அதிகரிக்கும் ஆபத்து இருந்தது.

முந்தைய 5 ஆண்டுகளில் சராசரியாக 36 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்துகொண்டிருந்த இந்திய உணவுக்

கழகம், 2022-23 நிதியாண்டில் 18.8 மில்லியன் டன் மட்டுமே கொள்முதல் செய்தது. அதனால்தான் கையிருப்பு மிகவும் குறைந்தது எனலாம். ஏன் கொள்முதல் குறைந்தது என்பதற்கு போதுமான விளைச்சல் இல்லாமல் இருந்ததும் காரணம்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விநியோகம் செய்வதற்கு மத்திய அரசுக்கு 27 மில்லியன் டன் கோதுமை ஆண்டுதோறும் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டில் விளைச்சல் குறைந்ததால் கோதுமை விலை கடுமையாக அதிகரித்தபோது, 10 மில்லியன் டன் கோதுமையை சந்தைக்கு திரும்ப அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுதான் குறைந்த அளவு கையிருப்புக்கான காரணம்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. கோதுமை மகசூல் குறைந்தது. அதுமுதல் 2022-23-ஐ தவிர, இந்திய உணவுக் கழகம் 30 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக கொள்முதல் செய்வதை வழக்கமாக்கி இருக்கிறது. 2022-23-இல் மட்டும் 18.8 மில்லியன் டன் அளவில்தான் கொள்முதல் செய்ய முடிந்தது.

இந்த ஆண்டில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மட்டுமே சுமார் 23 மில்லியன் டன் கோதுமை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்ய இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கொள்முதல் தொடங்கிவிட்டது, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகார் மாநிலங்களில் "மண்டி' கட்டமைப்பு முறையாக இல்லாததால், சில பிரச்னைகள் இருந்து வருகின்றன. இந்திய உணவுக் கழகம் அதை எதிர்கொள்ள முனைந்துவருகிறது.

மத்திய அரசு கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 7 % சதவீதம் அதிகரித்து, குவிண்டாலுக்கு ரூ.2,275 என விலை நிர்ணயித்துள்ளது. 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் போர் தொடங்கிய நிலையில் சர்வதேசச் சந்தையில் கோதுமையின் விலை நிலையாக இருப்பது சாதகமான சூழல்.

இந்தியாவில் வேளாண்மை, குறிப்பாக கோதுமை சாகுபடி, பருவநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பம் அதிகரிக்கும்போது, முன்கூட்டியே கதிர் முற்றிவிடுவதும், கடைசி கட்ட வளர்ச்சியின்போது கருகிவிடுவதும் வழக்கம்.

பருவ நிலை மாற்றத்தால் எல்லாப் பயிர்களுமே பாதிப்பை எதிர்கொள்கின்றன. முன்கூட்டியே வரும் கோடைப் பருவமும், தாமதமாகும் குளிர்காலமும் கோதுமை சாகுபடிக்கு பாதிப்புகள் எனலாம்.

2021-22-இல் வட மேற்கு, வடக்கு இந்தியாவில் முன்கூட்டியே கோடை தொடங்கிவிட்டதால், கோதுமை மகசூல் குறைந்தது. இந்த முறை மத்திய இந்தியாவில் காலதாமதமாகத் தொடங்கிய குளிர்காலத்தால் மகசூல் சற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய இந்தியாவில் குறைந்திருக்கும் மகசூலை சராசரிக்கும் அதிகமான கங்கை பாயும் பகுதிகளில் காணப்படும் மகசூல் சமன் செய்யும் என்று நம்பலாம்.

அதிகரித்த பாசனம், புதிய ரக விதைகள் கண்டுபிடிப்பு, அதிக அளவிலான செயற்கை உரங்கள் உள்ளிட்டவை பசுமைப் புரட்சிக்கு வித்திட்டன. இப்போதைய நமது தேவை குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்கள், பருவ நிலையை எதிர்கொள்ளும் அளவிலான விதை ரகங்கள் ஆகியவை. வேளாண் விஞ்ஞானிகளும், அரசின் நீர்ப்பாசனத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com