Gujarat Bridge Collapse
இடிந்த பாலம்EPS

‘கட்டுமான’ அவமானம்!

கடந்த ஒரு வாரமாக கேள்விப்படும் விபத்துகள் குறித்த செய்திகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதைப் பற்றி...
Published on

ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்த ஒரு வாரமாக கேள்விப்படும் விபத்துகள் குறித்த செய்திகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன.

கேரள மாநிலம், கோட்டயத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவர் இடிந்து விழுந்ததில் தொடங்கிய அவலம் ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு மாநிலங்களில் அரங்கேறியிருக்கிறது. கோட்டயம் மருத்துவமனை விபத்து, தமிழகத்தின் கடலூர் செம்மங்குப்பம் கடவுப்பாதை விபத்து, குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்று தொடர்கதையாகி உள்ளன விபத்துகள்.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் அருகே டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு 18 டேங்கர்கள் தீக்கிரையான விபத்து; கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கவிழ்ந்தது;, குஜராத் மாநிலத்தில் அகமதாபாதிலிருந்து கிளம்பிய விமானம் விழுந்து சிதறிய விபத்து-இவையும் பட்டியலில் இணைகின்றன.

விபத்துகள் நிகழ்வது என்பது எதிர்பாராமல் நடப்பவை என்றாலும்கூட அவற்றில் பெரும்பாலானவை முறையான கண்காணிப்பு இருந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும். விமான விபத்தும், கப்பல் விபத்தும் மனிதத் தவறுகளால் மட்டுமே நிகழ்ந்தவையாக இருக்க முடியாது.

டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு தீப்பிடித்ததும்கூட மனித சக்தியை மீறிய செயலென்று மன்னித்துவிடலாம். ஆனால், ஏனைய விபத்துகளை அப்படிப் புறந்தள்ள முடியவில்லை.

கோட்டயம் மருத்துவமனைக் கட்டடத்தின் பழைமையான அறுவை சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிப்பறைக் கட்டடம்தான் இடிந்து தகர்ந்தது. இந்தக் கட்டடம் பாதுகாப்பற்றது என்று பொதுப் பணித் துறை 12 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை

தாக்கல் செய்திருக்கிறது. அந்தக் கட்டடத்தில் ரூ.144 கோடியில் புதிய அறுவை சிகிச்சைக் கட்டடம் திறப்பு விழாவுக்குத் தயாராக இருக்கும்போது, பழைய கட்டடம் ஆங்காங்கே இடிந்து விழத்தொடங்கியிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கடவுப்பாதை விபத்தைப் பொருத்தவரை விரிவான விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை. ரயில் கடவுப்பாதைகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் விபத்துக்குள்ளான காலம் மலையேறிவிட்டது என்பது என்னவோ உண்மை.

கண்காணிப்பில்லாத கடவுப்பாதைகள் அறவே இல்லை என்கிற அளவுக்கு கடந்த 75 ஆண்டுகளில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட, ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படாத கடவுப்பாதைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

சமீபத்திய குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த விபத்து எதிர்பாராதது மட்டுமல்ல; அதிர்ச்சி அளிப்பதும்கூட. குஜராத்தின் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களுக்கிடையே மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 23 அடி உயரமான தூண்களுடன் 1985-ஆம் ஆண்டு பாலம் அமைக்கப்பட்டது ஏறத்தாழ ஒரு கி.மீ. நீளமான பாலம்.

அந்தப் பாலத்தின் இரண்டு தூண்களுக்கு இடையே 15 மீட்டர் நீளமுள்ள பகுதி ஜூலை 9-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்ததில் அதன் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் மாதம் மகாராஷ்டிர மாநிலம், இந்திரயானி நதியின் மீதான நடைபாதைப் பாலம் பாரம் தாங்காமல் தகர்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்; மே மாதம் ஒடிஸô மாநிலம் கட்டக்கில் கச்சஜோதி நதியின் மீது நடைபெற்ற பாலக் கட்டுமானப் பணி தொழிலாளர்கள் நான்கு பேர் கான்கிரீட் தளம் விழுந்ததில் உயிரிழந்தனர்.

2024 -இல் மும்பை காட்கோபர் விளம்பரப் பதாகை விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 2023-இல் மிúஸôரத்தில் ரயில் மேம்பால கட்டுமானப் பணி நடக்கும்போது 26 தொழிலாளர்கள்; உத்தர பிரதேசம் லக்னௌவில் விளம்பரப் பதாகை விழுந்து 2 பெண்கள்; பெங்களூரு மெட்ரோ கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்து தாயும் சேயும்; 2022 -இல் குஜராத் மாநிலம் மோர்பி தொங்குபால விபத்தில் 140 பேர்- இவையல்லாம் பொதுக் கட்டுமானப் பராமரிப்பு இன்மையால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான விபத்துகளில் ஒருசில மட்டுமே.

பாலங்கள், சாலைகள், மருத்துவமனைகள், ரயில் தண்டவாளங்கள் ஆகியவை அந்தந்தக் காலகட்டங்களில் அன்றைய மக்கள்தொகைக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ற விதத்தில் அமைக்கப்படுகின்றன. ஓரளவு தொலைநோக்குப் பார்வையுடன் குறைந்தது ஒரு நூற்றாண்டுக்காவது ஸ்திரத்தன்மையுடன் அமைய வேண்டும் என்கிற முன்னெச்சரிக்கையுடன் உருவாக்கப்படுபவை.

மக்கள்தொகையும் அதிகரித்து, பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்போது அதற்கேற்றாற் போல கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும் அல்லது புதிய கட்டுமானம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைச் செய்யாததன் விளைவுதான் மேலே குறிப்பிட்ட பெரும்பாலான விபத்துகள்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பாலமும், பொதுப் பயன்பாட்டிலுள்ள கட்டடங்களும் ஆண்டுதோறும் அவற்றின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். புதிய கட்டடங்களுக்கு நிதி ஒதுக்குவது ஆட்சியாளர்களுக்கு விளம்பரத்துக்குப் பயன்படலாம். பழைய கட்டுமானம் இடிந்து சரிவது, அவர்களது செல்வாக்குச் சரிவுக்குக் காரணமாகும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com