சுற்றுச்சூழல், உடல் நலன், சமூக நலப் பாதுகாப்பை முன்னிறுத்தி திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், அதன் செயல்பாடுகள் பல்வேறு இடங்களில் திருப்தியாக இல்லை.
சென்னையில் குப்பைகளை அகற்றுவது என்பது, பெருநகர மாநகராட்சி நிர்வாகத்துக்கு என்றுமே சவால் விடுக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் ஆண்டுதோறும் 9,000 டன் நெகிழிக் கழிவுகள் உருவாகின்றன. திடக்கழிவுகள் ஏறத்தாழ 20 லட்சம் டன். தமிழகத்தில் உருவாகும் மொத்தக் கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் மட்டுமே உருவாகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகள் இயந்திரத்தின் உதவியுடன் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
பிற மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் வெற்றி என்பது முழுமையாக இல்லை. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னதாக செயல்பாட்டுக்கு வந்த நிலையில், வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால், பெரும்பாலான நகரங்களில் பொது இடங்களில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தெருக்களுக்கு வந்து, தரம் பிரித்து வைக்கப்படும் குப்பைகளைப் பெற்றுச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் தொடர்கின்றன.
தூய்மைப் பணியாளர்கள் வரும் நேரத்தில் அலுவலகப் பணிக்காக பலரும் சென்றுவிடும் நிலையில், வீடுகளில் அன்றாடம் சேரும் குப்பைகள் அந்தந்தப் பகுதியில் உள்ள காலியிடங்கள், மனைகளில் தூக்கி வீசப்படுகின்றன. இது அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. அவை முறையாக அள்ளப்படாமல் அங்கேயே தீவைத்து எரிக்கப்படுகின்றன.
நாளுக்குநாள் விரிவாக்கம் பெற்று வரும் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிக்காக போதிய பணியாளர்கள் இல்லை என்பதால், குப்பைகள் தினமும் சேகரிக்கப்படுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. பேரூராட்சி, ஊராட்சிகளில் புதிதாக உருவாகும் குடியிருப்புகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் இல்லாத ஊராட்சி நிர்வாகங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குப்பைகளைக் கொட்டி அவை எரிக்கப்படுகின்றன. இதனால், காற்று மாசு ஏற்படுகிறது. நகர்ப்புறங்களில் ஆண்டுக்கணக்கில் செயல்படும் குப்பைக் கிடங்குகளால், அதன் அருகேயுள்ள விரிவாக்கப் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது.
பழைய கட்டடங்களை இடித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின்போது இடிபாடுக் கழிவுகள், மின்சாதனக் கழிவுகள் போன்றவை லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு நகருக்கு வெளியேயுள்ள புறம்போக்கு நிலங்களிலும், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளின் ஓரங்களிலும் கொட்டப்படுகின்றன. இதனால், நீர்நிலைகள் மாசுபடுவதுடன், புறம்போக்கு நிலங்கள் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.
இதற்குத் தீர்வு காணும் வகையில், சென்னையில் கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதற்காக 15 இடங்களை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதுடன், "1913' என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதி, "நம்ம சென்னை' என்கிற கைப்பேசி செயலியிலும் பதிவு செய்து கட்டுமான இடிபாடுகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் கொட்டப்படும் கட்டுமான இடிபாடுகளுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்குகளில் இருந்து கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மணல் உற்பத்தியையும் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் திடக்கழிவுகள் மேலாண்மைக்காக தூய்மை இயக்கம் தொடங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார். முதல்வர் தலைமையில் 20 பேர் அடங்கிய தூய்மை இயக்க நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, கொள்கை வகுப்பது, நிதி திரட்டுவது, பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, இயக்கச் செயல்பாடுகள் ஆகியவை கண்காணிக்கப்பட உள்ளன.
தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் 11 பேர் அடங்கிய மாநில அளவிலான செயற்குழு அமைக்கப்படும். இதே போன்று மாவட்டம், வட்டார அளவில் குழுக்கள் அமைத்து, இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.
மத்திய அரசின், "தூய்மை இந்தியா' திட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாகப் பணியாற்றியவர்களை இதில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் பணிகளுக்கு ரூ.46 கோடி வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு ஆரம்ப நிலை நிர்வாக அமைப்பை ஏற்படுத்தவும், மனிதவள ஒருங்கிணைப்புக்காகவும் ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் "தூய்மை இந்தியா' இயக்கத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலும் தூய்மை இயக்கம் தொடங்கி செயல்படுத்தப்பட உள்ளது வரவேற்கத்தக்கது; நகரப் பகுதிகளை பிரதானமாகக் கொண்டு செயல்படாமல், ஊரகப் பகுதிகளுக்கு இந்தத் தூய்மை இயக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
13 இடங்களில் வெய்யில் சதம்: தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்பு

11 இடங்களில் வெயில் சதம்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை தேரோட்டம்! 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு!

தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்: மு. வீரபாண்டியன்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


