ஜாதியம் எனும் தீநுண்மி

உண்மையான சமூக நீதி என்ன என்பதைப் பற்றி...
மேல்பாதி அருள்மிகு திரெளபதியம்மன் கோயில் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
மேல்பாதி அருள்மிகு திரெளபதியம்மன் கோயில் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
Published on
Updated on
2 min read

கோயில், கிணறு, மயானச் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்து சமுதாயத்தினருக்குமானதாக இருப்பதுதான் உண்மையான சமூக நீதியாகும். முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் நடைபெறும் ஒரு சில நிகழ்வுகளும், நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளும் சமூக ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தி உள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி அய்யனார் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிறுவப்பட்ட சுவாமி சிலைகளை ஒரு தரப்பினர் இடித்துவிட்டனர். மேலும், கோயில் கதவுக்கு வெளியே இருந்தே வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த் திருவிழாவில் பங்கேற்கவும் கோயிலுக்குள் சென்று வழிபடவும் அவர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

"கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். ஜாதி கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. ஜாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிப்பது அவமதிப்பாகவே கருதப்படும். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் இதுபோன்ற பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதைத் தடுப்பவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்று மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜூலை 17-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதுபோன்ற வழக்கு விதிவிலக்கானது என்று நினைக்க வேண்டாம். கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் வழிபடுவது குறித்து இரு சமுதாயத்தினர் இடையேயான பிரச்னை தொடர்பான வழக்கு 2018 முதல் நிலுவையில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக அந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெற்றாலும் எந்த சமுதாயத்தினரும் வழிபட அனுமதிக்கப்படவில்லை.

இதுதொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஜாதியின் பெயரால் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. யாரையும் அனுமதிக்காததுதான் அமைதியை நிலைநாட்ட ஒரே வழி என்று காவல் துறை எண்ணுவது தவறானது.

உரிமைகளை மறுப்பதன் மூலம் ஏற்படுத்தப்படும் அமைதி உண்மையானது அல்ல. அது சட்டத்தை மீறுபவர்களிடம் அரசு சரணடைவதாகும்' என்று நீதிபதி பி.புகழேந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்தத் தீர்ப்பை அடுத்து, அனைத்து ஜாதியினரும் மாரியம்மன் கோயிலில் வழிபடலாம் என விளம்பரப் பதாகை வைத்தவுடன் ஒரு தரப்பினர் கோயில் முன் கடந்த ஜூலை 17-ஆம் தேதி திரண்டு பதாகையைக் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெüபதி அம்மன் கோயிலும் கடந்த 2023 ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் பூட்டி "சீல்' வைக்கப்பட்டது. பெரும் சட்டப் போராட்டம், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்.17-ஆம் தேதி இந்தக் கோயில் திறக்கப்பட்டது.

"நாங்கள் கட்டிய கோயிலில் வழிபாட்டு உரிமையை அலுவலர்கள் எப்படி முடிவு செய்யலாம்? நாங்கள் புதிய கோயில் கட்டிக் கொள்வோம்' என்று மற்றொரு சமுதாயத்தினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோயிலில் வழிபடுவது ஒருபுறம் பிரச்னை என்றால், பொது நீர்நிலையில் தண்ணீர் எடுப்பதும்கூட சில இடங்களில் பிரச்னையாக உள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் பிற சமுதாய மக்கள் வசிக்கும் குடிநீர்க் குழாயில் இருந்து சிறிது தண்ணீர் பெறுவதுகூட சிரமமாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு பெண் முறையிட்டுள்ளார்.

சில நேரங்களில் வழிபாட்டு மோதல் வன்முறையில் முடிகிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த மே 5}ஆம் தேதி நடைபெற்றபோது மோதல் ஏற்பட்டு இரு சமுதாயத்தினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் 20 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து குடிசைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

சுவாமி விவேகானந்தர், மகாராஷ்டிரத்தின் ஜோதிபா புலே, அவரது மனைவி சாவித்ரி பாய் புலே, சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர், மகாத்மா காந்தி, கேரளத்தில் நாராயண குரு போன்று எண்ணற்றோர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்து மாற்றத்துக்காகப் பாடுபட்டனர். அதன் காரணமாக ஓரளவு மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. நகரங்களில் ஓரளவுக்கு இந்தப் பாகுபாடு காணப்படுவதில்லை. என்றாலும், கிராமங்களில் கோயிலில் வழிபடுவது, பொது நீர்நிலையில் தண்ணீர் பிடிப்பது போன்றவை இன்னமும் சவாலாகவே இருப்பதுடன் சில இடங்களில் இரட்டைக் குவளை (டம்ளர்) முறையும் வழக்கத்தில் உள்ளது.

ஜாதி பிரச்னை காரணமாக சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் தேரோட்டம் 17 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் கடந்த 2024}இல் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதேபோன்ற அணுகுமுறை, பிரச்னை உள்ள இடங்களில் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜாதியத்தை வைத்துக்கொண்டு பெரியார் மண் என்று நாம் பெருமை பேசுவது மிகப் பெரிய போலித்தனம். சட்டங்கள் இயற்றப்படுவதாலும் நீதிமன்றங்கள் உத்தரவிடுவதாலும் முழுமையான மாற்றம் ஏற்பட்டுவிடாது. மக்களிடம் மாற்றம் ஏற்படாமல் சமுதாய மாற்றம் சாத்தியமாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com